புதிதாக 10 அணுஉலைகள் அமைக்கும் மோடி அரசுக்கு ம.ம.க. கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில் புதிதாக 10 அணுஉலைகளை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த புதன் அன்று ஒப்புதல் அளித்துள்ளது. பேராபத்தை விளைவிக்கும் இந்த அணுஉலைகளின் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும், இந்த அணுஉலைகள் வரும் 2021-22ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் அறிவித்துள்ள மத்திய அரசின் அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கெனவே நாட்டில் 22 அணுஉலைகள் உள்ள நிலையில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் 10 அணுஉலைகளைக் கொண்டுவருவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.

புதிதாக அமைக்கப்பட உள்ள அணுஉலைகளுக்குத் தேவையான நன்னீர், குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் இந்தியாவில் கிடைப்பது என்பது அரிது. அதேபோல் அணுஉலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளைப் பாதுகாப்பாகப் புதைக்க இந்தியாவில் ஒரு நிரந்தர இடம் இல்லாத நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு செய்துள்ளது.

அணுஉலைகளால் ஏற்படும் கதிரியக்கம் (Radiation) மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய் உட்பட பல்வேறு நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படும். இந்தக் கதிரியக்கம் கிட்டத்தட்ட சுமார் 45 ஆயிரம் ஆண்டுகள் வீரியத்துடன் இருக்கும். இந்த அணுஉலைகளால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன், அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

அணுஉலைகளை அமைப்பதற்கு முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல் ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன்அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். மூன்றாவதாக ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த மூன்று அடிப்படை விஷயங்களும், புதிதாக அமைக்கப்பட உள்ள அணுஉலைகள் விஷயத்தில் பின்பற்றப்பட்டவில்லை. இதேநிலைதான் கூடங்குளம் அணுஉலை விஷயத்திலும் நடத்தேறியது.

ரஷ்ய நாட்டில் கடந்த 1986ஆம் ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் மூடப்பட்ட அணுஉலையில் ஏற்பட்ட விபத்தின் விளைவாக கடந்த 2004ஆம் ஆண்டு வரை சுமார் 9,85,000 பேர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளனர் என்று ரஷ்ய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

செர்நோபிலிருந்து பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள இங்கிலாந்திலும் இந்தக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட 2,26,500 கால்நடைகளை இங்கிலாந்து அரசு கொன்று புதைத்தது. இது மட்டுமல்லாமல் மரங்கள் முதல் மீன்கள் வரை எல்லாம் நச்சுத் தன்மை கொண்டவையாக மாறின. இந்த விபத்திற்குப் பிறகு ரஷ்ய அரசு தனது நாட்டில் ஒரு அணுஉலையைக்கூட புதிதாகத் தொடங்கவில்லை.

அணுஉலைக்குத் தேவைப்படும் யூரேனியத்தை அதிக அளவில் விற்பனை செய்யும் ஆஸ்திரேலியாவும் அணுஉலையின் ஆபத்தை அறிந்து தனது நாட்டில் ஒரு அணுஉலையையும் தொடங்கவில்லை.

ஜப்பான் நாட்டின் புகுசிமா அணுஉலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஜப்பான் அரசு 28 அணுஉலைகளை மூடியுள்ளது. புதிதாகத் தொடங்க நடைபெற்றுக் கொண்டிருந்த 10 அணுஉலைகளின் பணியையும் நிறுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைகளையும் மூடிவிட உள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. உலகில் உள்ள பல்வேறு நாடுகள் அணுஉலையின் ஆபத்தை உணர்ந்து அவைகளை மூட முயற்சிகள் செய்துவரும் நிலையில் இந்தியா மட்டும் புதிது புதிதாக அணுஉலைகளைத் திறக்க முயற்சிப்பது தனக்கான சவக்குழியைத் தானே தோண்டுவதற்குச் சமம்.

எனவே, மத்திய பாஜக அரசு பேராபத்தை உருவாக்கும் இந்த அணுஉலை திட்டங்களைக் கைவிட்டு விட்டு மக்கள் நலத்திட்டங்களில் தனது கவனத்தை செலுத்த வேண்டும் எனவும், மோடி வாக்குறுதி அளித்த அந்த அச்சே தின் (நல்ல நாட்கள்) வரவில்லை என்றாலும் கவலையல்ல. ஆனால் அணுஉலை விபத்துகள் போன்ற இருண்ட நாட்கள் இந்தியர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.