10 எண்றதுக்குள்ள – விமர்சனம்

செய்தியாளர்களுக்கென இப்படம் திரையிடப்பட்ட திரையரங்கில் ஏ.சி. கம்மியாக இருந்தது. “ஏ.சி.யில் கொஞ்சம் பிராப்ளம். பொறுத்துக்கங்க. 10, 20 நிமிஷத்துல கூல் ஆகிவிடும்” என்று அறிவித்தார் திரையரங்கு நிர்வாகி. படம் ஆரம்பமானது முதல் வெக்கை அதிகரித்துக்கொண்டே தான் போனதேயொழிய குறைந்தபாடில்லை. ஏ.சி. சரியாகிவிட்டபோதிலும், படத்தால் தான் அத்தனை புழுக்கம்! உட்காரவே முடியவில்லை…!

வடஇந்தியாவில் உள்ள உத்திரகாண்ட் மாநிலத்தில் சாதிக்கொடுமை தலை விரித்தாடுகிறது. அங்கே கீழ்சாதியைச் சேர்ந்த 40 அப்பாவிகளை மேல்சாதிக் கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்கிறது. இந்த ஓப்பனிங் காட்சியோடு போட்டது போட்டபடி கிடக்க, உத்தரகாண்டை விட்டு வெளியேறும் கதை, சென்னைக்கு தாவுகிறது.

சென்னையில் காரில் பறத்தல், துரத்தலுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு விரைதல், எதன்மீது இடித்து விழுந்தாலும் உருண்டு புரண்டு எழுந்து ஓடுதல் என சிறுபிள்ளைத்தனமான, வீடியோ கேம் போன்ற கார் சாகசம் செய்பவனாக அறிமுகம் ஆகிறான் நாயகன் “ஜேம்ஸ் பாண்டு” (விக்ரம்). (நாயகனுக்கு அவனது அப்பனும் ஆத்தாளும் அசிங்கமான பெயர் வைத்திருப்பார்கள் போல! படத்தில் எந்த இடத்தில் யார் கேட்டாலும் தன் உண்மையான பெயரைச் சொல்லாமல், தன்னை “ஜேம்ஸ்பாண்டு” என்றோ, அல்லது வெறுமனே “பாண்டு” என்றோ கூறிக்கொள்கிறான். படம் முடியப்போகும் தறுவாயில், ஆடியன்சுக்கு கேட்காதபடி நாயகியின் காதுக்குள் ரகசியமாக அவன் தன் நிஜப் பெயரை சொல்ல, அவள் “ச்சீ…” என்று முகம் சுளிக்கிறாள்!)

கார் சாகசம் செய்யும் நாயகன் சர்க்கஸ்காரனாக இருப்பானோ என்று நினைத்தால், அதுதான் இல்லை. டிரைவிங் ஸ்கூலில், டிரைவிங் கற்றுக்கொள்ள வரும் ‘எல்’ போர்டுகளுக்கு டிரைவிங் சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராம் அவன்! அதோடு, தாஸ் (பசுபதி) என்ற கெட்டவனுக்காக, அவன் சொல்லும் கார்களை கடத்திக்கொண்டு வந்து கொடுத்து, சில ஆயிரங்களை கூலியாக பெற்றுக்கொள்பவனாகவும் இருக்கிறான்.

ஒரு காரை ஓட்டிச் சென்று, உத்திரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் வேறொரு கெட்டவனிடம் ஒப்படைத்து வருமாறு நாயகனுக்கு கட்டளையிடுகிறான் தாஸ். அந்த காருக்குள் நாயகி ஷகீலா (பிட்டு பட நாயகியின் பெயர்தான் இந்த படத்தில் வரும் ஒரு

சமந்தாவின் பெயர்!) மயக்க நிலையில் கிடத்தப்பட்டிருப்பது நாயகனுக்குத் தெரியாது. ஷகீலாவை ஏன் கடத்துகிறார்கள்? இந்த கடத்தல் பயணத்தின்போது நாயகனுக்கும், நாயகிக்கும் காதல் ஏற்படுவது எப்படி? நாயகன், நாயகி, உத்திரகாண்ட் தலித் விவகாரம் – இவற்றுக்கிடையே எப்படி முடிச்சுப் போடப்படுகிறது? உத்திரகாண்ட் தலித் பிரச்சனையை நாயகன் ஒரு ஃபைட் சீக்வன்ஸ் மூலம் நொடிப்பொழுதில் தீர்த்து வைத்துவிட்டு, நாயகியுடன் பத்திரமாக எப்படி சென்னை திரும்புகிறான்? என்பது மீதிக்கதை.

முன்பின் தெரியாதவர்களுக்கு இந்த படத்தில் வரும் விக்ரமை காட்டி, “இவர்தான் தேசிய விருது பெற்ற நடிகர்; முந்தைய ‘ஐ’ படத்தில் சிறப்பாக நடித்து பெயர் வாங்கியவர்” என்று சொன்னால், உங்கள் தோலை உரித்து தொங்கப்போட்டு விடுவார்கள். விக்ரமுக்கு சவாலான கதாபாத்திரம் இதில் இல்லை. இந்த படத்துக்கு விக்ரம் தேவையே இல்லை. ஏதோ கேமராவுக்கு முன்னால் வந்து போனோமா… கல்லா கட்டினோமா… என்ற நினைப்பில், ஏனோதானோ என்று ஒப்பேற்றிவிட்டுப் போயிருக்கிறார் விக்ரம்.

சமந்தாவுக்கு இதில் இரட்டை வேடம். ஷகீலாவாக வரும் சமந்தா ‘நடிக்கிறேன்’ என்ற பெயரில் ஓவர் ஆக்டிங் பண்ணி பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார் என்றால், உத்திரகாண்ட் கொலைகாரியாக வரும் சமந்தா நம்மை சாகடிக்கிறார். வில்லி கதாபாத்திரம் அவருக்கு செட்டாகவில்லை. வில்லியாக அவரை பார்க்க சகிக்கவில்லை.

தலித் பிரச்சனையை இத்தனை கேவலமாக, இத்தனை போலியாக கையாண்ட ஒரு தமிழ் மசாலா படம்கூட இதுவரை வந்ததில்லை. பிரயாண கதையை படமாக்குவதில் சில பிளஸ்களும், சில மைனஸ்களும் இருக்கும். ஆனால், இந்த படத்தில் பிளஸ்ஸே இல்லை. எல்லாம் மைனஸ் தான். இதில் வரும் நாயகன் – நாயகி காதல் மட்டுமல்ல, அண்ணன் – தங்கை பாசம்கூட மனதில் ஒட்டவில்லை. குப்பையான கதை, எந்த மெனக்கெடலும் இல்லாத திரைக்கதை என இஷ்டத்துக்கு ஜல்லி அடித்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் 2 விஜய் மில்டன்கள் இருக்கிறார்கள். ஒருவர், ‘அழகாய் இருக்கிறாய் பயமாக இருக்கிறது’ என்ற படத்தை இயக்கி, ரசிகர்களை தலை தெறிக்க ஓடவிட்ட விஜய் மில்டன். இன்னொருவர் ‘கோலி சோடா’ என்ற படத்தை இயக்கி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற விஜய் மில்டன். இந்த ’10 எண்றதுக்குள்ள’ படத்தை ‘அழகாய் இருக்கிறாய் பயமாக இருக்கிறது’ விஜய் மில்டன் இயக்கியிருக்கிறார். ‘கோலி சோடா’ விஜய் மில்டன் அடுத்த படம் எப்போது தருவார்? தெரியவில்லை! காத்திருப்போம்!

’10 எண்றதுக்குள்ள’ – தலைப்பு நல்லா இருக்கு! தலைப்பு மட்டும் தான் நல்லா இருக்கு…!

.