மேடையிலேயே சூரிக்கு பாடம் நடத்திய நிக்கி கல்ராணி!

பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் வழங்கும் எழில் மாறன் புரோடெக்ஷன்ஸ் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் நாயகன் விஷ்ணு விஷால், நாயகி நிக்கி கல்ராணி, இயக்குநர் எழில் மாறன், நடிகர்கள் சூரி, ரவி மரியா, இசையமைப்பாளர் சி.சத்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்..

இயக்குநர் எழில் மாறன் பேசுகையில், “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ எனக்கும், நாயகன் விஷ்ணு விஷாலுக்கும், இசையமைப்பாளர் சத்யாவிற்கும் 1௦-வது திரைப்படம். நான் இப்படத்தின் கதையை நாயகன் விஷ்ணு விஷாலிடம் கூறியதும், கதை பிடித்த காரணத்தால் தானே தயாரிப்பதாக முன்வந்து கூறினார். அவருடைய தயாரிப்பு ஐடியாக்கள் மிகவும் புதிதாக இருந்தன. விஷ்ணு விஷாலின் தனிச்சிறப்பு அவருடைய ப்ரோமோஷன் ஐடியாக்கள் எனலாம். இன்றைய காலகட்டத்தில் படத்தை தயாரிப்பதைவிட அதை விளம்பரபடுத்துவது தான் கடினமான ஒன்று. படத்தின் நாயகியான நிக்கி கல்ராணியை விஜய் டிவி மகேந்திரன் சார் தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது. படத்தில் அவர் பெண் போலீசாக நடித்து சண்டை காட்சிகளில் கலக்கியுள்ளார்” என்றார்.

இயக்குனரும், நடிகருமான ரவி மரியா பேசுகையில், “படத்திற்கு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்று பெயர் வைத்ததற்கு பதிலாக ‘இறங்கி  அடிச்சா எப்படி இருக்கும்’ என்று தலைப்பு வைத்திருக்கலாம். ஏனென்றால் படத்தில் அனைவரும் அவ்வளவு தூரம் இறங்கி அடித்துள்ளனர். நான் இயக்குநராக பெரிய அளவில் மின்னவில்லை என்றாலும், நடிகனாக சாதிக்க வேண்டும் என்று வெறியோடு இருக்கிறேன். அதனால் தான் தேர்ந்தெடுத்து  ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறேன். எப்போதும் இயக்குநர் எழில் எனக்கு மிக சிறந்த கதாபாத்திரங்களையே கொடுத்து வருகிறார். இப்படத்திலும் அது தொடர்கிறது” என்றார்.

இசையமைப்பாளர் சத்யா பேசுகையில் “நான் முதன்முறையாக இப்படத்தில் இயக்குநர் எழிலுடன் இணைகிறேன். நான் எப்போதும் ஒரு படத்திற்கு பின்னணி இசையமைக்கும்போது, முழு படத்தையும் பார்த்துவிட்டு இசையமைக்க மாட்டேன். ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு பகுதியாக பார்த்து இசையமைப்பேன். ஆனால் இந்த படத்தை முழுவதும் பார்த்துவிட்டு தான் இசையமைத்தேன். காரணம் படத்தில் சூரியின் காமெடி பெரிதும் என்னை கவர்ந்தது” என்றார்.

நடிகர் சூரி பேசுகையில், ”நானும், விஷ்ணு விஷாலும் முதன்முதலாக ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது முதல் எங்கள் நட்பு தொடர்கிறது. எனக்கு எந்தவொரு பிரச்சனை என்றாலும், நான் உடனே போன் செய்வது விஷ்ணுவுக்குத் தான். அவர் செய்துள்ள உதவிகளை மறக்க முடியாது. ‘வென்ணிலா கபடிக்குழு’ படத்தில் நடித்த நாட்களில், இரவு இரண்டு மணிக்கு எனக்கு போன் பண்ணி, டயலாக் சொல்லிக் காட்டி, ”மதுரை ஸ்லாங் எனக்கு சரியா வருதா?” என்று கேட்பார். அந்த அக்கறை  இப்போதும் அவரிடம் அப்படியே இருக்கிறது.

“நிக்கி கல்யாணி இருக்கிறதே… அது பேச ஆரம்பித்துவிட்டால் வாயை மூடாது. நான்- ஸ்டாப் பேச்சுதான்…” என்று சூரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தன் பெயரை சூரி தவறாகச் சொல்லுகிறார் என பதறிப்போன நிக்கி கல்ராணி, மைக் அருகே ஓடிவந்து, “நிக்கி கல்யாணி இல்லே, சூரி அண்ணா! நிக்கி கல்ராணி” என்று சொல்ல, சூரி புரிந்துகொள்ளாமல், “நிக்கி கல்யாணி” என்று மீண்டும் சொல்ல, நிக்கி கல்ராணி விடுவதாக இல்லை. “கல்யாணி இல்லே, கல்ராணி” என்று பாடம் நடத்துவதுபோல் திரும்பத் திரும்ப சொல்லிக்கொடுத்து, சூரி சரியாக சொன்ன பிறகுதான் அங்கிருந்து நகர்ந்தார்.

0a1e

பேச்சை தொடர்ந்த சூரி, “இப்படித்தாங்க… இந்த புள்ள ஷூட்டிங்குக்கு வந்து இறங்கும்போதே “ஹாய்… பூய்… தஸ்… புஸ்…“ன்னு பேசிக்கிட்டேதான் வரும். போலீஸ் வேஷம் வேறயா…! என்னை, விஷ்ணுவைன்னு எல்லாரையும் அடி பின்னி எடுத்திரும். இதுகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் சுறுசுறுப்பு. நைட் 3 மணிக்குக்கூட சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பா நடிக்கும் நிக்கி கல்யாணி… ச்சேய்… கல்ராணி…!” என்று முடித்தார் சூரி.

நாயகன் விஷ்ணு விஷால் பேசுகையில், “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படம் எனக்கு மட்டும் தான் பத்தாவது திரைப்படம் என்று நினைத்தேன் ஆனால் நான் இதை பற்றி எழில் சாரிடம் கூறும் நேரத்தில் தான் அவருக்கும் இது பத்தாவது படம் என்று தெரியவந்தது. அதன்பின் இசை வெளியீட்டு நேரத்தில் தான் இசையமைப்பாளர் சி.சத்யாவிற்கும் இது பத்தாவது படம் என்று தெரியவந்தது. ‘நீர்பறவை’ படத்திற்குப்பின் நான் படங்களை தேர்வு செய்து தான் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல் இதுவரை எல்லா படங்களையும் தேர்வு செய்து தான் நடித்து வருகிறேன். இதுவும் நான் யோசித்து தேர்வு செய்து நடிக்கும் கதைதான். படத்தில் ஒரு பாடலுக்கு கலர் கலரான உடைகளை எனக்கு படத்தின் உடை வடிவமைப்பாளர் ஜாய் அளித்தார். இது போன்ற ஆடைகளை இப்படத்தில் தான் அணிகிறேன். முதலில் யோசித்த எனக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.