பொருளாதார எமர்ஜென்சியை எதிர்த்தால் அரசியல் எமர்ஜென்சி கொண்டு வருவார் மோடி!

நவம்பர் 9, 2016 நள்ளிரவில் இருந்து அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடியை இந்திய மக்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி சுமத்தி இருக்கிறார். ஒற்றை முடிவால் 15 லட்சம் கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை செல்லா பணமாக ஆக்கி இருக்கிறார். எதனால் இப்படி ஒரு முடிவு? இந்த முடிவால் என்ன விளைவுகள் ஏற்படும்?

முதலில் அரசு தரப்பு என்ன சொல்கிறது என பார்ப்போம். அன்றைய இரவு 8 மணிக்கு யாரும் எதிர்பாராமல் பிரதமர் நிகழ்த்திய உரை இதுதான்.

“கடந்த சில பத்தாண்டுகளில் ஊழலும் கருப்பு பணமும் அதிகரித்துள்ளது. வறுமையை ஒழிக்கும் முயற்சியை அது பலவீனப்படுத்தியுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக வலிமையான நடவடிக்கை எடுக்கப்படும் தருணங்கள் வரலாற்றில் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. ஊழல், கருப்பு பணம், தீவிரவாதம் ஆகியவை இந்த நாட்டின் புரையோடி போன காயங்கள். முன்னேற்றத்தை தடுப்பவை.

தீவிரவாதம் மிக முக்கியமான அச்சுறுத்தல். பலர் தங்கள் உயிர்களை அதற்கு இழந்து இருக்கின்றனர். இந்த தீவிரவாதிகளுக்கு பணம் எங்கு இருந்து கிடைக்கிறது என யோசித்திருக்கிறீர்களா? எல்லை தாண்டி இருக்கும் எதிரிகள் கள்ள நோட்டுகள் வழியாக செய்ல்படுகின்றனர். பல ஆண்டுகளாக இது தொடர்கிறது. கள்ள நோட்டுகள் மாற்றப்படும்போது பலர் பிடிபட்டுள்ளனர். கள்ள பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாதம் ஒரு பிரச்சினை என்றால், மறுபக்கம் ஊழலும் கருப்பு பணமும் பிரச்சனைகளாக இருக்கின்றன.

ஊழல் மற்றும் கருப்பு பணம் ஆகிய பிரச்சினைகளை தீர்க்க, ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு இன்று நள்ளிரவு 12 மணியிலிருந்து செல்லாது என முடிவு எடுத்திருக்கிறோம்.

ஊழல், கருப்பு பணம், கள்ள பணம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான இந்த யுத்தத்தில், நாட்டை புனிதமாக்க போகும் இந்த இயக்கத்தில், மக்கள் சில நாட்கள் தங்களுக்கு ஏற்பட போகும் சிரமங்களை சகித்து கொள்வார்களா? ஒவ்வொரு குடிமகனும் இந்த மகாயாகத்தில் பங்குபெறுவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

புது ஐநூறு ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புதிய வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தப்படும்.”

ஆக, அரசின் கூற்றுப்படி, ஊழல், கருப்பு பணம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை ஒடுக்குவதற்காகத்தான் பண மதிப்பை செல்லாததாக்கும் இந்த நடவடிக்கை. ரொம்ப சந்தோஷம். பிறகு, ஏன் புதிய ஐநூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும்? ஊழல் செய்பவர்களுக்கும், கருப்பு பண முதலைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் வேலை இன்னும் சுலபமாகி விடாதா? பின் ஏன் இப்படி ஒரு நடவடிக்கை?

முதலில் இருந்து பார்ப்போம்.

மிக முக்கியமான உத்தரபிரதேச தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டிலுள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் பதினைந்து லட்சம் ரூபாய் பணம் போடுவதாக சொல்லித்தான் மோடி ஆட்சிக்கு வந்தார். எவர் வங்கி கணக்கிலும் இன்னும் நயா பைசா கூட போடவில்லை. கருப்பு பணம் நிமித்தமாக, வாக்காளர்களிடம் சொல்லிக் கொள்ளவாவது, எதையேனும் செய்ய வேண்டிய அவசியம் மோடிக்கு இருக்கிறது. பணத்தை செல்லாததாக ஆக்குவதால் எப்படி ஸ்விஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணம் வரும் என யாரும் கேட்கவும் கூடாது. அதற்குத்தான் இந்த நடவடிககை.

பெருமுதலைகள் தங்கள் பணத்தை கட்டிலுக்கு அடியிலும் மண்ணுக்குள் புதைத்தும் வைக்காமல், வெளிநாட்டு வங்கிகளில் இருப்பு வைத்திருப்பார்கள் என்பதை இந்த நடவடிக்கையால் நாம் மறந்து விடுவோம் அல்லவா? மோடி வேண்டுவது அதையே!

ஊழலை பொறுத்தமட்டில் உண்மை என்ன?

2013-லிருந்து 2015-ம் ஆண்டு வரை மட்டும், அதற்கு முந்திய ஒன்பது வருடங்களில் இல்லாத அளவான் 1.14 லட்சம் கோடி ரூபாய் வராக்கடனை இந்திய வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவிக்கிறது. கடன் வாங்கியவர்களின் பெயர்களை கேட்டால், வெளியிட RBI மறுக்கிறது. இதே தாராள மனம் சிறுகடன்கள் வாங்கியவர்களிடம் காட்டப்படுமா? கண்டிப்பாக கிடையாது.

தங்கத்திலும் நிலத்திலும் முதலீடு செய்யப்பட்டுள்ள கருப்பு பணத்தின் கதி என்ன?

கருப்பு பணம், தீவிரவாதம், ஊழல் என்பதெல்லாம் வெறும் கற்பனை கதைகள். பின் இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம்தான் என்ன?

மோடியின் பேச்சை சற்று ஆராய்ந்தால், சில உண்மைகள் தெரியும்.

“…..சமூகவிரோதிகளும் தேசதுரோகிகளும் பயன்படுத்தும் ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்து விடும்” என கூறியிருக்கிறார்.

கவனியுங்கள். “தேசதுரோகிகளும் சமூக விரோதிகளும்”! அதாவது ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தேசதுரோகிகள்! ஆட்சி அமைத்ததிலிருந்து பலரை, முக்கியமாக இஸ்லாமியர்களை தேசதுரோகிகள் என அடையாளப்படுத்துத்தி வந்திருக்கிறது இந்த அரசு. “…..நாட்டை புனிதமாக்க போகும் இந்த இயக்கத்தில், நம் மக்கள் சில நாட்கள் தங்களுக்கு ஏற்பட போகும் சிரமங்களை சகித்து கொள்வார்களா? ஒவ்வொரு குடிமகனும் இந்த மகாயாகத்தில் பங்குபெறுவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றும் மோடி கூறியிருக்கிறார்.

நாட்டை புனிதப்படுத்துவதா? இதே மாதிரியான ஒரு குரலை ஓர் அரை நூற்றாண்டுக்கு முன் ஐரோப்பா பக்கம் கேட்ட மாதிரி ஞாபகம் வருகிறதா?

ஆரிய புராணங்களில் வரும் ‘மகாயாகம்’ என்ற வார்த்தையையும் பயன்படுத்துகிறார். “நான் இந்து தேசியவாதி” என சொல்லிக் கொள்ளும் பிரதமரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

இந்த மறைமுக அர்த்தங்களும் வார்த்தை பிரயோகங்களும் உத்தரபிரதேச தேர்தலில் பெரும்பங்கு வகிக்கப் போகிறது. மோடியின் பா.ஜ.க, “இஸ்லாமிய அச்சுறுத்தல்” என்ற வெறுப்பை விதைத்து இந்து ஓட்டுகளை வெல்ல முயலும். இப்படித்தானே உத்தரபிரதேச முசாபர்நகரில் கலவரத்தை உருவாக்கி பாராளுமன்ற தேர்தலில் 80-க்கு 72 சீட்டுகளை ஜெயித்தனர்!

இந்த நடவடிக்கைக்கு பின்னால் ரொக்கமில்லா நாடாக மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. முன்னேறிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனாலேயே இந்த எண்ணத்தை இன்னும் சாதிக்க முடியவில்லை. 80% கிராம மக்கள் தொகையை கொண்டிருக்கும் இந்தியா எப்படி சாதிக்க முடியும்? சமீபத்தில்தான் 32 லட்சம் வங்கி கணக்கு அட்டைகளின் விவரங்கள் திருடப்பட்டன. ரொக்கமில்லா சூழலுக்கு சென்றால் எவ்வளவு ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை இது. ஆன்லைன் கட்டண சேவை நிறுவனங்களுக்கு உதவவே இந்த நடவடிக்கை என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. PayTM என்ற இணைய கட்டண சேவை நிறுவனம் மோடியின் நடவடிக்கையை பாராட்டி இரண்டு பக்க விளம்பரம் கொடுத்ததை கவனித்திருப்போம்.

இவைதானா காரணங்கள்? இல்லை, இன்னும் இருக்கின்றன.

சில தரவுகள்:

– பொதுத்துறை வங்கிகளின் சந்தை மூலதனத்தின் மதிப்பு ஒரு வருடத்தில் 4.5 லட்சம் கோடிகளிலிருந்து 2.7 லட்சம் கோடிகளாக குறைந்துள்ளது.

– 7 லட்சம் கோடி வராக்கடனில் பொதுத்துறை வங்கிகள் தத்தளிக்கின்றன.

– கடந்து இரண்டு வருடங்களில் பொதுத்துறை வங்கிகளில் ஏற்பட்ட நிதி சரிவு முதலீட்டாளர்களின் நம்பிக்கை இழக்க செய்துள்ளதாக Hindu Businessline தெரிவித்துள்ளது.

– இதை சரி செய்யும் முயற்சியாக 2.1 லட்சம் கோடி மதிப்பிற்கான பத்திரங்களை RBI வாங்கியுள்ளதாக Business Standard  தெரிவித்துள்ளது.

– மேலும், ‘வங்கிகள் கடன் கொடுக்காமல் பணம் உருவாகாது. இந்த நிதிச்சரிவு ஏற்படுத்திய தேக்கத்தால், வங்கிகள் கடன்கள் கொடுப்பதில் சுணக்கம் காட்டி வருகின்றன. விளைவாக ஏற்பட்டிருக்கும் பெரும் ரொக்க பற்றாக்குறையை ஈடுகட்டவே பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன’ என Business Standard தெரிவித்துள்ளது.

– தொடர்ந்து Business Standard, ‘வங்கிகளில் ரொக்க பற்றாக்குறை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. விழாக்காலம் என்பதால் மக்களிடம் பண சுழற்சி அதிகமாக உள்ளது. வங்கிகளில் அதிக பணம் எடுக்கப்படுவதாலும் ரொக்க பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சுழற்சியில் இருக்கும் பணம் மட்டும் 2.6 லட்சம் கோடியாக கடந்த 12 மாதங்களில் உயர்ந்திருக்கிறது’ என குறிப்பிடுகிறது.

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பொருளாதாரத்தை சரியாக்க பல முயற்சிகளை எடுத்து வந்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை போல மோடிக்கும் இந்தியாவை உற்பத்தி மையமாக ஆக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் கடந்த வருடங்களில் உற்பத்தி துறை வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்படும் அதிரடி நடவடிக்கை இந்த பின்னடைவை சரி செய்து விடும் என மோடி நினைத்திருக்கலாம். பண வீக்கத்தால் RBI-உம் எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்குகிறது. இருக்கும் ஒரே வழி, சுழற்சியில் உள்ள பணத்தை எல்லாம் வங்கிக்கு கொண்டு வந்து, தள்ளாடி கொண்டிருக்கும் வங்கித்துறையை சரி செய்வது மட்டும்தான்.

அறிவிக்கப்பட்ட நேரத்தை கவனியுங்கள். தீபாவளி முடிந்த சில தினங்களில்! 17 லட்சம் கோடி பணம் இந்தியாவில் சுழற்சியில் உள்ளது. அதில் 88%, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள். மோடியின் அறிவிப்புக்கு பிறகு, RBI கூட்டிய ஊடக சந்திப்பில், 1650 கோடி ஐநூறு ரூபாய்  நோட்டுகளும் 6700 கோடி ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் தற்போது புழக்கத்தில் இருப்பதாக சொல்லியிருக்கிறது. சுமாராக, 15 லட்சம் கோடி ரூபாய் தற்போது வங்கிகளுக்கு செல்ல போகிறது. உங்கள் கணக்கில் இருந்து எவ்வளவு எடுக்கமுடியும் என்பதிலும் வரையறை வைத்திருக்கிறார்கள். வாரத்துக்கு 20,000 ரூபாய். அந்த வரையறையில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது.

இப்படி குறைக்கப்பட்ட வரையறை மூலம், மிச்சமுள்ள பணத்தை பல தடவை வங்கிகள் கடனாக கொடுத்து கொள்ளலாம். யாருக்கு இது லாபம்? விவசாயிகளுக்கா? சிறு உற்பத்தியாளர்களுக்கா? இல்லை. அரசுடன் உறவில் இருக்கும் Crony Capitalists எனப்படும் முதலாளிகளுக்குதான் இதனால் லாபம். பணத்தின் மதிப்பை செல்லாததாக ஆக்கியிருக்கும் இந்த நடவடிக்கைதான் முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு எடுத்த மிகப்பெரிய நடவடிக்கையாக வரலாற்றில் இருக்க போகிறது. அதற்கான பெரிய விலையையும் இந்தியா கொடுக்கப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

இரண்டு நாட்கள் வங்கி விடுமுறை, திறந்த பிறகும் பணம் எடுப்பதிலுள்ள வரைமுறை என மக்கள் கோபமடைந்து கொண்டிருக்கிறார்கள். அவசர சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டால் என்ன செய்வார்கள்? வங்கியுடன் தொடர்பிலில்லாத 80% மக்களின் நிலை என்ன? அவர்கள் வைத்திருக்கும் சில தேசவிரோத நோட்டுகளுக்காக எத்தனை சிரமங்களை அவர்கள் சந்திக்க வேண்டி வரும்?

இந்த நடவடிக்கை பண சுழற்சியையை உடைக்கும் என சில பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். அப்படி உடைக்கப்படுவது பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதை சரி செய்வது மிக சிரமமான காரியம் என்றும் கூறுகிறார்கள்.

அன்றாட ஊதியங்கள் தடைபடும். ஏழைகளும் நடுத்தரவர்க்கமும் தங்களின் பணம் வங்கிகளாலும் முதலாளிகளாலும் உறிஞ்சப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பார்களா? ஒருவேளை அவர்கள் எதிர்த்தால் பொருளாதார எமர்ஜென்சி அரசியல் எமர்ஜென்சியாக மாற்றப்படும்.

ஆங்கில மூலம்: Binu Mathew, www.countercurrents.org

தமிழாக்கம்: Rajasangeethan John

Read previous post:
0a
“கமல்ஹாசனை பிரிந்ததற்கு ஸ்ருதிஹாசன் காரணம் அல்ல”: மனம் திறந்தார் கௌதமி!

திருமணம் செய்யாமல், 13 ஆ‌ண்டுகள் நடிகர் கமல்ஹாசனுடன் லிவ்விங் டுகெதராக சேர்ந்து வாழ்ந்த நடிகை கௌதமி, கமலை விட்டு பிரிவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்த பிரிவு‌க்கு ஊடகங்கள்

Close