விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ 23ஆம் தேதி ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் தற்போது கவனத்தை ஈர்க்கும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் எம்.மணிகண்டன். இவர் இயக்கிய ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ ஆகிய இரு படங்களுமே வரவேற்பையும், பாராட்டையும் பெற்றவை.

இப்படங்களை அடுத்து எம்.மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் ‘ஆண்டவன் கட்டளை’. இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் நடித்துள்ளார். இவர்களுடன் பூஜா தேவாரியா, நாசர், சிங்கம் புலி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கே இசையமைக்க, கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரித்துள்ளார்.

வேலை பார்க்க வெளிநாடு செல்ல விரும்பி சென்னை வரும் கிராமத்து இளைஞராக விஜய் சேதுபதியும், சென்னை செய்தியாளராக ரித்திகா சிங்கும் நடித்திருக்கும் இப்படத்துக்கு தணிக்கைக் குழு யூ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதை தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் இந்த (செப்டம்பர்) மாதம் 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) உலகெங்கும் வெளியாகிறது.

இப்படத்தை ஸ்ரீகிரீன் கிரியேஷன்ஸ் சார்பில் வெளியிடும் ஷரவணன் இந்த ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.