பகிரி – விமர்சனம்

அரசியல் படம் இது. தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் கடைப்பிடிக்கும் மது விற்பனை கொள்கையை நையாண்டி செய்யும் படம் இது. இதன் கதைக்கரு – டாஸ்மாக்.

நாயகன் (பிரபு ரணவீரன்) அப்பா விவசாயி. தன்னைப் போலவே தன் மகனும் விவசாயம் செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆசை. மகனை வேளாண் பட்டப்படிப்பு படிக்க வைக்கிறார். படிப்பை முடித்த மகனோ, அரசாங்க வேலை பார்க்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறான். அதற்கு அவன் தேர்ந்தெடுப்பது ‘நாஸ்மாக்’ வேலை.

‘நாஸ்மாக்’ என்ற பெயரில் தமிழக அரசு மதுபானக் கடை நடத்துகிறது. அங்கு வேலையில் சேர நாயகன் முயற்சி செய்கிறான். அந்த வேலைக்கு ரூ.5லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள். விவசாய நிலத்தை விற்று, அதில் வரும் பணத்தில் லஞ்சம் கொடுத்து, தன்னை நாஸ்மாக் வேலையில் சேர்த்துவிடுமாறு அப்பாவிடம் முரண்டு பிடிக்கிறான் நாயகன். அவனது கோரிக்கையை ஏற்க அப்பா மறுத்துவிடுகிறார்.

நாயகனின் காதலி (ஸ்ரவியா) அவனுக்கு உதவ முன்வருகிறாள். அவள் தன் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகளையெல்லாம், தன் அம்மாவின் ஆதரவுடன் விற்று, லஞ்சப்பணம் கொடுத்து, நாயகனை நாஸ்மாக் வேலையில் சேர்த்துவிடுகிறாள்.

நாயகியின் அம்மாவை ஒருதலையாக காதலிக்கும் உள்ளூர் அரசியல்வாதி (ரவிமரியா), எப்படியாவது ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிவிட வேண்டும் என்ற நப்பாசையில், அவளுக்கு தொந்தரவு கொடுத்து வருகிறான். இந்த தொந்தரவின் விரிவாக்கமாக, நாயகியின் அம்மாவுக்கு மருமகனாக வரவிருக்கும் நாயகனுக்கும் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறான். நாயகன் வேலை பார்க்கும் மதுபானக்கடை, கோவில் அருகே இருப்பதாகக் கூறி, அது அங்கே இருக்கக் கூடாது என போராட்டம் நடத்துகிறான்.

வாடகைக்கு வேறு இடம் கிடைக்காததால், நாயகியின் வீட்டுக்கே மதுபானக் கடையை இடம் மாற்றி, விறபனையை தொடருகிறான் நாயகன். இந்நிலையில், தமிழக அரசு நாஸ்மாக் கடைகளையெல்லாம் நிரந்தரமாக மூடிவிட முடிவெடுத்து விடுகிறது. இதனால் நாயகனின் எதிர்காலம் என்ன ஆகிறது என்பது கிளைமாக்ஸ்.

அறிமுக நாயகனான பிரபு ரணவீரன், அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடும் காட்சிகளிலும், காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளிலும், அப்பா, அம்மா, தங்கையுடனான சென்டிமெண்ட் காட்சிகளிலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகி ஸ்ரவ்யா குறும்புத்தனமும், அடாவடித்தனமும் கலந்து செய்த கலவையான கதாபாத்திரத்தில் ரசிக்கும்படியாக நடித்திருக்கிறார். அரசியல்வாதியாக வரும் ரவிமரியா தோன்றும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு. நாயகியின் குடிகார தந்தையாக வரும் ஏ.வெங்கடேஷ் நடிப்பு சிறப்பு. நாயகனின் அப்பாவாக, விவசாயியாக வரும் சூப்பர் குட் சுப்பிரமணி, பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.

ஜாடைமாடையாகச் சித்தரித்தாலும், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் மது விற்பனை கொள்கையை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். காட்சிகளிலும், வசனங்களிலும் உள்ள நக்கலும் நையாண்டியும் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளை மூடுமாறு எதிர்க்கட்சிகள் சுயநலத்துடன் போராடுவதாக காட்டியிருக்கும் இயக்குனர், இதே கோரிக்கைக்காக சுயநலம் சிறிதும் இல்லாமல், சமூக அக்கறையுடன் போராடும் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு மற்றும் அதன் பாடகர் கோவன் போன்றோரை இருட்டிப்புச் செய்திருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. மேலும், விமர்சிக்கப்பட வேண்டிய தி.மு.க., அ.தி.மு.க. அரசியல்வாதிகளை காட்டும்போதெல்லாம் பின்சுவரில் அண்ணாத்துரை படம் அல்ல, பெரியாரின் படம் இருப்பது போல் காட்டியிருப்பது பச்சை ‘ஹெச்.ராஜாத்தனம்’. ‘ஹெச்.ராஜாத்தனம்’ என்றால் ‘கயவாளித்தனம்’ என பொருள் கொள்க.

‘பகிரி’ – அள்ள வேண்டியதை அள்ளி, தள்ள வேண்டியதை தள்ளி சுவைக்கலாம், அன்னப்பறவை போல!