மய்யம் – விமர்சனம்

பொதுவாக, அயல்மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தைப் பார்த்து இன்ஸ்பெயராகி, அதன் கதைக்கருவை, அல்லது அடிப்படை கதையை, அல்லது சில காட்சிகளை, அல்லது சில கதாபாத்திரங்களை சத்தமில்லாமல் உருவியெடுத்து, அதை வைத்து தமிழில் உல்டா படம் எடுப்பதுதான் தமிழ் சினிமாக்காரர்களின் வழக்கம். அவர்களிலிருந்து நாம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்ததாலோ என்னவோ, 2012ல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெறாத “ஏடிஎம்’ என்ற ரொம்ப சுமாரான ஆங்கிலப் படத்தைத் தழுவி ‘மய்யம்’ படத்தை எடுத்திருக்கிறார் ஓவியர் ஸ்ரீதர். இப்படத்தின் கதை, திரைக்கதை, தயாரிப்பு – இவரே!

பின்னிரவு. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஏடிஎம். மையம் ஒன்றின் காவலாளி (ரோபோ சங்கர்)க்கும், அவனது குடிகார நண்பன் (வசனகர்த்தா முருகானந்தம்)க்கும் போதை சண்டை ஏற்படுகிறது. இதில் ஆத்திரப்படும் குடிகார நண்பன், ஏடிஎம் மையத்தை ஒட்டியுள்ள தனி அறைக்குள் காவலாளியைத் தள்ளி பூட்டிவிட்டு போய்விடுகிறான்.

தனது காதலியை (நாயகி சுஹாசினி குமரனை) ரகசிய திருமணம் செய்துகொள்ள இருக்கும் காதலன் (நாயகன் நவீன் சஞ்சய்), இத்திருமணச் செலவுக்கு பணம் எடுப்பதற்காக, அந்த பின்னிரவில் தனது நண்பன் (குமரன் தங்கராஜன்) சகிதம் அந்த ஏடிஎம் மையத்துக்கு வருகிறான்.

அதேசமயம், அம்மா வெளிநாட்டில் இருக்க, சென்னையில் தங்கியிருக்கும் மாடலிங் பெண் (ஜெய் குஹேனி) அதே ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வருகிறாள்.

இந்த மூவரும் ஏடிஎம் மையத்துக்குள் இருக்கும்போது, மையத்துக்கு வெளியே ஒருவன் (ஹாசிம் சைன்) கடப்பாரையோடு வந்து, இன்னொரு காவலாளியை அடித்து கொலை செய்கிறான். மையத்துக்குள் நுழைந்தால் ரகசிய கேமராவில் தன் முகம் பதிவாகிவிடும் என்பதால், பணம் எடுக்க உள்ளே போயிருப்பவர்கள் வெளியே வரும்போது அடித்து பிடுங்கிக்கொள்ளலாம் என்று வெளியிலேயே காத்திருக்கிறான். இந்த ஆபத்தை உணர்ந்த மூவரும் மையத்தைவிட்டு வெளியேறாமல் உள்ளேயே இருக்கிறார்கள்.

அதன்பின் என்ன நடந்தது என்பதை திகிலும் இல்லாமல், நகைச்சுவையும் இல்லாமல் விறுவிறுப்பின்றி சொதப்பலாய் சொல்லி முடிக்கிறார்கள்.

இந்த கதை எந்த ஜானரில் பயணிக்க வேண்டும் என்ற தெளிவில்லாமலேயே திரைக்கதை அமைத்திருக்கிறார் ஸ்ரீதர். நோக்கமில்லாத திரைக்கதை, பலவீனமான பாத்திரப் படைப்பு, மிக குழப்பமாக கையாண்ட விதம் என எல்லாம் சேர்ந்து இந்த படத்தை உத்தரவாதமாக காவு வாங்கியிருக்கின்றன.

இதில் நடித்துள்ள எவரது நடிப்பும் மனதில் ஒட்டவில்லை. ரோபோ சங்கரின் காமெடி நன்றாக இருக்கும் என நம்பும் பலரையும் இப்படத்தில் அவர் ரொம்பவே சோதித்து விட்டார்

தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் சொல்லிக்கொள்கிற மாதிரி நேர்த்தியாக இல்லை. அதிலும் பின்னணி இசை… தாங்க முடியவில்லை…!

இப்படத்தில் பணியாற்றியுள்ள இயக்குனர் உட்பட பலர் இப்போதும் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருப்பவர்கள் தான். அவர்களுக்கு நமது வேண்டுகோள்: “சினிமா கினிமா என்று வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாமல், ஒழுங்காக படித்து, பாஸ் பன்ணி, வேறு நல்ல வேலைக்கு போகப் பாருங்கள்…!”

‘மய்யம்’ – பத்தோட பதினொண்ணு!