கதறி அழுகிறார் பியூஷ் மனுஷ்: என்ன செய்ய வேண்டும் நாம்?

சேலம் மாவட்டம் முள்ளுவாடி கேட்  பகுதியில் பாலம் கட்டும் பணிகளைத் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்ததாகக்  கைது செய்யப்பட்ட சூழலியல் செயற்பாட்டாளரும், சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளருமான  பியூஷ் மனுஷ் ஜாமீனில் இன்று (வியாழன்) விடுவிக்கப்பட்டார்.

சேலத்தில் மக்களிடம் முறையாக நோட்டீஸ் வழங்காமல் முள்ளுவாடி பகுதியில் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டதாகக் கூறி சேலம் மக்கள் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து  ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ் மற்றும்  கார்த்திக், முத்து ஆகியோரை கடந்த ஜூலை 8 ந்தேதி கைது செய்தார்கள் சேலம் போலீஸார்.

மற்றவர்களுக்குக் கடந்த ஜூலை 14 அன்று பிணை வழங்கப்பட்ட நிலையில் பியூஷிற்கு பிணை வழங்க காவல்துறை கடுமையான ஆட்சேபம் தெரிவித்ததால், பிணை மறுக்கப்பட்டுவிட்டது.

இதனிடையே நேற்று (புதன்) விசாரணைக்கு வந்த பியூஷ் மனுஷின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம்,  அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சட்ட நடைமுறைகள் முடிந்து இன்று பிற்பகலில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சேலம் மத்திய சிறையில் இருந்து அவரை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சேலம் மக்கள் குழு உறுப்பினர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் கதறி அழுதபடி பேசிய பியூஷ், “சிறைக்குள் 30 காவலர்கள் சேர்ந்து என்னை அடித்தார்கள்.  “இந்திய சிறைகள் மீது நன்மதிப்பு இருந்தது. அது தகர்ந்துவிட்டது” என்றார்.

https://youtu.be/8wpinMsyXz4

இச்செய்தி தொடர்பாக சிலரது பதிவுகள் இங்கே:-

Mohamed rafiq: ஒரு மக்கள் போராளி கண்ணீர்விட்டு அழுகிற நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். மக்கள் பிரச்சனையை கையில் எடுத்தவர்கள் எந்த நிலையிலும் கலங்கி நின்றுவிட மாட்டார்கள். ஆனால், இன்று பியூஷ் மனுஷ் அழுகிறார் என்றால், அதற்கு நாமும் நம் நாடும் வெட்கப்பட வேண்டும்.

ரா.ராஜகோபாலன்: செய்தி:”ஜெயிலில் முப்பது பேர் சேர்ந்து என்னை அடித்தனர். இந்திய சிறைகள் மீதான நம்பிக்கையே போய் விட்டது!”- பியூஷ்

——-

இதைவிட ஒரு கேவலம் இருக்க முடியாது!

கைது செய்யக்கூட ஏதாவது ஒரு சப்பை காரணம் சொல்லப்படலாம். ஆனால், ஜாமீன் மறுத்ததற்கும், காவலில் அடித்ததற்கும் முதலாளித்துவத்தின் உச்சபட்ச கேடுகெட்டத்தனம் தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும்?!?

 S P Udayakumaran: பியூஷ் விடுதலை!

சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்திருக்கும் தோழர் பியூஷிடம் பேசினேன்; மனதுக்கு ஓரளவு இதமாக இருக்கிறது.

பியூஷின் மீதான தாக்குதல் குறித்து நீதி விசாரணை வேண்டும், தாக்கிய குண்டர் படையினரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ஏராளமானோர் கோரிக்கைகள் வைக்கிறோம், போராட்டங்கள் நடத்துகிறோம். கைகட்டி, வாய் பொத்தி, வேடிக்கை பார்க்காமல், நம்மில் ஒவ்வொருவரும் எழுவதும், பார்ப்பதும், எழுதுவதும், பேசுவதும், கழுத்தை வெளியே நீட்டுவதும்தான் தீர்வு. இல்லையென்றால், பாசிசத்துக்கு எதிரான ஜெர்மானியப் போராளி மார்ட்டின் நைமோலர் சொல்வது போலத்தான் கதை முடியும்:

சோனி சோரி முகத்தில் அமிலத்தால் அடித்தார்கள்,
நான் பழங்குடிப் பெண் அல்ல என்பதால் வாளாவிருந்தேன்.
அபய் சாகுவை அடைத்து வைத்தார்கள்,
நான் வனாந்திர மனிதனல்ல என்பதால் அலட்டிக்கொள்ளவில்லை.
பியூஷ் மனுஷை முப்பது காவலர்கள் அடித்துத் துவைத்தார்கள்,
நான் சூழல்வாதியல்ல என்பதால் கண்டுகொள்ளவில்லை.
ஒரு நாள் என்னைக் கொல்ல வந்தார்கள்,
எனக்காக குரல் கொடுக்க எவருமே இருக்கவில்லை!

Selastin Raj: பியூஷ் மனுஷ்… பெயரை கேட்டாலே அது ஒரு வடமொழிப் பெயரை போல் இருக்கிறது. வடமாநிலத்தவர் தான், ஆனால் அவர் கைது செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் அவரை பற்றிய அதிகம் செய்திகளைப் பகிர்ந்தது நாம் தமிழர் தம்பிகள் தான். நாம் தமிழர் கட்சி அவர் கைதை கண்டித்து போராட்டம் வேறு அறிவித்திருக்கிறது. ஆளும் உரிமையைக் கேட்டால், நாம் தமிழர் கட்சி மரபணு சோதனை நடத்தி மக்களை பிரிக்கிறது என கூறுபவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தமிழரையும், தமிழர் நிலத்தையும் சுரண்டுபவர்களை தான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர, தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது செய்ய நினைப்பவர்களை நாங்கள் நிச்சயம் ஆதரிக்க தான் செய்வோம்.