சர்கார் – விமர்சனம்

‘சர்கார்’ படம் இன்று (நவம்பர் 8ஆம் தேதி) ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். மிகச் சரியாக இருந்திருக்கும்.

அரைகுறை அறிவுடன், “எல்லாமே தவறு” என திராவிட கட்சிகளை விமர்சிக்கும் apolitical @ பாஜக குரலில் பேசும் ‘சர்கார்’, கருப்பு பணத்தை ஒழிப்பதாகப் பேசி மொத்த நாட்டின் சேமிப்புப் பொருளாதாரத்தையும் நாசம் செய்து, கார்ப்பரெட்டுக்கு வேலை செய்து கொடுத்த மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒப்பானது. திராவிடத்தை ஒழிக்க விரும்பும் இந்தியாவின் கார்ப்பரெட் கிரிமினல் மோடி!

படத்தின் அரசியலுக்கு பின்னால் வருவோம். பட உருவாக்கம் ஏதோ லட்டாக இருப்பதாக பேசப்படுவதை முன்னால் பேசுவோம்.

சுந்தர் கதாபாத்திரம் சென்னைக்கு வரவிருப்பதை கேள்விப்பட்டு ஒரு ஐ.டி. நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்கள் வேலை செய்யாமல் நின்றுகொண்டு அக்கதாபாத்திரத்தைப் பற்றி முதலாளியிடம் சிலாகித்துக் கொண்டிருக்கின்றனர். “அவர் பயங்கரமான ஆள்”, “போட்டிய அழிச்சு ஒழிச்சிடுவார்” என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கும் சிலாகிப்பில், ஜெயமோகனுக்கு விஜய் மீது என்ன ஆத்திரமோ… “He is a monster” என எழுதி இருக்கிறார். பட உருவாக்கம்!

Infoware நாராயணன் அலுவலகத்தில் ராதாரவியுடன் பேசும் காட்சியில் விஜய் சிகரெட் எடுக்கிறார்; தடவுகிறார்; மீண்டும் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை வாயால் எடுக்கிறார்! Continuity Assistant என்ன செய்தார் என தெரியவில்லை. முருகதாஸ் என்ன செய்திருப்பார் என தெரியும். Continuity assistantக்காவது வேலை தெரிந்திருக்க வேண்டாமா?

படம் முடிகையில், “வெறும் current affairs வச்சி படம் எடுத்திருக்காங்க” என்றேன். தோழி சொன்னாள், “Just not current affairs; Vomit of current affairs!” என. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு சமகால நிகழ்வு. அதை கோர்க்கும் திறனிலாவது ஒழுங்கு இருக்கிறதா என்றால்… ம்ஹும்!

கந்துவட்டி கொடுமையில் எரிந்த குடும்பத்தை, தீ வைக்கும்போது கூட அசையாமல் குழந்தை உட்பட அனைவரும் நிற்பதாகக் காட்டியிருக்கிறீகளே, இவ்வளவு கேவலமாகவும் அருவருப்பாகவும் ஒரு சமூகத் துயரை exploit செய்திருக்கும் மானங்கெட்ட இயக்குநன் சொல்கிறான், “இலவசம் தப்பு” என!

இதற்குள் திரைக்கதை மயிரு, மட்டை என்பதெல்லாம் தேடுவது குப்பையில் கோமேதகத்தைத் தேடும் வேலை. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு சமகால நிகழ்வுக் கதை. கள்ள ஓட்டு கதை, டெங்கு கொசு கதை, அப்பொலோ கதை, கண்டெயினர் கதை, விவசாயி கதை என ஒவ்வொரு காட்சியிலும் ஒரு கதை. அதிலும் “மீனவக் குடும்பத்தை சார்ந்தவன்” என தன்னை சொல்லிக் கொள்வதிலெல்லாம், “அடேய்” எனக் கத்தி, நிறைய கெட்டவார்த்தைகள் போட்டுக் கொள்ளலாம்.

உலகின் ‘ஒன்றாம் நம்பர்’ கார்ப்பரெட்டை கழுகாய் சுற்றிக் கொண்டிருக்கும் ஊடகங்கள், திடீரென இயக்குநர் சொன்னதும் காணாமல் போய்விடுகின்றன. கூடவே, ‘ரெண்டாம் நம்பர்’ என சுற்றிக் கொண்டிருந்தவருடன் சேர திடீரென “கழகங்களின் இணைப்பு” என விழா எடுக்கப்படுகிறது. ஈபிஎஸ் @ ஓபிஎஸ் @ ஜெயலலிதா @ எம்ஜிஆர் @ கருணாநிதி @ பழ.கருப்பையாவுக்கு எதிரியான விஜய் பைக்கில் வந்து, மேடை ஏறி, கருப்பையாவுக்கு அருகில் சென்றமர்ந்து, குறைந்தது ‘பத்து நிமிஷம்’ பேசிக் கொண்டிருக்கிறார் – கழக உறுப்பினர்களின் எந்த இடையூறும் இல்லாமல். “ஒரே மேடையில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறும் வீரம் பெற்றவன்” எனப் பேசி, கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்தவரின் சைக்கிளில் ஏறிச் செல்லும் வடிவேலுவின் காமெடி காட்சியில் இதைவிட லாஜிக் சரியாக இருக்கும். கடைசி பாடலில், ‘காலா’ படம் போல் போட்டு வரும் கறுப்பு சட்டை, சிவப்பு சட்டை இத்யாதி. “யோவ், முருகதாஸ்… இன்னும் நீ எதுல இருந்துதான்யா திருடல!”.

கதையின் அரசியலுக்கு வருவோம். “ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸை தான் அடிக்கப் போறோம் ப்ரோ!” என மாறனிடம் கதை சொல்லி ஒப்புதல் வாங்கிவிட்டு, ‘வெட்டாட்டம்’ கதையை ஒரு வாறாக மழைச்சாரல் போல் தூவிவிட்டு, போகிற போக்கில் “இலவசங்களை வாங்க ஓடுன இந்த கால்களை அடிங்க!”, “மெரிட்ல் பாஸாகி, ஒண்ணாம் நம்பர் நாட்டுல ஒண்ணாம் நம்பர் கம்பெனில இருக்கேன்!” என்றெல்லாம், திராவிட அரசியலை வாரிவிட்டு பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஜெயமோகன வேலை செவ்வனே செய்யப்பட்டிருக்கிறது.

பை தெ வே விஜய் ப்ரோ… அதென்ன ஆக்டிங்கற பேர்ல, சுட்டி டிவி கார்ட்டூன் மாதிரியெல்லாம் ரியாக்சன் கொடுக்கறீங்க? தலைய ஆட்டுறது, கையைத் தூக்குறது, வாய் கிழியப் பேசுறது, நெளியறது எல்லாம் என்ன பாஸ்.. ஆக்டிங்கா? ஹெஹே.. உவாஹ்ஹாஹா.. ஹா ஹா.. ஐ’ம் ஸ்டில் வெயிட்டிங்!

ஆம் ஆத்மி கட்சியின் NGO அரசியல் பாணியில் apolitical வேட்பாளர்கள் தேர்வு நடக்கிறது. நடத்துவது யாரென்றால், உலகின் நம்பர் ஒன் கார்ப்பரெட். உண்மையில் சொல்வதானால், இதுவே அற்புதமான ஒன் லைன். ஆனால் படத்தில் இந்த லைன் சரியென காண்பிக்கப்பட்டிருக்கிறது! கனடா சென்று போட்டி கம்பெனியை மூடி 22000 தொழிலாளர்களை வேலை இல்லாமல் ஆக்கியவர், தொழிலாளர்களுக்காக போராடும் ஒருவரை இந்தியாவில் வேட்பாளராக அறிவிக்கிறார். ஹைட்ரோ கார்பன், மீதேன், சிங்கள கடற்படை என்றெல்லாம் பேசிவிட்டு மாநில அரசை மாற்றுவதற்கே நாயகன் வேலை பார்க்கிறார். மத்திய அரசு பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை? பாஜகவை சுட்டக் கூடிய ஒரு காட்சி, ஒரு வசனம்? ம்ஹும்!

இருக்காது. ஏனெனில் நாயகன்தான் கார்ப்பரெட் கிரிமினல் அல்லவா? கார்ப்பரெட்டை தூக்கிக் கொண்டாடி, தொடர்ந்து மக்களுக்கெதிரான கிரிமினல் நடவடிக்கைகளைச் செய்துகொண்டு, வாய் கிழிய முழங்குபவனை, எவன் கொண்டாடுவான்… பா.ஜ.க.காரனைத் தவிர?

“கள்ள ஓட்டு தவறு” என பேசும் நாயகனுக்கு “கள்ள மிஷின்” பற்றி தெரியாது போல, பாவம்.

இந்த “எல்லாமே தப்பு” என பேசிக்கொண்டு, apoliticalஆக சிந்திப்பதாக காண்பித்துக்கொண்டு, சித்தாந்தம் ஏதும் இல்லாத NGOக்களுக்கு சாமரம் வீசும் கும்பல்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்.

‘மித்ரோன்!’ தான் இலக்கு!

இலவசங்களைP பற்றி பேச விரும்பவில்லை. முடிந்தால் Amartya Sen, Scandinavian model economy என்றெல்லாம் கூகுளிடவும். ஏனெனில், ‘A few good men’ படத்தில் வரும் வசனம்தான்.

“I have neither the time nor the inclination to explain myself to a man who rises and sleeps under the blanket of the very freedom that I provide, and then questions the manner in which I provide it! I would rather you just said “thank you”, and went on your way. Otherwise, I suggest you pick up a weapon, and stand a post. Either way, I don’t give a damn!”

“இடஒதுக்கீட்டால் நன்னா படிச்சும் டாக்டராக வாய்ப்பில்லாம பிராமணாள் செத்துட்டா”ன்னு படம் எடுத்த ‘ஷங்கர் –சுஜாதா’க்களின் வழித்தோன்றியவர்கள் வாசிக்கும் மகுடிகளுக்கு நீங்கள் மயங்குங்கள். நாங்கள் மாட்டோம்.

இதை திமிர் என நினைத்தால், ஆம்… திமிர்தான். திராவிடத்திமிர்! வரலாற்றுணர்ச்சியின் மமதை!

ராஜசங்கீதன்

ஊடகவியலாளர்

 

 

 

Read previous post:
0a1a
சமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)

1990-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை வழக்கம் போல் காலை 11 மணிக்கு கூடுகிறது. ஆனால், அது வழக்கமான நாடாளுமன்றக் கூட்டமாக இல்லாமல்,

Close