சமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)

1990-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை வழக்கம் போல் காலை 11 மணிக்கு கூடுகிறது. ஆனால், அது வழக்கமான நாடாளுமன்றக் கூட்டமாக இல்லாமல், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கான ஒரு உரிமை அறிவிப்பை செய்த அரசும் அதன் தலைமை அமைச்சரும் நீடிக்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய்யும் நாளாக அமைந்தது.

சரியாக 11.11 மணிக்கு மக்களவைத் தலைவர் ரபி ராய், அன்றைய முக்கிய அலுவலை தெரிவிக்கிறார். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்களவை விவாதிக்கும் என்று அறிவித்தார்.

பிரதமர் வி.பி.சிங் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து அதற்கான காரணத்தை விரிவாக தெரிவித்தார். தன்னுடைய பேச்சில், வி.பி.சிங் தெரிவித்த கருத்தின் சாராம்சம் இதுதான்:

வி.பி.சிங் பேசுகிறார்:

“இன்றைய விவாதத்தில் நான்கு அடிப்படை விசயங்கள் உள்ளன. அவையாவன:

  1. தனிமனிதனின் மத நம்பிக்கை, அரசியலமைப்புச் சட்டத்தைவிட மேலானதா? அல்லது அரசியலமைப்பு உருவாக்கியுள்ள அமைப்பைவிட மேலானதா?
  2. இந்திய நாட்டில் மதரீதியாக மக்கள் பிளவுபட வேண்டுமா?
  3. அரசியலில் மதம் கலப்பது விரும்பத்தக்கதா?
  4. இந்த நாட்டின் உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பு பாதுகாக்கப்பட வேண்டுமா, வேண்டாமா?

அதிகாரமா அல்லது கொள்கையா என்ற நிலை எங்கள் முன்னால் வந்தபோது, அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிராமல், கொள்கை சார்ந்தே இருப்பதுதான் சரியானது என முடிவு செய்தோம். கொள்கையில் சமரசம் செய்து கொண்டிருந்தால் நாங்கள் அதிகாரத்தை தக்க வைத்திருக்க முடியும்.

இந்த நான்கு விசயங்களிலும் நாங்கள் சமரசம் செய்துகொண்டிருந்தால், எங்கள் அரசு நீடித்திருக்கும். ஆனால், அரசு பிழைக்க வேண்டுமா அல்லது நாடு பிழைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

ராமஜென்ம பூமி, பாபர் மசூதி பற்றிய பிரச்சினை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த பிரச்சினை பற்றி நாம் எதுவும் புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், அலகாபாத் நீதிமன்றம் இந்த சர்ச்சைக்குரிய இடம் பற்றிய பிரச்சினையில், இப்போது உள்ள அதே நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது. அப்படியானால், பாபர் மசூதி அல்லது அங்கே உள்ள கட்டமைப்பு தகர்க்கப்படக் கூடாது என்பதேயாகும். இறுதியான தீர்ப்பு வரும்வரையில், எந்த வகையிலும் கட்டமைப்பு அழிக்கப்படாமல் இருத்தல் வேண்டும்; அதேபோன்று, ராமனை பூசை செய்வதற்கும் எந்த குறுக்கீடும் இருக்கக் கூடாது என்பதாகும்.

ஒருவரின் மத நம்பிக்கை, அரசியலமைப்பு சட்டத்தைவிடவும், நீதிமன்றத்தை விடவும் மேலானது என்பதாக ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அரசைவிட மேலானது என்றால், அது மதகுருமார்கள் அல்லது எதேச்சதிகார அரசில் தான் சாத்தியப்படும்.

அரசியலையும், மதத்தையும் கலப்பது என முடிவு செய்தால், நாட்டில் மதரீதியாக பிளவுகள் உருவாகும். அவ்வாறு உருவானால், பஞ்சாப், காசுமீர், வட இந்தியாவில் அதன் பாதிப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? ராணுவத்தில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும்?

மண்டல் குழு அறிக்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக நாங்கள் எடுத்த சில நடவடிக்கைகளுக்கு, எதிர்ப்பு இருந்தது. தற்போதைய பிரச்சினைக்குப் பின்னால் இதுவும் ஒரு காரணம்.

ஆயிரம் ஆண்டு பழமைவாத முறையை நாங்கள் எதிர்த்து போராடி வருகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். அவ்வாறு எதிர்க்கும்போது, சிக்கல்களுக்கு ஆளாவோம் என்பதில் அய்யமில்லை.

நான் நிதி அமைச்சராக இருந்தபோது, என்னுடைய கருத்துகள், பொருளாதார அமைப்போடு மோதும் நிலை ஏற்பட்டது. அதனால் அந்த பதவியில் இருந்து நான் விலக வேண்டியிருந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, எனது கருத்துகள், அரசியலமைப்போடு மோதும் நிலை ஏற்பட்டது. மீண்டும் நான் அந்த பதவியில் இருந்து விலகினேன். நான் இப்போது பிரதமராக உள்ளேன். எனது சிந்தனைகள் தற்போதைய சமூக அமைப்பிற்கு மாறாக உள்ளது. நான் இப்பதவியில் இருந்தும் விரைவில் விலக வேண்டும் என சொல்லப்படுகிறது.

எனினும், நான் இதைப்பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் அய்ந்தாண்டு காலம் முடிப்பதற்காக இந்த அமைப்பின் முன் மண்டியிட வேண்டும் என்ற வரம்பு கிடையாது. நாங்கள் அதிகாரத்தில் இருந்து விலகி, வெளியில் இருந்து அநீதிக்கெதிராக தொடர்ந்து போராடுவோம்.

நாங்கள் நூற்றுக்கணக்கான தேர்தல்களில் போட்டியிடுவது பற்றி கவலைப்படவில்லை. ஆனால், நாங்கள் நீதிக்கான பாதையை ஒருபோதும் கைவிட மாட்டோம்.

நலிந்த மக்கள் அதிகார அமைப்பில் பங்குபெற வேண்டும்; இந்த அவையிலோ அல்லது நிர்வாகத்திலோ பங்கு பெறாமல் அவர்களது பிரச்சினைகள் தீராது என்பது எனது கருத்தாகும். ஆகவே அவர்கள் நாட்டின் நிர்வாகத்தில் பங்கு பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் நிர்வாகத்தில் பங்கு பெறாமல், வெறும் விவாதங்கள் மட்டும் நடக்கும் என்றால் அது வீண்தான்; அவர்கள் தொடர்ந்து நிரகாரிக்கபடுவார்கள்.

எங்களது மனதிற்கு உகந்த காரணங்களுக்காக எங்கள் போராட்டம் தொடரும். சுரண்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து போராடுவோம். பாதிக்கப்பட்ட மக்கள் போராட தயாராக வேண்டும். சட்டங்களை இயற்றுவதன் மூலம் ஒரு நாட்டின் வரலாற்றை மாற்ற முடியாது. அவ்வாறு அவர்கள் வெளியில் வந்து போராடும்போதுதான் வரலாறு உருவாகும். நாங்கள் தொடர்ந்து போராட உறுதி பூண்டுள்ளோம்.”

தொடர்ந்து, அவரது கருத்தை ஆதரித்து, அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த பேராசிரியர் மது தண்டவதே கூறியதாவது:

“இந்த நாட்டில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் ஒற்றுமைக்கான புதிய எழுச்சியை நாங்கள் கண்டோம். ஒடுக்கப்பட்ட பிரிவினரின் எழுச்சியுற்ற ஒற்றுமையும் அவர்களது உறுதியையும் கண்டு சிலர் பயந்தனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் ஒன்றுபட்ட உறுதியை அழிக்கக்கூடிய ஒரே வழி, ஒரு புதிய இந்து அலை உருவாக்க முயல்வதுதான். அதனால்தான், இந்த போராட்டம் நடத்தப்பட்டது.”

அமைச்சர் சரத் யாதவ் தனது பேச்சில், “மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்த அரசாங்கம் முடிவு செய்த அந்த நாளில், அவரது (எல்.கே.அத்வானி) காலடி சறுக்கிட துவங்கியது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மண்டல் குழு கோரிக்கையை தொடர்ந்து கூட்டத்தில் வைத்தனர். மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்து கோவிலின் பிரச்சனையை எழுப்பினீர்கள், அது ராமருக்காக அல்ல” என்று கூறினார்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது பேச்சில், “இந்த அரசு வீழ்த்திட நிறைய பேர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்று மட்டும் அவர்கள் காத்திருக்கவில்லை. நாங்கள் மண்டல் குழு பரிந்துரை பற்றி அறிவித்த நாள் முதல் காத்திருக்கின்றனர் என்பதை அறிவோம்” என்று கூறினார்.

இறுதியாக, வாக்கெடுப்பில், வி.பி.சிங் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் 142 : 346 என்ற வாக்கின் அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 340-ன் படி அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.பி.மண்டல் தலைமையில் 1980-ல் அரசுக்கு அறிக்கையை அளித்தது. ஆனால், பத்தாண்டுகள், அந்த அறிக்கை பற்றி எந்த நடவடிக்கையும் அன்றைய அரசு எடுக்கவில்லை.

1990-ல் அமைந்த தேசிய முன்னணி அரசு, தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மண்டல் குழு அறிக்கையின் ஒரு பரிந்துரையை – பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு – நிறைவேற்றும் ஆணையை 7.8.1990-ல் அன்றைய பிரதமர் வி.பி. சிங் அறிவித்தார்.

அதனை எதிர்த்து, ஆதிக்க சக்திகள் வட நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தியது. அதைவிட அன்று வி.பி.சிங் அரசிற்கு ஆதரவு அளித்து வந்த பாஜக, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கூறி, அத்வானி தலைமையில் 25.9.1990 அன்று ரத யாத்திரையை துவங்கியது.

மண்டலை எதிர்த்து, கமண்டலம் துவக்கப்பட்டது. சமூக நீதியின் காரணமாக சம்பூகன்கள் உருவாகக் கூடாது என்ற நோக்கில், ‘ராமராஜ்யம் அமைப்போம் ராமர் கோவில் கட்டுவோம்’ என்ற கோஷத்தோடும், யாத்திரை கிளம்பியது. அந்த ரத யாத்திரை 30.10.1990-ல் அன்றைய முதல்வர் லாலூ பிரசாத் அரசினாலே பீகாரிலே, தடுக்கப்பட்டதால், வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பாஜக உடனே விலக்கிக் கொண்டது.

பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக நீதி வழங்கிய அரசை, மதவெறி மாய்த்தது. 7.11.1990 அன்று காலை 11.11 மணிக்கு துவங்கிய விவாதம், இரவு 22.22 வரை நடந்தது. அதாவது 11 மணி நேரம், 11 நிமிடங்கள், சமூக நீதிக்கெதிராக மதத்தை முன்வைத்து ஆட்சியை கவிழ்த்தனர்.

1990-ல் நாடாளுமன்றத்தில் எந்த விஷயங்களை வி.பி.சிங் முன்வைத்தாரோ, அதே காரணங்களை இன்றும் நினைவு கூறும் நிலை உருவாகியுள்ளது. மீண்டும், அயோத்தி பிரச்சினையை, உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி எழுப்புகின்றனர். இட ஒதுக்கீட்டுக்கெதிரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் நாட்டின் சமூக, அரசியல் போக்கை மாற்ற எத்தனிக்கின்றனர்.

அன்று 1990-ல், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராடாமல் மதவெறி சக்திகளிடம் வீழ்ந்தோம்.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் என ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும், சமூக நீதியை வென்றெடுக்க ஒன்றுபட்டு போராடுவோம் என இந்த நாளில் உறுதி ஏற்போம். சம்பூகன்களை மாய்த்திட துடிக்கும் சக்திகளை விரட்டுவோம்.

THIRUMAVELAN PADIKARAMU