கழுகு 2 – விமர்சனம்
கொடைக்கானலில் செந்நாய்கள் அதிகம் இருக்கும் காட்டுப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட எம்எல்ஏ உதவியுடன் டெண்டர் எடுக்கிறார் ஒரு கான்ட்ராக்டர். செந்நாய் பயத்தால் மரம் வெட்ட தொழிலாளர்கள் வர பயப்படுவார்கள் என்பதால் வேட்டைக்காரர்களை அழைத்து வர தேனி செல்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அங்கு போலீசாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடி வரும் கிருஷ்ணா, காளியை வேட்டைக்காரர்கள் என்று எண்ணி கொடைக்கானல் அழைத்து வருகிறார். போலீசிடமிருந்து தப்பித்தால் போதும் என்று அவர்களும் கொடைக்கானல் வருகின்றனர். துப்பாக்கி சுடத் தெரியாமலே வேட்டைக்காரர்கள் போல் இருவரும் சமாளிக்கின்றனர். ஒருமுறை பிந்து மாதவியை செந்நாய்கள் சுற்றி வளைத்ததும் அதை விரட்ட முடியாமல் திணறும் கிருஷ்ணா பின்னர் பிந்துமீது பாயும் நாயை அடித்துக்கொள்கிறார். இதனால் கிருஷ்ணாவின் வேட்டைக்காரன் வேஷம் கலைகிறது. அதைச் சொல்லி கிருஷ்னாவை விரட்டப்போவதாக பிந்து மிரட்ட நான் அனாதை, சாப்பாட்டுக்கு வழியில்லை என்று சென்டிமென்டாக பேசி பிந்து மாதவி மனதில் இடம்பிடிக்கிறார். இதற்கிடையில் எம்எல்ஏ காட்டுக்குள் ஒரு புதையலை கண்டுபிடிக்கிறார். அந்த விஷயம் கிருஷ்ணாவுக்கு தெரிய வர அதை திருடி செட்டிலாக எண்ணுகிறார். கிருஷ்ணாவின் எண்ணம் ஈடேறியதா என்பதற்கு விடைசொல்கிறது படம்.
கிருஷ்ணா பிந்துமாதவி நடித்த கழுகு முதல் பாகத்துக்கும் 2ம் பாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த படத்தில் மலை உச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல்களை மீட்டு வரும் வேடத்தில் நடித்திருந்த கிருஷ்ணா இப்படத்தில் திருடனாக நடித்திருக்கிறார். 2ம் பாகம் என்றாலே முதல்பாகத்தை ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க முடியாது. கரடு முரடான காட்டுப்பகுதியில் தடுமாற்றமின்றி நடப்பது, பிந்து காதலை சொல்லும்போது ஏற்க மறுப்பது, எம்எல்ஏ வீட்டில் கொள்ளையடிக்க தொண்டர்போல் செல்வது என காட்சிக்கு தேவையான நடிப்பு தந்திருக்கிறார் கிருஷ்ணா . அதேசமயம் முதல் பாகத்தில் பள்ளத்தில் இறங்கி கஷ்டப்பட்டு ஆளை தூக்கி வருவதுபோன்ற கடினமான வேலையெல்லாம் கிருஷ்ணாவுக்கு இல்லை அதேசமயம் பிந்துமாதவியிடம் கொஞ்சம்அதிமாகவே வேலை வாங்கியிருக்கிறார்கள்.
செந்நாய் பிரச்னையும் ஆரம்பத்தில் பிரதானமாக காட்டிவிட்டு அதற்கடுத்து ஓரிரு காட்சியில் மட்டுமே காட்டிவிட்டு அத்தோடு அந்த எபிசோடையே ஏறக்கட்டிவிடுகிறார் இயக்குனர். திடீரென்று எம்எல்ஏ கண்டுபிடிக்கும் முதுமக்கள் தாழி புதையல் விவகாரம் கதைக்களத்தை திருப்பிப்போடுகிறது. அதைவைத்தே கிளைமாக்ஸையும் முடித்திருப்பது இயக்குனர் சத்ய சிவாவின் புத்திசாலித்தனம் என்றாலும் முக்கிய கதாபாத்திரங்களை காணாமல் செய்வது ரசிகர்களை ஏமாற்றுகிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் 2 பாடல்கள் ரீங்காரமிடுகின்றன. மேலும் ஒன்றிரண்டு பாடலுக்கான அருமையான லொகேஷன் இருந்தும் வாய்ப்பை மிஸ் செய்திருக்கிறார்கள்.
ராஜா பட்டாச்சார்யாவின் கேமரா கொடைக்கானல் காட்டுப்பகுதியில் வித்தைகாட்டியிருக்கிறது. நெடு நெடுவென வளர்ந்த மரங்கள் சாயும்போது மலைப்பு.
கழுகு 2- உயரத்தில் பறக்கவில்லை.