எதிர்காலத்தில் தேர்தல் இருக்குமா, இருக்காதா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது!

இந்த தேர்தல் பாஜக – காங்கிரசிற்கு இடையிலானதோ அல்லது திமுக – அதிமுக.விற்கு இடையிலானதோ அல்ல.

இந்த தேர்தல் இனிமேல் இந்தியாவில் தேர்தல் நடக்கப் போகிறதா இல்லையா என்பதற்கு இடையிலான தேர்தல், தேர்தல்களில் வாக்களிப்பது எனும் உரிமை நாம் அனைவருக்கும் இருக்கப் போகிறதா இல்லையா என்பதற்கான தேர்தல்.

அதற்கான பல சம்பவங்கள் இருக்கின்றன, இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பாஜக எம்பி இந்த தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் 2024க்குப் பிறகு இந்தியாவில் தேர்தல் இருக்காது என்று உளறி இருந்தார்.

பாஜகவின் சித்தாந்த பின்புலமாக இருக்க்க் கூடிய ஆர்.எஸ்.எஸ்-ன் நீண்ட நாள் ஆசையான ராமராஜ்யம் என்பது தேர்தல் ஜனநாயகத்தை விரும்பாததுதான். பார்ப்பனர் அல்லாத சம்பூகன் தவம் போன்ற கல்வியை கற்கும்போது தேடிவந்து கொல்லும் ராமனைப் போன்ற மோடியின் சர்வாதிகார ஆட்சியைத்தான்.

வரலாறுதோறும் ஜனநாயக அமைப்புகளை விரும்பாத சித்தாந்தம் உடையவர்கள் அவர்கள். பாஜகவின் இந்த 5 ஆண்டுகால் ஆட்சியில் சிதைக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகள் எத்தனை எத்தனை என்று வரிசைப்படுத்திப் பாருங்கள். அவர்கள் நோக்கம் புரியும்.

இந்த நாட்டின் நிதி நிலைமையை தாங்கிப் பிடிக்கும் ரிசர்வ் வங்கியை சிதைத்து டீமானிடைசேஷன் கொண்டு வந்தார்கள்,

நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “இந்த நாட்டின் ஜனநாயகம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது” என்று அலறும் அளவிற்கு இந்திய நீதி அமைப்பை சிதைத்தார்கள்.

சிபிஐ-யை அவர்கள் சிதைத்ததை பற்றியெல்லாம் பேசவேண்டியதே இல்லை.

தமிழ்நாட்டு இடைத்தேர்தல்கள் எல்லாம் 1 வருடமாக நடக்காமல் இருக்கும்போது நேற்று இறந்த கோவா முதல்வரின் தொகுதிக்கு அடுத்த மாதமே தேர்தல் அறிவிக்கும் அளவிற்கு தேர்தல் கமிஷனை சிதைத்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்திருக்கும் வேலைவாய்ப்பின்மையை, தொழில் முடக்கத்தை, ஜிடிபி குறைந்ததை பற்றியெல்லாம் நேர்மையான புள்ளிவிபரங்களை வெளியிடும் அமைப்புகளையெல்லாம் நாசம் செய்திருக்கிறார்கள்.

ராணுவத்தில் 100% அந்நிய முதலீடு என்று இந்திய பாதுகாப்பையே சிதைத்து இருக்கிறார்கள்.

இருப்பதிலே மிகப்பெரிய ஆபத்தாக இந்திய ராணுவ நடவடிக்கைகளையே நாசம் செய்திருக்கிறார்கள், புல்வாமா தாக்குதலுக்கு பிறகான இந்திய ராணுவ தாக்குதல்கள் விமான இழப்புகள், அபிநந்தன் கைது போன்ற சரிவுகள் அனைத்தும் தேர்தலை மனதில்வைத்து பாஜக ராணுவத்தின் மீது ஏற்படுத்திய நிர்பந்தத்தில் விளைந்த தோல்விகளே ஆகும்.

ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் என்று இந்த 5 ஆண்டுகளில் அவர்கள் சிதைக்காத ஜனநாயக அமைப்புகளே இல்லை எனலாம். அடிப்படையில் ஜனநாயக அமைப்புகளையே விரும்பாத இவர்கள் நமக்கிருக்கும் தேர்தல் வாக்களிக்கும் உரிமை போன்ற குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையும் நசுக்கவே பார்க்கிறார்கள், பாஜக எம்பி சாக்சி மஹாராஜின் பேச்சு அப்படிப்பட்டதுதான்.

அதில் கொடுமை என்னவென்றால் பாஜகவை ஆதரிக்க கூடியவர்கள் அதற்கு வாக்களிக்க கூடியவர்கள் கூட தேர்தல் உரிமையை இழக்க வேண்டும் என்பதுதான் பாஜக ஆர்.எஸ்.எஸ் ன் நோக்கம்.

சிம்பிளா சொன்னா இந்த தேர்தல் என்பது எதிர்காலத்தில் தேர்தல் இருக்குமா இருக்காதா அதில் நாமும் நம் சந்ததியும் பங்கெடுப்போமா இல்லையா என்பதை முடிவு செய்யும் தேர்தல். பாஜக வை தவிர இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை விரும்புகின்றன. நம் ஜனநாயகத்தின் மீது குறைந்தபட்ச நம்பிக்கை வைத்திருக்கின்றன.

ANBE SELVA

 

 

Read previous post:
0a1a
மோடி எப்படி சூப்பராய் தோற்கப் போகிறார் என்று ஒரு கணக்கு போடலாமா?

மோடி எப்படி சூப்பராய் தோற்கப் போகிறார் என்று ஒரு கணக்கு போடலாமா? த.நா.+ கேரளா + ஆந்திரா + கர்நாடகா + ஓடிஸா + மேற்கு வங்கம்

Close