பார்ப்பனியத்தை நிறுவத் துடிக்கும் படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’!

தற்பொழுது தமிழகத்தில் நிலவிவரும் நூதன ட்ரெண்டு என்ன? உழைக்கும் மக்களின் அசைவ உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கும், சிறுதெய்வ வழிபாட்டை சமஸ்கிருத பார்ப்பனமயமாக்குவதற்கும் யதார்த்த பாணியில் பல திரைப்படங்கள் எடுப்பதுதான்.

அது என்ன யதார்த்த பாணி?

இயக்குநராக அறிமுகமாக இருக்கும் சுரேஷ் சங்கய்யா ‘ஒரு கிடாயின் கருணை மனு’ எனும் படத்தை ஈராஸ் கார்ப்பரேட் தயாரிப்பு கம்பெனியின் முதலீட்டில் இயக்கியிருக்கிறார். படம் ரிலீசாகவில்லை. புரொமோசனுக்காக ‘தமிழ் தி-இந்து’ பத்திரிகை சுரேஷ் சங்கையாவின் நேர்காணலை வெளியிட்டிருக்கிறது.

இதில் பேட்டியாளர், “ஆட்டுக்கிடாயை மையமாகக் கொண்ட கதை வித்தியாசமாக இருக்கிறதே” என்று முதல் கேள்வியைக் கேட்கும்பொழுது, இயக்குநர்,  “இப்படத்தின் கதை எனது இலட்சியம்” என்கிறார்.

“நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராமத்து வாழ்வில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயயான பிணைப்பு உணர்வுபூர்வமானது. தங்கள் குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைத்து வளர்த்து அவர்களைப் பாராட்டி சீராட்டுகிறார்களோ, அப்படித்தான் தங்கள் வீட்டு விலங்குகள் மீதும் அக்கறை காட்டுவார்கள்.

“கால்நடைகளும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும். கண்கள் வழியாகவும் உடல்மொழி அசைவுகள் வழியாகவும் தங்கள் பசியையும் வலியையும் கூறும். இந்தப் பிணைப்பு வாழ்க்கை, வழிபாடு என்று வருகிறபோது முரணாக மாறிவிடுகிறது. கோயில் திருவிழாக்களில் ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுப்பதும் வழக்கமானதாகவே இருக்கிறது.

“உயிருக்கு உயிராக வளர்த்து இப்படி பலி கொடுப்பது கிராம மக்களின் சம்பிரதாயங்களில் முக்கியமானதாக இருப்பதைக் கண்டு சிறுவயது முதலே மனதுக்குள் புழுங்கி வந்தவன் நான். பலி என்பது வழிபாடாகவும், சடங்காகவும் இருப்பதை இனிவரும் தலைமுறைகள் களைந்தெறிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இக்கதையை எழுதினேன். என்னைப் போன்ற ஒரு புதிய இயக்குநருக்கு ஈராஸ் போன்ற பெரிய தயாரிப்பாளர் கிடைப்பது அரிது.” (மனிதர்களை பேச வைக்கும் ஆடு: சுரேஷ் சங்கய்யா நேர்காணல் – ‘தி இந்து தமிழ்’, 24-06-2016)

இயக்குநரின் மனப்புழுக்கத்தை ஒன்லைனில் சொல்ல வேண்டுமென்றால், ஜெயலலிதாவின் கிடாவெட்டுத் தடைச் சட்டம் தமிழகத்து குலதெய்வ கோயில்களில் மீண்டும் வரவேண்டும். இதற்கு பார்ப்பன அடிமையாக போயஸ் தோட்டத்திற்கு போன் போட்டுச் சொன்னாலே போதுமானது என்ற எளிமையை, கலைநயத்தால் வெல்ல வேண்டும் என்று இக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர்.

இதில் இயக்குநரின் யதார்த்த பாணி பிரச்சாரம்தான் கவனிக்கதக்கது. உயிருக்கு உயிராக வளர்த்த கிடாயை, வழிபாடு என்பதன் பெயரில் எப்படி பலிகொடுக்கலாம் என்கிறார்.

இயக்குநர் சுரேஷ் சங்கய்யா மட்டுமல்ல; இதுவரை, சிறுதெய்வ வழிபாட்டில் ஆடு கோழி பலியிட்டு அசைவ உணவு உண்ணும் பழக்கத்தை பல்வேறு நூதனமான வழிகளில் கரித்துக் கொட்டி தனது மேலாண்மையை நிறுவத் துடித்திருக்கிறது பார்ப்பனக் கும்பல். அவற்றின் உத்திகள் இவ்வாறு இருந்தன:

1. “அசைவ உணவு காமவெறியைக் கிளப்பும். அதை உண்பவர்கள் அரக்க குணம் கொண்ட இழிவானவர்கள்” என்று ‘தினமணி’ வைத்தி அடித்து சத்தியம் செய்து தலையங்கம் எழுதுவார். காஞ்சி சங்கராச்சாரி, தேவநாதன், நித்யானந்தாவின் சைவ லீலைகள் அதிகரித்துக்கொண்டு போவது ஒரு பக்கம்; இதை மறைத்து “கருவாடு நாறுகிறது” என்று மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு புகார் படிப்பது இன்னொரு பக்கம் என்று இந்தப் பிரச்சாரம் போய்க்கொண்டிருக்கிறது.

2. வள்ளலாரைப் போன்று ஜீவகாருண்யம் பேசுவது இரண்டாவது உத்தி. ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், வள்ளலார் அன்பை வெஜிடபிள்ஸுகளுக்கும் சேர்த்து போதிக்கிறார். வள்ளலாரைப் போன்று ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று மேற்கு வங்கப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, எந்த சாம்பார் வடையும் சொல்வதில்லை. தங்கள் மேலாண்மையை நிரூபிக்க மீனை ‘தண்ணீர் பூக்கள்’, ‘கடல் பூக்கள்’ என்று சொல்கிறார்கள். பூக்களை சூத்திரன் நுகர்ந்தாலே தீட்டு என்று பதைக்கிற இந்து பார்ப்பனியம், பார்ப்பனர்களை மட்டும் மீன் மாமிசத்தை ‘பூக்கள்’ என்று புசிப்பதற்கு வழிவகை செய்கிறது.

‘மாமிசங்களுக்காக விலங்குகளைக் கொல்கிறார்களே, அய்யோ பாவம்’ என்று கதறுபவர்கள், இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 25, பார்ப்பனர்களுக்கு மட்டும் மாமிசம் புசிக்க விலங்குகளைக் கொல்லும் உரிமையை எக்ஸ்குளூசிவாக கொடுத்திருக்கிறது என்பதை பார்க்க மறுக்கிறார்கள்.

இதை தாண்டித்தான் இயக்குநர் சுரேஷ் சங்கைய்யாவின் மூன்றாவது பாணியிலான பிரச்சாரம் வருகிறது. மனிதனுக்கும் -விலங்குகளுக்கும் உள்ள பிணைப்பு, பந்தம், பாசம் என்று இன்னும் வலுவான கண்ணியைப் பின்னியிருக்கிறார். அவ்வளவு லேசாக இதை அறுக்க முடியாது என்பதால் “ஒரு கிடாயின் கருணை மனு” திரைப்படம் முழு நீள நகைச்சுவை படமாக வெளிவர இருக்கிறது. கண்டிப்பாக பார்வையாளர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கப் போவது உறுதி என்று சொல்லியிருக்கிறார்.

யக்குநர் சுரேஷ் சங்கைய்யாவிற்கு இருந்த அதே இலட்சியத்தைத்தான் 2014-ல் வெளிவந்த ‘சைவம்’ படமும் பேசியது. இயக்குநர் ஏ.எல்.விஜய் குழந்தை சாராவையும், பலியிடப்போகும் சேவலையும் வைத்து சிறுதெய்வ வழிபாட்டில் பார்ப்பனியத்தை திணிக்கும் வேலையைச் செய்தார். இந்தப் படத்தில் குழந்தை ஒரு வெடிகுண்டு போல பயன்படுத்தப்பட்டிருக்கும்.

குழந்தை சாரா, பலியிடப்போகும் சேவல் மீது வைக்கிற பாசம் ஒரு பக்கம் இருக்கும். மறுபக்கத்தில் உறவினர்கள் எல்லாம் குழந்தை சாராவை முன்னிட்டு ஒன்று சேரும் காட்சி வைக்கப்பட்டிருக்கும். இறுதியில் சாராவுடன் சேர்ந்து ஒட்டுமொத்த குடும்பமும் சேவலை வெட்டும் காட்சியை மிரட்சியுடன் பார்ப்பதாகவும் படம் இருக்கும். இதன் கிளைமாக்ஸை பார்க்காதவர்கள் இங்கு பார்த்துவிடுங்கள்:

‘சைவம்’ படத்திற்கு திரை விமர்சனம் எழுதிய ‘தி இந்து’ விமர்சனக் குழு, விமர்சனத்தின் முடிவுரையில், “அசைவத்துக்கு எதிரான படம், சைவத்தை ஆதரிக்கும் படம் என்ற முன் அனுமானங்கள் தேவையற்றவை. இது குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம்” என்று திறனாய்வின் பேரில் வாசகர்களை மிரட்டியது.

ஆனால், இதே விமர்சனக் கட்டுரையின் உள்ளே ‘இந்து’ விமர்சனக் குழு, “சேவலைத் தேடும்போது ஏற்படும் பரபரப்பு சேவலை பலி கொடுக்க பூசாரி கத்தியை ஓங்கும்போது ஏற்படவில்லை” என்று எழுதியது. அதாவது, சேவலை பலி கொடுக்கிற காட்சியில் அழுத்தமாக பரபரப்பாக நடிக்காமல் ‘சொதப்பிட்டியே ரங்கா’ என்று மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு எரிச்சல் படுகிறது.

‘சைவம்’ படத்தில் குழந்தை – விலங்கு எனும் பிணைப்பை இன்னும் சற்று விரிவாக்கி, விலங்கின் துன்பம் என்ற கோணத்தை தன் பேட்டியில் விளக்குகிறார் இயக்குநர் சங்கய்யா.

அருப்புக்கோட்டையை சுற்றிய கரிசல் மண் இப்படத்திற்கான களம் என்று அறிவிக்கின்றனர் இப்படத்தின் குழுவினர். கரிசல் மண் பூமியில் வாழ்ந்த ஒரு கிராமத்து இளைஞன் ஆட்டுக்கிடாயுடன், தான் கொண்டிருக்கும் பாசம் காரணமாக குல தெய்வ வழிபாட்டில் கிடா வெட்டப்படுவதை தடுக்க முயற்சிக்கிறான் எனும் நோக்கம் எந்தளவிற்கு நேர்மையானது? இதில் அம்பலப்படுத்த வேண்டிய பொய் எது? என்பதைப் பார்ப்போம்.

ர்.எஸ்.எஸ் கும்பலுக்கு மாட்டுக்கறி அரசியல் என்பது இந்துக்களை இசுலாமியர்களுக்கு எதிராக நிறுத்தவும், மாட்டுக்கறி உண்ணும் சூத்திர – தாழ்த்தப்பட்டவர்களை கொலை செய்து பார்ப்பனியத்தைத் தூய்மைப்படுத்தவும் துருப்புச் சீட்டாக பயன்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதன்முதலாக ராஜஸ்தானில் ‘பசு நல வாரியம்’ என்று தனியாக அமைச்சகம் மூலம் கோச்சார்-துங்கபத்ரா ஆற்றுப்படுகையில் பசு பாதுகாப்பு மையத்தை அமைத்தது பிஜேபி பார்ப்பன பரிவாரங்கள். ‘கோமாதா புனிதமானது’ என்று விவசாயிகளை பால்மடி வற்றிய மாடுகளை விற்கவிடாமல் பிடுங்கிக் கொண்டுபோய் கோசாலையில் சேர்த்தார்கள்.  ஆனால் இங்கு பசுக்களுக்கு அன்ன ஆகாரம், தண்ணீர் ஏதும் கொடுக்காமல் நாளொன்றுக்கு ஐந்து முதல் பத்து பசுக்களைக் கொன்றிருக்கிறது பி.ஜே.பி. இதற்கு ஆதாரமாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த புகைப்படத்தை வாசகர்கள் முன் வைக்கிறோம்.

0a2f

வாயில் நுரைதள்ளி செத்துக்கிடக்கும் இந்த கோமாதாக்கள், ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலின் மாட்டு அரசியல், பார்ப்பன மேலாண்மைக்கானதேயன்றி பசுக்களின் நலனுக்கானதல்ல என்பதை நிரூபிக்கிறது. (நன்றி: ‘தி இந்து’ ஆங்கில நாளேடு  – “Cows dying in Rajasthan despite special Ministry to protect them)

மாறாக, இந்நாட்டின் உழைக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது சிறு உற்பத்திக்கு பயன்படும் கால்நடைகளை இயக்குநர் சொல்வது போல தங்கள் பிள்ளை போல பார்த்துக் கொள்கின்றனர். சாம்பிராணி புகை போடுகின்றனர். பால் மடி வற்றி, உழவுக்கு ஆகாது எனும் பொழுது மேற்கொண்டு மாட்டைப் பராமரிக்க முடியாத விவசாயிகள் மாடுகளை விற்கின்றனர் – அவை கறிக்கடைக்குத்தான் போகிறது என்றாலும். ஏனெனில் இதுதான் இயற்கையான பொருளாதார சங்கிலியாகவும், புது கால்நடைகளை அபிவிருத்தி செய்வதற்கான வழியாகவும் இருக்கிறது. இந்த சுழற்சியை ‘கோமாதா அரசியல்’ பேசி நிறுத்தினால் விவசாயியும் கால்நடையும் என இருவருமே செத்துப்போகிறார்கள்.

சங்கய்யா எடுத்திருக்கும் கதைக்களம் ‘ஆட்டுக் கறி அரசியலை’ பற்றியது.

‘ஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும் பார்ப்பனியம்’ எனும் தலைப்பில் வடஇந்தியாவின் பார்ப்பனக் கொடுங்கோன்மையை சென்ற வருடம் வினவில் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். வட இந்தியாவில் பெரும்பாலான ஆடு வளர்ப்பவர்கள் ஆட்டிறைச்சி உண்பதிலிருந்து பார்ப்பனிய மேலாண்மை காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இந்த நிலைமை உருவாக்குவதற்கு குலதெய்வ வழிபாடு பார்ப்பனமயமாக்கப்பட வேண்டும் என்ற முன்நிபந்தனையை படம் தன் கருவாகவே கொண்டிருக்கிறது.

எனவே, சங்கய்யா முன்வைக்கும் விலங்குகளின் மீதான பாசத்தை விளக்குவதற்கு நிறைய ஸ்கோப் இருப்பது என்பது பலியிடலை எதிர்ப்பதற்கு பயன்படுத்தும் கருவிதானே ஒழிய வேறெதுவும் இல்லை.

கிடாயை பலிகொடுப்பது கிராமங்களில் அசைவம் உண்ணும் நடைமுறையின் வழக்கம் தான். கிராமங்களில் ‘கூறுக்கறி’ என்று கூறுவார்கள். ஊரில் உள்ள சலவைத்தொழிலாளிகளுக்கு ஆட்டுத் தலை கொடுப்பதை பொறுக்காத ஆதிக்க சாதிகள் அவர்களை இழிவுபடுத்தும் வண்ணம் ‘வண்ணான் ஆட்டுத் தலைக்கு பறந்தாப்ல பறக்காதே’ என்று சொலவடையையே புழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். இதுக்கெல்லாம் மனம் புழுங்காத இயக்குநர் ஆடு சாவதற்காக புழுங்குகிறார் என்றால் இதைவிட அயோக்கியத்தனம் ஒன்று இருக்க முடியுமா?

இது தவிர, கிடாய் பலியை கூட்டாக அல்லாமல் ஒருவர் தனிநபராக கொடுக்கிறார் என்றால் அது வசதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே சாத்தியம். அங்கும் அது உணவுக்காகத்தான். இது தவிர கிடாய் வளர்க்கும் குடியானவர்கள், தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற மேலப்பாளையம் ஆட்டுச் சந்தைக்கு விற்பதற்காக கொண்டுவருகின்றனர். மேலும் சினை பிடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இதைத்தாண்டி, ஊரில் திரியும் செல்லக் கிடாய்கள் ஜமீன்தார் வீட்டுப் பிள்ளை கணக்காக அழிச்சாட்டியம் செய்வதற்கும், ஆண்ட பரம்பரையின் சாதிப்பெருமை பேசுவதற்கும்தான் பயன்பட்டு வருகிறது.

அப்படியானால், ‘ஆடோ, மாடோ, கோழியோ செல்லப்பிராணியாக இருக்கும் பட்சத்தில் மட்டும் பலியிடாதீர்கள்’ என்று படம் எடுத்தால், திரிஷாவின் அனிமல் வெல்ஃபேர் ரசிகர்கள் மட்டுமே படம் பார்ப்பார்கள். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. போயஸ் தோட்டத்து ஜெயா – சசிகலா கும்பல் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு நாளொன்றுக்கு பதினைந்து கிலோ கறி போடுகிறார்களாம். இந்த நாய்களுக்கு போடும் கறியும் ஏதோ ஒரு செல்லக் கோழியாக, செல்லச் சேவலாக, செல்ல ஆடாக இருந்து, பலியிடுதலைப் போன்று வேண்டாம் என்று பிரச்சாரம் செய்வதற்கு தமிழ்நாட்டில் எந்த கலைப்புலிக்காவது தைரியம் இருக்கிறதா?

‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் இயக்குநர் சங்கய்யா முன்வைக்கும் பிரச்சனை ஆடோ, மாடோ, கோழியோ பற்றியது அல்ல. பார்ப்பனியத்தை நிறுவத் துடிக்கும் – சூத்திர உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தொடுக்கப்படும் – பகிரங்கமான போர் தான் ‘ஒரு கிடாயின் கருணை மனு’.

கிடா வெட்டுத் தடைச் சட்டத்தை காமெடியாக சொல்ல முடியும் என்ற இலட்சியத்தோடு வந்திருக்கிறார். சிரிப்பதா? சிந்திப்பதா? என்பது இப்பொழுது உழைக்கும் மக்களின் தன்மானப் பிரச்சனையாக மாறியிருக்கிறது.

மனுதர்மத்தின் ஆட்சியில், மக்களை பிரித்து வதைத்த மண்ணில், கிடாயின் கருணை மனு – வேண்டுகோள் அல்ல, விஷம்!

இளங்கோ

(“ஒரு கிடாயின் கருணை மனுவும் – மனுவின் கொலை வெறியும்” என்ற கட்டுரையின் சுருக்கம் இது)

Courtesy: vinavu.com