டோரா – விமர்சனம்

ஹீரோயின் சப்ஜெக்ட்டில், முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்த ‘மாயா’ திகில் படம் வெற்றி பெற்றதால், அவர் நடித்துள்ள ‘டோரா’ திகில் படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. இந்த எதிர்பார்ப்பை ‘டோரா’ பூர்த்தி செய்துள்ளதா? பார்க்கலாம்…

அடுத்தவனுடன் மனைவி ஓடிப்போன பின்னரும் அவளை நினைத்து காதலுடன் உருகிக்கொண்டிருக்கும் ‘அப்பாவி கோவிந்து’ தம்பி ராமையா. தொலைக்காட்சி சீரியலில் மனம் லயித்து, பென்ஷன் பணத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் அவர், தனது ஒரே மகளான நயன்தாராவுடன் வசித்து வருகிறார்.

குலதெய்வம் கோயிலுக்கு மகளுடன் போய்வர முடிவெடுக்கும் தம்பி ராமையா, கால் டாக்ஸி நிறுவனம் நடத்தி வரும் தனது பணக்கார தங்கையிடம் சென்று டாக்சியை இலவசமாக அனுப்புமாறு கேட்கிறார். பணக்கார திமிரில் இருக்கும் அவரது தங்கையும், தங்கையின் கணவனும் அவமானப்படுத்தும் விதத்தில் பேச, ஆவேசப்படும் நயன்தாரா, “உங்களை மாதிரி நாங்களும் ஒரு கால்டாக்ஸி நிறுவனம் ஆரம்பிக்கிறோமா, இல்லையா, பார்…” என்று சவால் விடுகிறார்.

செகண்ட் ஹேண்டில் ஒரு கார் வாங்கி கால்டாக்ஸி நிறுவனம் தொடங்குவது என்ற முடிவுடன் தந்தையும், மகளும் அதற்கான ஷோ ரூமுக்கு போகிறார்கள். அங்கே உள்ள மிகப் பழமையான கார் ஒன்று அமானுஷ்யமான முறையில் நடந்துகொள்வது ஆடியன்ஸூக்கு காட்டப்படுகிறது. நயன்தாராவுக்கு அந்த பழைய கார் பிடித்துப் போய்விட, அதை கால்டாக்ஸியாக வைத்து புதுமையான முறையில் விளம்பரம் செய்து சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார். அந்த காரை வாங்கிக்கொண்டு அவர்கள் புறப்படும்போது, கார் சக்கரம் ஏறி நசுங்கும் எலுமிச்சம் பழத்திலிருந்து ரத்தம் பீறிடுவது ஆடியன்ஸூக்கு காட்டப்படுகிறது. இது ஒரு ட்ராக்.

இன்னொரு ட்ராக். வீட்டில் தனியாக இருக்கிறாள் ஒரு பெண். முகமூடி அணிந்த வடநாட்டு இளைஞர்கள் மூன்று பேர் அந்த வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் நகைகளை கொள்ளையடிப்பதோடு, அவளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தப்பிச்சென்று விடுகிறார்கள். கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பேற்கும் போலீஸ் அதிகாரி ஹரீஷ் உத்தமன் விசாரணையில் இறங்குகிறார்.

இந்த இரண்டு ட்ராக்குகளும் சந்திக்கும் முக்கியமான முத்ல் புள்ளி என்னவென்றால், ஒருநாள், அமானுஷ்யமான காரை நயன்தாரா ஓட்டிச்செல்லும்போது, கொள்ளைக்காரர்களான மூன்று இளைஞர்களில் ஒருவனை கார் பார்த்துவிடுகிறது. ஆவேசம் கொள்ளும் கார், நயன்தாராவின் கட்டுப்பாட்டை மீறி பாய்ந்தோடி, அந்த இளைஞனை துரத்திச் சென்று, மோதி, நயன்தாராவின் கண் எதிரிலேயே அவனை கொலை செய்கிறது.

அமானுஷ்ய சக்தி கொண்ட கார் உண்மையில் என்ன? அந்த கார் ஏன் அந்த இளைஞர்களை கொல்லத் துடிக்கிறது? அந்த காரின் உண்மை நிலைக்கும் நயன்தாராவுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டிருக்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? மீதமுள்ள இரண்டு இளைஞர்களை கார் கொலை செய்ததா? அதற்கு நயன்தாரா உடந்தையாக இருந்தாரா? இக்கொலைச் சம்பவங்களை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி, தனது புலனாய்வில் வெற்றி பெற்றாரா? என்ற கேள்விக்களுக்கான பதில்களை திகில் மற்றும் சஸ்பென்சுடன் சொல்லுகிறது மீதிக்கதை.

சமீபகாலமாக, தனக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துவரும் நயன்தாராவுக்கு இப்படம் லட்டு மாதிரி அமைந்துள்ளது. முதல் பாதியில் கொஞ்சம் காமெடியாகவும், இரண்டாம் பாதியில் படுசீரியஸாகவும் நடித்து அப்ளாஸ் வாங்குகிறார். மொத்தப் படத்தையும் தன் தோளில் தாங்கி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ் நிலையத்தில் ‘அன்னியன்’ விக்ரம், ‘வில்லன்’ அஜித் போல குரலையும், முகபாவத்தையும் மாற்றி மாற்றி பேசி நடித்து தானொரு லேடி சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார்.

தம்பி ராமையா தனக்கே உரித்தான ஸ்டைலில் காமெடியில் கலக்கி இருக்கிறார். முதல் பாதி முழுவதும் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது சிறப்பு. அவரது ஒவ்வொரு வசனமும், செய்கையும் ரசிக்கும்படி உள்ளது. மகளுக்கு பயந்த பாசமுள்ள தந்தையாகவும் கலக்கியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஹரிஷ் உத்தமனின் நடிப்பு பிரமாதம். பிளாஸ்பேக்கில் வரும் சிறுமியின் நடிப்பும் சிறப்பு. அச்சிறுமி மீது அன்பைப் பொழியும் ‘டோரா’ என்ற நாயும் மறக்க முடியாத, மனதை நெகிழ வைக்கும் அருமையான கதாபாத்திரம்.

இயக்குநர் தாஸ் ராமசாமி தனது முதல் படத்திலேயே காமெடி கலந்த திகில் படத்தை கொடுத்திருப்பதற்காக அவரை பாராட்டலாம். முதல் பாதி காமெடியாக மெதுவாக சென்றாலும், பிற்பாதியில், திகில் கொடுத்து நம்மை பயமுறுத்திருக்கிறார். அந்த அளவுக்கு திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார். காரை வைத்துக் கொண்டு ஒரு புதுமையான கதையை சொல்ல முயற்சி செய்திருக்கிறார். அவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

பாடல்கள் அருமை. விவேக் – மெர்வின் பின்னணி இசை மிரட்டல். காருக்கென்று தனியாக இவர் கொடுத்துள்ள தீம் மியூசிக் அற்புதம்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, திரையில் பிரமாண்டம் காட்டுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் நடக்கும் காட்சிகளை அவரது கேமரா கண்கள் அழகாக படம்பிடித்திருக்கிறது.

‘டோரா’ – நயன்தாராவின் ரசிகர்கள் மட்டும் அல்ல, அமானுஷ்ய சக்தியை நம்புகிறவர்களும் பார்த்து மகிழலாம்!

 

Read previous post:
0
நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல – விமர்சனம்

ஷாரியா தனது அண்ணன், அப்பாவுடன் வசித்து வருகிறார். இவருடைய அப்பா நேர்மையான போலீஸ் அதிகாரி. இந்நிலையில், ஷாரியாவின் அண்ணன் ஒரு விபத்தில் இறக்க, அவரது இறுதிஊர்வலத்தில் கலந்துகொள்ள

Close