தினகரனுக்கு வாக்களித்த மக்களை கழுவி ஊற்றும் கமல்ஹாசன் கவனத்துக்கு….!

மிஸ்டர் கமல்ஹாசன்,

நீங்கள் சொல்லும் 20 ரூபாய் நோட்டு, 6000 ரூபாய் எல்லாம் ஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்தமட்டில் உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.

எக்கச்சக்கமாக பணம் புரண்டது, சரி. ஆனால் மக்கள் விலை போய்விட்டார்கள் என எப்படி சொல்ல முடிகிறது?

உண்மையை புரிந்தும் புரியாத மாதிரியே நடிக்கிறீர்கள் பாருங்கள். அதனால்தான் நீங்கள் சிறந்த நடிகர்.

உண்மை என்ன?

பாஜக தமிழக அரசை தன் கட்டுக்குள் வைக்க ஆடி வரும் ஆட்டத்தை எல்லாரும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பாஜக தனக்கான அரசை அமைத்துக்கொண்டு தமிழகத்தை நாசம் செய்து கொண்டிருப்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியவில்லை. நாங்கள் எல்லாருமே தெரிந்து தான் வைத்திருக்கிறோம்.

பாஜகவுக்கு எதிராக இயங்கும் நபராக தினகரன் தான் மக்களுக்கு தெரிகிறார். அவர் மீது போடப்பட்ட வழக்கில் இருந்து, வருமான வரி சோதனை வரை பாஜக அவரை ஒடுக்க எத்தனை முயற்சி செய்தது என தமிழகம் கவனித்து கொண்டு தான் இருந்தது. அந்த முயற்சிகள் அத்தனையையும் முறியடித்தவராக தினகரனை மக்கள் பார்க்கிறார்கள்.

பாஜகவுக்கு எதிராக நிற்கக்கூடிய நபராக தினகரனை நினைக்கிறார்கள். அவர் ரஜினியை போல், கமலை போல் மழுப்பல் அரசியல் பேசுபவராக அவர்களுக்குத் தெரியவில்லை. பாஜகவுக்கு எதிரான தாவீதாக தினகரனை நம்புகிறார்கள்.

தினகரன் அத்தனை தகுதி உடையவராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் யதார்த்த நிலை இதுதான். அதனால் மட்டுமே ஆர்.கே.நகர் தேர்தலில் அவர் வெற்றி பெறுகிறார்.

தமிழ்நாடு இப்போது இது தான். பாஜகவுக்கு எதிராக நிற்பவன் தான் நாயகன். உங்கள் துறையிலிருந்தே கூட பேசுவோமே. தமிழ்நாட்டில் அதிகமாக கழுவி ஊற்றப்பட்டவர் நடிகர் விஜய் தான். ஆனால் அவரை கூட தலையில் தூக்கி வைத்து மொத்த தமிழ்நாடும் மெர்சல் விவகாரத்தில் கொண்டாடியதே, ஏன்? விஜய்யை பாஜகவின் ஹெச்.ராஜா நக்கல் அடித்தபோது, தமிழ் மக்கள் பொறுத்துக் கொள்ளாமல் தங்களின் பிள்ளையாக தூக்கி வைத்துக் கொண்டனர்.

இதுதான் உண்மை. இதுதான் யதார்த்த நிலை.

உங்கள் சிக்கலும் புரிகிறது. செத்த பாம்பை அடித்து பேர் பெறும் வீரனைப் போல், ஆளும் அதிமுக அரசை அடித்து பேர் பெற விரும்பினீர்கள். ஆனால் அதையும் தினகரனே திறம்பட செய்தார். அதன் வழியாக அவர் அடைந்த வெற்றி அது என நினைத்துக்கொண்டு, உங்களுக்கான வெற்றியை அவர் களவாடிவிட்டதாக கோபம் கொள்கிறீர்கள்.

ஆனால் அது உண்மை அல்ல.

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். மழுப்பல் அரசியலை பேசிக்கொண்டு நீங்களும் ரஜினியும் உழறிக் கொண்டிருக்கும் போது, விஷால், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட எவரும் கூட மக்களின் நிலையை புரிந்துகொண்டு பாஜகவை எதிர்த்து களம் கண்டார்களெனில் உங்களை எல்லாம் டெபாசிட் இழக்க வைத்து, வெற்றி அடைந்து அவர்கள் ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆக, பாடம் ஒன்றுதான். படித்து பாஸாவதும், படிக்காமல் பெயிலாவதும் உங்கள் விருப்பம்!

RAJASANGEETHAN  JOHN

 

Read previous post:
0a1a
ஆன்மிக வழியில் சிஸ்டத்தை சரி செய்வது இப்படித்தான்…!

முதலில் ஒரு ஸ்குரூ டிரைவரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை மஞ்சள் நீரில் நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு சந்தனம் தடவி, கைப்பிடி பகுதியில் பட்டை போட்டு

Close