மௌலிவாக்கம் கட்டிடம் இடிப்பு: போக்குவரத்து மாற்றம், மின் தடை, பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம், தலா 11 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வந்தது. இதில், ‘பிளாக் பி’ என்ற 11 மாடி கட்டிடம், கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி திடீரென இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 61 பேர் இறந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். அதன் அருகில் சாய்ந்த நிலையில் உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, அந்தக் கட்டிடம் இன்று இடிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று பார்வையிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், “2-ம் தேதி (இன்று) பகல் 2 முதல் 4 மணிக்குள் கட்டிடம் முழுமையாக இடிக்கப்படும். பாதுகாப்பு நடவடிக்கையாக, 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டிடங்கள், வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு, மதனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஏ.ஜே. ஜெய்மாருதி மஹாலில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டிட இடிப்புப் பணி முடிந்ததும் அவர்கள் வீடு திரும்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.

கட்டிட இடிப்பு ஒப்பந்ததாரர் பொன்.லிங்கம் கூறும்போது, ‘‘இக்கட்டிடம் வலுவற்றதாகத்தான் இருக்கிறது. உள்நோக்கி இடிந்து விழும் தொழில்நுட்பத்தில் கட்டிடம் இடிக்கப்படுகிறது. குறைவான அளவு ஜெலட்டின், ஆர்டிஎக்ஸ், கன்பவுடர், அமோனியம் நைட்ரேட் போன்றவற்றைக் கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டிட இடிப்புப் பணியின்போது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் பயன்படுத்தக் கூடாது. 10 விநாடிகளில் ரிமோட் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்படும். மழை வந்தாலும் இடிப்புப் பணி பாதிக்காது. மின்னல் தாக்கினால் பாதிப்பு ஏற்படும். இப்பணிக்கு ரூ.50 லட்சம் செலவாகும்’’ என்றார். கட்டிட இடிப்பு பணியையொட்டி, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டிடம் இடிக்கப்படுவதையொட்டி போரூர் – குன்றத்தூர் சாலை, மௌலிவாக்கம், கெருகம்பாக்கம், மதானந்தபுரம், மாதா நகர், அம்மன் நகர், எம்.எஸ். நகர், பெல் நகர், காமாட்சி நகர், சத்யநாராயணபுரம், ராஜலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர், ராஜராஜன் நகர், மாங்காடு மெயின் ரோடு, லட்சுமி நகர், மவுலீஸ்வரர் நகர், ராஜகோபாலபுரம், ஏடி கோவிந்தராஜன் நகர், பழனி நகர், விஜிஎன்.ரங்கா நகர், அன்னை வேளாங்கண்ணி நகர் ஆகிய பகுதிகளில் இன்று மதியம் 12 மணி முதல் இடிக்கும் பணி முடியும் வரை மின் தடை அமலில் இருக்கும்.

போரூர் முதல் குன்றத்தூர் சாலை வரை மதியம் 12 முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிண்டியில் இருந்து போரூர் சந்திப்பு வழியாக குன்றத்தூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பூந்தமல்லி மவுண்ட் சாலை வழியாக அய்யப்பன்தாங்கல், காட்டுப் பாக்கம், குமணன்சாவடி, மாங்காடு வழியாக குன்றத்தூர் செல்லலாம். அதேபோல குன்றத்தூரில் இருந்து போரூர் சந்திப்பு வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் மாங்காடு, குமணன்சாவடி வழியாக வரலாம்.

போரூர் சந்திப்பு முதல் குன்றத்தூர் சாலையை இணைக்கும் நான்கு வழிச்சாலை சந்திப்பு வரை முற்றிலுமாக எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது.

மௌலிவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் தொடக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, ஐஸ்வர்யா நர்சரி மற்றும் தொடக்க பள்ளி ஆகிய 4 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.