ரெய்டு – விமர்சனம்

நடிப்பு: விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, அனந்திகா, ரிஷி ரித்விக், செளந்தர்ராஜா, டேனியல் ஆனி போப், வேலு பிரபாகரன், செல்வா, ஹரீஷ் பேராடி, ஜீவா ரவி, ஜார்ஜ் மரியான் மற்றும் பலர்

இயக்கம்: கார்த்தி

ஒளிப்பதிவு: கதிரவன்

படத்தொகுப்பு: மணிமாறன்

இசை: சாம் சி.எஸ்.

தயாரிப்பு: எம் ஸ்டூடியோஸ்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)

சிவராஜ்குமார் நடிப்பில், துனியா சூரி இயக்கத்தில், 2018ஆம் ஆண்டு வெளியாகி, மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற கன்னட திரைப்படம் ‘தகரு’. தைரியமான என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி, நகரத்தில் உள்ள எல்லா ரவுடிகளையும் அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் என்ற கதைக்கருவை மையமாகக் கொண்ட இந்த ஆக்‌ஷன் படத்தின் ரீமேக் தான் தற்போது வெளிவந்திருக்கும் ‘ரெய்டு’ என்ற தமிழ்ப்படம். சிவராஜ்குமார் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார்.

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாகத் திகழும் விக்ரம் பிரபு (பிரபாகரன்) நேர்மையான, துணிச்சலான காவல்துறை அதிகாரி. அவர் எல்லா ரவுடிகளையும், தாதாக்களையும் ஒழித்து நகரத்தில் நிரந்த அமைதியை நிலைநாட்ட விரும்புகிறார். இதற்காக சமூக விரோதக் கும்பல்களை எல்லாம் அடித்து துவைத்து துவம்சம் செய்கிறார். இந்த வகையில் அவர் தாதாவாக இருக்கும் வேலு பிரபாகரன் (அங்கிள்), இவரிடம் பணியாற்றிவிட்டு விலகி ரவுடியிசம் செய்துவரும் ரிஷி ரித்விக் மற்றும் சௌந்தர்ராஜா (சிட்டு) ஆகியோருடனும் மோதுகிறார். மேலும், ரிஷி ரித்விக்கின் தம்பி டேனியல் ஆனி போப்பை (காக்ரோச்) அவமானப்படுத்தி என்கவுண்ட்டர் செய்கிறார். இதனால் ஆத்திரம் கொள்ளும் ரிஷி ரித்விக்கும் சௌந்தர்ராஜாவும் விக்ரம் பிரபுவின் காதலியான ஸ்ரீதிவ்யாவை (வெண்பா) கொன்று விடுகிறார்கள். இந்த தாக்குதலில் உயிர் தப்பிக்கும் விக்ரம் பிரபு, தன் காதலியைக் கொன்ற ரிஷி ரித்விக் மற்றும் சௌந்தர்ராஜாவை எப்படி பழி தீர்க்கிறார் என்பது ‘ரெய்டு’ திரைப்படத்தின் மீதிக்கதை.

படத்தில் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு, விறைப்பான நடையோடும், முறைப்பான பார்வையோடும் ரவுடிகளுடன் துணிச்சலாக மோதும் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக படம் முழுக்க வலம் வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் வேகத்தையும், காதல் காட்சிகளில் கனிவையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

வெண்பா என்ற கதாபாத்திரத்தில் ஃபிளாஷ்பேக்கில் வரும் ஶ்ரீதிவ்யாவுக்கு வேலை அதிகம் இல்லை. நாயகனை சந்திப்பது, காதலிப்பது, பின்னர் செத்துப்போவது என்ற அளவில் அவரது கதாபாத்திரம் முற்றுப்பெற்று விடுகிறது.

வெண்பாவின் தங்கை வெண்மதியாக வரும் அனந்திகாவின் இளமையும், துடிப்பும், அல்ட்ரா மாடர்ன் நடத்தைகளும் இளம் பார்வையாளர்களை நிச்சயம் கிறங்கடிக்கும்.

வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ரிஷி ரித்விக். தம்பிக்காக பழி வாங்கத் துடிக்கும் காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார். இவருக்கு இணையாக போட்டிபோட்டு நடித்திருக்கிறார் சிட்டு என்ற கதாபாத்திரத்தில் வரும் சௌந்தர்ராஜா. என்ன தான் ரவுடியாக இருந்தாலும், தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை சொல்ல இயலாமல் தவிக்கும் காட்சிகளில் அவர் அருமையாக நடித்திருக்கிறார்.

மூன்று கொலைகளைச் செய்துவிட்டு முன்னூறு கொலைகள் செய்த அளவுக்கு பில்டப் கொடுக்கும் வயோதிக ’அங்கிள்’ தாதாவாக வரும் வேலு பிரபாகரன் கவனம் ஈர்க்கிறார்.

காக்ரோச் என்ற கதாபாத்திரத்தில் வரும் டேனியல் ஆனி போப், மற்றும் செல்வா, ஜீவா ரவி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். திறமையான நடிகரான ஹரீஷ் பேராடி வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

போலீஸ் – ரவுடி ஆடுபுலி ஆட்டத்தை மையமாகக் கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கியிருக்கிறார். அருதபழசான கதை இது என்பதால் திரைக்கதையில் கூடுதலாக கவனம் செலுத்தி, நடிப்புக் கலைஞர்களை இன்னும் நேர்த்தியாக நடிக்க வைத்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார். கதிரவனின் ஒளிப்பதிவும், மணிமாறனின் படத்தொகுப்பும் ஓரளவுக்கு கை கொடுத்துள்ளன.

இயக்குனர் முத்தையா எழுதியுள்ள வசனங்களை சிற்சில இடங்களில் ரசிக்க முடிகிறது.

‘ரெய்டு’ – ஒரு முறை பார்க்கலாம்!