பின் நவீனத்துவ அரசியல் பாதையில் விடுதலை சிறுத்தைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது கொஞ்சம் நம்பிக்கையும், கொஞ்சம் பிரியமும் வைத்து, அவரது அரசியலை உற்று நோக்கி வருபவர்களுக்கு, சமீபத்திய தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்பான அவரது நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை.

ஒருநாள், மக்கள்நலக் கூட்டணியில் தான் இருக்கிறேன் என்கிறார். மறுநாள் மத்திய பா.ஜ.க. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை போய் சந்திக்கிறார். அடுத்தநாள் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இன்னொரு அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வானை அழைத்து வந்து சென்னையில் கூட்டம் போடுவேன் என்கிறார். அதற்கு அடுத்தநாள் புதுவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளருமான நாராயண்சாமிக்கு ஆதரவு என்கிறார். பிறிதொரு நாள் எதிர்முகாமிலிருந்து முதல் ஆளாக அப்போல்லோ மருத்துவமனைக்குச் சென்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி விசாரித்துவிட்டு வெளியே வந்து, அ.தி.மு.க நிர்வாகிகள் என்ன சொல்வார்களோ அதை அப்படியே கிளிப்பிள்ளை போல் சொல்லுகிறார். இன்னொரு நாள், தி.மு.க. கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு போக விழைகிறார். அதை மற்ற கட்சிகள் ஏற்காதபோது, எனக்கு விருப்பம் தான், ஆனால் மற்ற கட்சிகள் விரும்பவில்லை என வருத்தம் தெரிவித்து மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறார்.

திருமாவளவனின் கட்சிக்கு வெளியிலிருந்து அவரை ஆதரிப்பவர்களுக்கு, இவர் ஏன் இப்படி என்ற கேள்வியும் குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது அவர்களுக்கு பேராசிரியர் அ.ராமசாமி தனது முகநூல் பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அது:

“தோல்வியென்றாலும் புறமுதுகு காட்ட மாட்டேன் என்பது பழங்குடி மரபு.

வெற்றிக்காக சதிகளில் ஈடுபடுவது நிலமானிய அரசர்களின் வெளிப்பாடு.

கொள்கைக்காக தனித்தே இயங்குவோம் என்பது நவீனத்துவ / ஜனநாயக லட்சியவாதம்.

இடத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப கூட்டு வைத்து அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்பது பின் நவீனத்துவ அரசியல் இயங்குநிலை.

இந்திய அரசியல் களம் பின் நவீனத்துவ காட்சிகளுக்குள் நுழைந்து கால்நூற்றாண்டாகிவிட்டது. ஆனால் ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் திரும்பத் திரும்ப நவீனத்துவ லட்சியவாதத்தை முன்மொழிகிறார்கள்; அதுவே சரியானதென காட்டிக்கொண்டிருக்கிறார்கள்..

இந்த முன்மொழிவும் நம்பிக்கையும் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்றால், லட்சியவாதத்தைக் கைவிட்டுவிட்டு, கண்டதையும் பற்றிக்கொண்டு, பெரும்பான்மை அரசியல் செய்யும் பெருங்கட்சிகளைக் கேள்வி கேட்க வேண்டும்.

பெரும்பான்மை அரசியல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் பெருங்கதையாடல். விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் குறுங்கதையாடல். தனது இருப்பைத் தக்க வைக்கும் அரசியல். அதிகாரத்தில் மிகச் சிறிய பங்கைக் கோரும் அதன் வெளிப்பாடுகள் பலவிதம்.

அஇஅதிமுக-வோடும் கூட்டுச் சேர்ந்தது விசிக. திமுகவோடும் இணக்கமாக இருந்தது விசிக. களஎதிரியான பா.ம.கவுடன் இணங்கிப்போகவும் செய்தது. அரசியலற்ற அரசியல்வாதியான விஜயகாந்தின் தலைமையைக்கூட ஏற்றுக்கொண்டது. சந்தர்ப்பவாத அரசியலின் தமிழக அடையாளமான வைகோவை ஒருங்கிணைப்பாளர் என்கிறது.

இது விளையாட்டு. நம் காலத்தின் அரசியலைப் புரிந்துகொண்ட சித்தாந்தத்தின் விளையாட்டு.

பின் நவீனத்துவச் சூழலில் / அரசியலில் வர்ணஜாலம் காட்டித் தனது இருப்பையும் உழைப்பையும் காட்ட விரும்பும் விடுதலை சிறுத்தைகளை நோக்கித் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டு, லட்சியவாதத்திற்குள் தள்ள நினைப்பது நல்லெண்ணத்தின் வெளிப்பாடல்ல; குற்றவுணர்வுக்குள் தள்ளித் தற்கொலைக்குத் தூண்டும் முயற்சி”

என்கிறார் பேராசிரியர் அ.ராமசாமி.

பேராசிரியர் சொல்வது தான் சரியோ…?

– அமரகீதன்