சலார் பார்ட் 1 : சீஸ் ஃபயர் – விமர்சனம்

நடிப்பு: பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: பிரசாந்த் நீல்

இசை: ரவி பஸ்ரூர்

ஒளிப்பதிவு: புவன் கவுடா

படத்தொகுப்பு: உஜ்வல் குல்கர்னி

தயாரிப்பு: ‘ஹோம்பாலே பிலிம்ஸ்’ விஜய் கிரகந்தூர்

தமிழ்நாடு வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

‘பாகுபலி’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நாயகனாக நடித்து பான்-இந்தியா நடிகராக புகழின் உச்சம் தொட்ட பிரபாஸும், ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கி பான்-இந்தியா இயக்குநராக பிரசித்தி பெற்ற பிரசாந்த் நீலும் இணைந்துள்ளதால், ‘சலார் பார்ட் 1’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும், அனைத்து மொழிகளின் திரைத்துறையினர் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பை ‘சலார் பார்ட் 1’ பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்…

0a1e

இந்தியாவின் அருகில் உள்ள கற்பனை நாடு கான்சார். இங்கு வாழும் மூன்று பழங்குடி சமூகங்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு, பல நூறு ஆண்டுகளாக  ஒற்றுமையாக தங்களைத் தாங்களே அரசாட்சி செய்து வருகின்றன. இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களால் கூட கான்சார் நாட்டை வெல்ல முடியவில்லை.  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்குக் கட்டுப்படாமல், தனி ராணுவம், தனி சட்டதிட்டங்களுடன் கான்சாரில் சுதந்திரமான தனியாட்சி நடந்து வருகிறது.

கான்சார் அரசர் சிவ மன்னார் இறப்புக்குப் பிறகு, ஒப்பந்தப்படி அடுத்து அரியணை ஏற வேண்டிய மற்றொரு பழங்குடி சமூகத்தின் தலைவரை மட்டுமின்றி, அச்சமூகத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களையும் கொன்றுவிட்டு அரியணையில் அமர்கிறார் சிவ மன்னாரின் மகன் ராஜ மன்னார் (ஜெகபதி பாபு).

அரசர் ராஜ மன்னாரின் இரண்டாவது மனைவியின் மகன் வரத மன்னாரும் (பிருத்விராஜ் சுகுமாரன்), தேவாவும் (பிரபாஸ்) பால்ய சினேகிதர்கள்; உயிர் நண்பர்கள். இருவரும் பத்து வயது சிறுவர்களாக இருக்கும்போது, தேவாவின் அம்மா (ஈஸ்வரி ராவ்) உயிரை, தன் தந்தையின் கட்டளையையும் மீறி காப்பாற்றுகிறான் வரத மன்னார். “நாம் இங்கிருந்து போய்விடுவோம். இனி இந்த நாட்டுக்கு வரவே கூடாது” என சத்தியம் செய்யச் சொல்லும் அம்மாவையும் மீறி, “நீ எப்போது அழைத்தாலும் நான் திரும்பி வருவேன்” என தன் நண்பன் வரத மன்னாருக்கு வாக்குறுதி அளித்துவிட்டு, அம்மாவுடன் கான்சாரை விட்டு தப்பிச் செல்கிறான் சிறுவன் தேவா.

பல வருடங்களுக்குப் பிறகு, தன் தாயின் அஸ்தியை கரைப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தன் தந்தைக்குத் தெரியாமல் இந்தியாவுக்கு வருகிறார் இளைஞி ஆத்யா (ஸ்ருதி ஹாசன்). அவரை கடத்தி கொலை செய்யும் திட்டத்துடன் ஒரு கும்பல் பின்தொடர்கிறது. ஆத்யாவின் தந்தை தன் கூட்டாளியான பிலாலிடம் (மைம் கோபி) விஷயத்தைச் சொல்லி, தன் மகளை காப்பாற்றுமாறு வேண்டுகிறார். அசாமில் உள்ள டின் சுகியா எனும் தொலைதூர கிராமத்தில் தனது அம்மாவுடன் வசித்துவரும் இளைஞன் தேவாவிடம் ஆத்யாவை காப்பாற்ற உதவி கேட்கிறார் பிலால். அவருக்கு உதவ முன்வரும் தேவா, ஆத்யாவை தன் வீட்டிலேயே பாதுகாப்பாக வைக்கிறார்.

இதனிடையே, கான்சார் அரசர் ராஜ மன்னார், தனக்கு அடுத்து அரசராக தன் இரண்டாவது மனைவியின் மகன் வரத மன்னாரை அறிவிக்க நினைக்கிறார். அவரது இந்த முடிவு, கன்சார் அரசின் அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஆட்சியை கவிழ்க்கவும், வரத மன்னாரை கொல்லவும் உலகம் முழுவதுமிருந்து பல்வேறு படைகளைத் திரட்டுகிறார்கள். ஆனால் வரத மன்னார், இத்தனை படைகளையும் எதிர்க்க தனது சிறுவயது நண்பனான தேவாவை அழைக்கிறார்.

நண்பன் வரத மன்னாரின் அழைப்பை ஏற்று கான்சாருக்குத் திரும்புகிறார் தேவா. எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து அவர் தன் நண்பனை காப்பாற்றினாரா? தேவாவுக்கும் கான்சாருக்கும் உள்ள உறவு என்ன? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘சலார் பார்ட் 1 : சீஸ்ஃபயர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் தேவாவாக வரும் பிரபாஸ் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசமாக நடித்து பின்னி பெடலெடுத்திருக்கிறார். இரண்டாவது நாயகன் வரத மன்னாராக வரும் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு நடிக்க வாய்ப்பு அதிகம் என்பதால், அதை திறமையாக பயன்படுத்தியுள்ளார். நாயகி ஆத்யாவாக வரும் ஸ்ருதிஹாசனுக்கு அதிக வேலை இல்லை என்பதால் அதிக முக்கியத்துவமும் இல்லை. நாயகன் தேவாவின் நண்பன் பிலாலாக வரும் மைம் கோபி, அம்மாவாக வரும் ஈஸ்வரி ராவ், அரசர் ராஜ மன்னாராக வரும் ஜெகபதி பாபு, அவரது மகள் ராதா ராம மன்னாராக வரும்  ஸ்ரேயா ரெட்டி, பாரவாவாக வரும் பாபி சிம்ஹா, ரங்காவாக வரும் ஜான் விஜய் மற்றும் தேவராஜ், ராமச்சந்திர ராஜு, ரமணா என படத்தில் எக்கச்சக்கமான நடிகர்கள் இருப்பதால், பார்க்கவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் அலுப்புத் தட்டுகிறது.

படத்தின் கதை பல கிளைக்கதைகளுடன் பரந்து விரிந்து செல்வதால், அதை புரிந்துகொள்ளவே ரசிகர்கள் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. மேலும், லாஜிக் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் தொழில் நுட்பத்தையும் ஆக்ஷனையும் மட்டுமே நம்பி மிரட்டியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். அது முதல்பாதி வரை ரசிக்கவும் பிரமிக்கவும் வைக்கிறது. பிரபாஸின் மாஸ் காட்சிகளுக்கு கைதட்டல்களும் கிடைக்கின்றன. ஆனால், பின்பாதியை விவரிக்கும் கதையின் நீளமும் ரத்தக்களறி சண்டைக் காட்சிகளும் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை சோதிக்கின்றன.

பின்னணி இசையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் ரவி பஸ்ரூர். பாடல்கள் பெரிதாக வொர்க்-அவுட் ஆகவில்லை. படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னி படத்தின் நீளத்தைக் குறைக்க மறந்து தூங்கிவிட்டாரோ, என்னவோ! ஒளிப்பதிவாளர் புவன் கௌடாவின் விஷுவல்ஸ் அப்படியே கேஜிஎஃப் எபெக்ட்; புதுமை ஏதுமில்லை.

‘சலார் பார்ட் 1 : சீஸ் ஃபயர்’ – அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், அதிரடி ஆக்‌ஷனை விரும்பும் ரசிகர்களை நிச்சயம் முழுமையாக திருப்திப்படுத்தும்!