“தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்வோம்”: ரஜினி சூசக அறிவிப்பு!

“தேர்தல் வரும்போது” என நேரடியாக சொல்லாமல், “போர் வரும்போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான்” என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரசிகர்களுடனான 5-வது நாள் சந்திப்பான இன்று (வெள்ளிக்கிழமை), ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது:

பழைய காலத்தில் ராஜாக்களிடம் படை பலமிருக்கும். லட்சகணக்கில் இல்லாமல் அவர்களால் எவ்வளவு வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு இருக்கும். போர் என வரும்போது அனைத்து ஆண்மக்களும் இணைந்து போய்விடுவார்கள். அது வரைக்கும் ஆண் மக்கள் அவர்களுடைய வேலைகளை, கடமைகளைச் செய்துகொண்டே இருப்பார்கள்.

வீர விளையாட்டுகளை வைத்ததே அவர்களையும் வீரர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காக தான். ஜல்லிக்கட்டு, கம்பு சண்டை, கபடி, குஸ்தி உள்ளிட்ட விளையாட்டுகளை எல்லாம் ஆண்மக்கள் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கியவை தான். போர் என வரும்போது, அனைவருமே மண்ணுக்காக களமிறங்கி போராடுவார்கள்.

அந்த மாதிரி எனக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுடைய கடமைகளை செய்துகொண்டே இருங்கள்.

போர் வரும்போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான். நன்றி.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.