“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம், காவி கொடி இடம் பிடித்துள்ளது”: சீமான் பேட்டி!

“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம் இடம் பிடித்திருக்கிறது. காந்தி படம் நடுவில் வந்திருக்கிறது. கூடவே பின்பக்கத்தில் காவிக் கொடியைப் பதித்துவிட்டார்கள். இதைத் தவிர வேறு என்ன சாதனை நிகழ்ந்துவிட்டது? இங்கு அடிப்படை அமைப்பையே மாற்ற வேண்டியிருக்கிறது” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காக, வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது. ‘ பணத்தை மாற்ற முடியாமல் ஏழை மக்கள் வங்கி வாசல்களில் திண்டாடுகின்றனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டார் பிரதமர் மோடி.

நாடு முழுவதும் மக்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஜப்பான் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. அம்பானியும் அதானியுமா வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்?”

“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம் இடம் பிடித்திருக்கிறது. காந்தி படம் நடுவில் வந்திருக்கிறது. கூடவே பின்பக்கத்தில் காவிக் கொடியைப் பதித்துவிட்டார்கள். இதைத் தவிர வேறு என்ன சாதனை நிகழ்ந்துவிட்டது? இங்கு அடிப்படை அமைப்பையே மாற்ற வேண்டியிருக்கிறது.

தாராளமயக் கொள்கைளை ஊக்குவித்துவிட்டு, தனியார் முதலாளிகளிடம் பணம் குவிந்துவிட்டது என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? இதனால் கறுப்புப் பணம் ஒழியும் என்று சொல்வதை ஏற்க முடியாது.

அரசின் புதிய அறிவிப்பால், பாதிக்கப்படுவதில் 80 சதவீதம் பேர் அடித்தட்டு மக்கள். சாப்பாட்டுக்குப் பணம் இல்லாமலும் தெருவோரக் கடைகளில் பிழைப்பு நடத்தும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப் பற்றி எந்தக் கவலையும் அரசுக்கு இல்லை.

ரூபாய் நோட்டுகளை மாற்றிவிட்டால், எந்த அதிகாரியும் லஞ்சம் வாங்கப் போவது கிடையாதா? பதுக்கி வைத்தவர்கள் இனி இரண்டாயிரம் ரூபாயை பதுக்குவார்கள். முன்பு பத்து நோட்டுகளை பதுக்கியவர்கள், இப்போது ஐந்து நோட்டுக்களைப் பதுக்கும் முடிவுக்கு வருவார்கள்.

நேற்று தஞ்சாவூரில் 7 கோடியே 85 லட்சம் ரூபாய் பிடிபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில், இரண்டாயிரம் ரூபாய் புது நோட்டுகளும் பிடிபட்டுள்ளன. இன்றுதான் வங்கிக்கே அந்த ரூபாய் தாள்கள் வரவிருந்தன. அதற்குள் அங்குள்ளவர்கள் கைகளுக்கு எப்படிச் சென்றது? பெரும் பணக்காரர்களுக்கு முன்பே புதிய ரூபாய் தாள்கள் சென்று சேர்ந்துவிட்டதா? ‘

வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்து, இந்திய மக்களின் வங்கிக் கணக்கில் போடுகிறேன்’ என பிரதமர் சொன்னாரே, அந்த அறிவிப்பு என்னவானது? இதுவரையில், வெளிநாட்டு சுற்றுப் பயணம் சென்றதில் ஏற்பட்ட செலவுகளைப் பற்றி பிரதமர் மோடி அறிவிப்பாரா?

பிரதமரின் அறிவிப்பால் எந்த பெருமுதலாளி பாதிக்கப்பட்டுள்ளார்? வங்கி வாசலில் எந்தப் பணக்காரர் நிற்கிறார்? இடைத் தரகர்கள் மூலம் பணக்காரர்களின் தேவை நிறைவேறிவிடும். ரூபாய்த் தாளை ஒழித்துவிட்டால், லஞ்சம் ஒழிந்துவிடுமா? சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்ற கதையாகத்தான் இருக்கிறது அரசின் அறிவிப்பு. அதற்குப் பதிலாக, 500, 1000 ரூபாய் நோட்டுக்களைப் புதிய தாள்களாக அறிவிக்க வேண்டியதுதானே? புதிதாக இரண்டாயிரம் ரூபாய் தாள்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அடித்தட்டு மக்களை அவசர கதிக்கு ஆளாக்கிய அவலமான திட்டமாகத்தான் இதை பார்க்கிறோம்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.