சென்னை மௌலிவாக்கம் 11 அடுக்குமாடி கட்டிடம் இன்று இடிப்பு!

சென்னை போரூர் – குன்றத்தூர் சாலையில் உள்ள மவுலிவாக்கத்தில், புதிதாக கட்டப்பட்டுவந்த 11 அடுக்குகள் கொண்ட கட்டிடம், கட்டுமானப் பணிகள் முடிவடையும் தறுவாயில் இருந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி கனமழை பெய்துகொண்டிருக்கும்போது, திடீரென இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கட்டிடத்துக்கு அருகிலேயே கட்டப்பட்டு வந்த இன்னொரு 11 அடுக்குகள் கொண்ட கட்டிடம் சற்று சாய்ந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அபாயகரமான நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், இக்கட்டிடமும் வலுவிழந்த நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். இதனால் இதை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இக்கட்டிடம் இன்று (புதன்கிழமை) இடிக்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, “மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் இந்த கட்டிடத்தை பாதுகாப்பாக இடிக்கும் பணி மேற்கொள்ளப்படும். ‘இம்ப்ளோசன்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடத்தை இடிக்க உள்ளோம். பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன” என்றார்.

கடந்த சில நாட்களாகவே கட்டிடத்தில் வெடி பொருட்களை பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெடிப்பொருட்கள் சரியாக பொருத்தப்பட்டிருக்கின்றனவா? சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு போதிய அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறதா? மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளன? என்பவை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று கட்டிடம் இடிக்கப்படவுள்ள நிலையில், போரூர் – குன்றத்தூர் சாலையில் வாகனப் போக்குவரத்து தடுக்கப்பட்டு, வேறு சாலைகளுக்கு திருப்பிவிடப்படடுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. போலீஸார் வீடு வீடாகச் சென்று மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்தி வருகின்றனர். மேலும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கருதி, இன்று செய்தி சேகரிக்க வருபவர்களுக்காக குறிப்பிட்ட ஒரு பகுதியை காவல்துறை ஒதுக்கியுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கட்டிடம் இடிக்கப்படுவது தொடர்பாக அப்பகுதி மக்கள் எவ்வித அச்சமோ, பீதியோ அடைய தேவையில்லை. கட்டிடம் இடிக்கும் பணி முடிந்ததும், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்கான உரிய அறிவிப்பு வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Read previous post:
0a1b
Game has just begun: Arnab Goswami

Senior journalist Arnab Goswami has resigned as the Editor-in Chief of Times Now. Goswami was not seen on his prime time

Close