வீழ்ச்சிப் பாதையில் கமல்ஹாசன்: ஒரு ரசிகனின் உருக்கமான கடிதம்!

நடிகர் கமல்ஹாசனின் சமீபத்திய பேச்சுக்களாலும், செயல்பாடுகளாலும் மனம் வெதும்பிய ஒரு கமல் ரசிகன், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள உருக்கமான கடிதம் இது;-

நரைகூடி கிழப்பருவமெய்தி

பிழைப்புவாதம், ரிபெல்லாக காண்பித்துக்கொள்ள முடியாத அரசியல் சூழல், துரத்தியடிக்கும் பெருங்கனவு, கலைஞர்கள் ஜால்ரா தட்டிய காலத்திலேயே அரசை கேள்வி கேட்ட தைரியம், நாத்திக ரணியன் விஷ்ணு அவதாரத்தை கொன்றதாக காட்சி அமைத்து ‘அரி சொரி’ ‘ அரி சொரி’ என பாடிய துணிச்சல், பலர் சொல்ல மறந்த அல்லது காலாவதியாகிவிட்டது என்று கருதப்படுகிற பகுத்தறிவுவாதத்தை இன்னும் தூக்கி பிடிக்கும் கர்வம் என ஆதரித்து பேசுவதற்கு பல ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும், பேசப்போவதில்லை கமல் சார்! ஏனெனில் இது சீரியஸான விஷயம்.

மார்லன் பிராண்டோவை சிவாஜிக்கு நிகரென சொல்லப்பட்டதால்தான் என்னை போன்ற ஆட்களுக்கெல்லாம் அறிமுகம். Apocalypse Now படத்தை பார்த்து மண்டையை உடைத்துக்கொண்டவன் நான். Godfather படத்துக்கு பிராண்டோவை கப்போலா உத்தேசிக்கையில், அவர் சிக்கலானவர் என பட நிறுவனம் நிராகரித்து, பின் கப்போலாவின் பிடிவாதத்தால்தான் படத்தில் அவர் இடம்பெற்றதாக சொல்வார்கள். அவ்வளவு சர்ச்சை கொண்டவர்தான் அவரும். ஆனால், ஆஸ்கர் விருது வழங்கப்பட்டபோது அவர் செய்த விஷயம் அவரை வெறுத்தவரையும் நேசிக்க வைத்திருக்கும், இல்லையா?

விருதுகளை திருப்பி கொடுக்க வேண்டாம். உங்களை போல் நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லாராலும் நீரின் போக்குக்கு எதிராக நீந்த முடியாது என எடுத்து கொள்கிறோம். ஆனால் விருதுகளை திருப்பிக் கொடுப்பவர்களுக்கு நீங்கள் கற்பிக்கும் நோக்கங்களும், அதற்கு வைக்கும் தீர்வுகளும்தான் பிரச்சனையே. “எதிர்ப்புக் காட்ட ஒரு கட்டுரை போதும்” என்கிறீர்களே, அவ்வளவு மானமுள்ள எதிரிகளுடனா நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்?

இரண்டாம் உலகப்போரின்போது, உலக நாடுகள் பலவற்றை வென்று கொண்டிருக்கும் ஹிட்லர் இந்தியாவையும் பிடித்தால் என்ன செய்வீர்கள் என காந்தியிடம் கேட்டாராம் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர். அதற்கு காந்தி சொன்ன பதில் “உண்ணாவிரதம் இருப்பேன்” என்பது. Britain was answerable to its people at least for the sake of answering. ஆனால் ஹிட்லர் அப்படியா? விஷவாயுவுக்கு அவசியமில்லாமல் செய்துவிட்டார் எனப் பாராட்டி உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பான்தானே! புத்தகங்களை எரிக்கும் கொள்கை கொண்டவர்களா ஒரு கட்டுரைக்கு கலங்கப் போகிறார்கள், என்ன சொல்கிறீர்கள் கமல்?

‘விஸ்வரூபம்’ படக்கதையிலேயே உங்களின் சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது. அதன் இஸ்லாமிய எதிர்ப்பு யாருக்கான சமிக்ஞை? “தூய்மை இந்தியா’ திட்டத்தில் உங்களை இணைப்பதற்கு காரணம் நீங்கள் அவர்களுக்கு natural ally, so உங்களை எளிதாக வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்பதால்தானே!

அரசுக்காக அல்ல, விருது வழங்கிய 12 பேரை அவமதிக்க விரும்பவில்லை என்கிறீர்கள். பல லட்சக்கணக்கானோர் அவமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே, தெரியுமா உங்களுக்கு? சரி, உங்களின் ஆயுதம் கலை தானே! இவர்களை விமர்சித்து ஒரு படம் எடுத்துப் பாருங்களேன். வெளிவருமா? கும்பலைக்கூட விடுங்கள். சென்சார் விடுமா? ஹே ராமுக்கே ஜோதிபாசுதானே கைகொடுக்க வேண்டியிருந்தது.

இன்னும் எத்தனையோ விளக்கங்கள் கூறலாம். ஆனால், நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். Because you are convinced. மனதின் புத்திசாலித்தனமே அதுதான். தேவையின் காரணமாய் நாம் அறிந்தே செய்யும் தவறுக்கு, இருக்கும் அறிவை துணை கொண்டு பல காரணங்களை மனம் கற்பித்துக்கொள்ளும். கேட்கப்படும் கேள்விகளுக்கு அந்த காரணங்களையே தொடர்ந்து சொல்லிச் சொல்லி தப்பித்தும் செல்லும். அதுவரை சாமர்த்தியம் என்றுகூட மொக்கையாக சொல்லி பாராட்டிக்கொள்ளலாம். ஆனால் அந்த தார்மீகத்தை, அந்த காரணங்களை உண்மையென நம்ப ஆரம்பித்துவிடுகிறீர்கள் பாருங்கள், அப்போதுதான் சிக்கல். துறவி வேடம் போட்ட திருடன் கதை போல்.

ராஜ்தாக்கரேவை, ரவிஷங்கரை சந்திக்கிறீர்கள். விளம்பரங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறீர்கள். இந்திய நடிகர் சங்கம் என்கிறீர்கள். உங்களுக்கே தெரியும், உங்கள் செயல்கள் நீங்கள் நம்புபவற்றில் இருந்தும் போதிப்பவற்றில் இருந்தும் வெகுதூரம் வந்துவிட்டன என்று.

வீழ்ச்சியை நீங்கள் பல தடவை சந்தித்திருக்கிறீர்கள். பொருளாதார அல்லது தொழில் ரீதியான தோல்விகள் வீழ்ச்சிகளல்ல. தன்னுடைய தார்மீக பொறுப்புணர்ச்சியிலிருந்து ஒருவன் தடம் மாறுகிறான் பாருங்கள், அதுதான் உண்மையான வீழ்ச்சி. உங்களுக்கு புரிவது போல் சொல்வதாக இருந்தால், Dark Knight படத்திலிருந்து சொல்கிறேன். “You either die a hero or you live long enough to see yourself become the villain. நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள், “I’m a hero and I’m a villain’ என்று. சற்று பயமாகத்தான் இருக்கிறது.

இருந்தாலும் ரசிகன் என்பதால் சொல்கிறேன், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்’!

– ராஜசங்கீதன் ஜான்