ஆட்டு நலனுக்காக ஓநாய் அழுகிறது…!

உலகத்திலேயே மிக உயர்ந்த பெண்ணுரிமைப் போராளி நமது பிரதமர்தான் என்று எண்ணுமளவுக்கு சமீபத்திய அவரின் பேச்சுக்கள் வெளுத்து வாங்குகிறது. ஆம், இது தான் இவரின் சொந்த முகமா? அல்லது முகமூடி முகமா?

அதாவது, ‘தலாக்’ முறையால் முஸ்லிம் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்களாம்; அதை அனுமதிக்க முடியாதாம்; அதோடு பெண்சிசுக் கொலையையும் அனுமதிக்க முடியாதாம்! அடுத்து, பழங்குடி மக்கள் மீதான அடக்குமுறையையும் இந்த அரசு பார்த்துக்கொண்டு இருக்க முடியாதாம்.

இவரது பேச்சின் சாரம் எப்படி இருக்கிறதென்றால், ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைபோல் இருக்கிறது.

இவர் முதல் அமைச்சராக இருந்தபோது 2002-ல் நடந்த கலவரத்தில் முஸ்லிம் கர்ப்பிணிப் பெண் வயிற்றை ஒரு பெண்ணைக் கொண்டே சூலாயுதத்தால் கிழித்து, அந்த முஸ்லிம் பெண் வயிற்றில் இருந்த சிசுவையும் எடுத்து நெருப்புக்குத் தீனியாக்கியவர்களை, தாயையும் சேயையும் தீக்குப் பலியாக்கியவர்களைத் தண்டிக்காமல், உலாவவிட்ட உத்தமர்தான் இவ்வாறு பேசுகிறார். அதோடு அந்தக் கலவரம் முடிந்ததா? 3ஆயிரத்திற்கும் மேலான முஸ்லிம் ஆண்,பெண்களைக் கொன்று குவித்த ஆட்சியின் முதல்வராக இருந்தவர் அல்லவா இவர்.

“வனப்பகுதிகளில் தொன்று தொட்டு வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை அழிக்க நினைக்கக் கூடாது. பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”. அடப்பாவமே..! வன உரிமைச் சட்டம் 2006-ஐ அமலாக்காமல், வனங்களை அந்நிய கம்பெனிகளுக்கு டெண்டர் விட்டுவிட்டு, பேசும் பேச்சைப் பாருங்கள்.

இந்தப் பெண்ணுரிமைப் ‘போராளி’யின் குருபீடம், பெண்ணுரிமை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

‘ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே வேறு வர்ணங்களில் இருந்த பத்துக் கணவர்கள் இருந்து அவள் 11-வதாகப் பிராமணனை மணந்திருந்தால்கூட, 11-வதாக மணந்த பிராமணனுக்கே அவள் உரிமையானவள். மற்றவர்களுக்கு அல்ல.’

‘பெண்ணே… நீ குழந்தை பருவம் முழுவதும் அப்பன் சொல்வதைக் கேள். வளர்ந்து மணமானதும் கணவன் சொல்வதைக் கேள். உனக்குக் குழந்தை பிறந்து தலையெடுத்தது முதல் உன் மகன் சொல்வதைக் கேள்’.

‘பெண்ணே… உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள்’

இப்படியே போகிறது மனுநீதி.

இப்படிப்பட்ட வழியில் வந்த மோடிதான் பெண்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் அவர்களின் உரிமைக்கும் சண்டமாருதம் செய்கிறார்.

எல்லாவற்றுக்கும் உச்சபட்சமாகப் பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசு தர்பாரில் உள்ள மனு சிலையில் கோல்வால்கர் எழுதி வைத்துள்ளார்… ‘எல்லோரைக் காட்டிலும் மகத்தான உச்சமட்ட ஞானம் நிறைந்த முழுமுதல் மனிதகுல சட்ட நியதிகளை அளித்தவர் மனு’ என்று.

அய்யா நரேந்திர மோடி அவர்களே… தாங்கள் கொண்டுவரத் துடித்துக்கொண்டிருக்கும் பொதுச் சிவில் சட்டம் ‘மனிதகுல சட்ட நியதிகளை அளித்த ‘மனு’வைக் கட்டுப்படுத்துமா? அல்லது மனு பொதுச் சிவில் சட்டத்தைக் கட்டுப்படுத்துமா? எது எதைக் கட்டுப்படுத்தும்? முஸ்லிம் பெண்களுக்காகக் குடம் குடமாக அல்லது குளம் குளமாகக் கண்ணீர் வடிக்கும் பாஜக இதற்குப் பதில் அளிக்குமா? இந்து பெண்களுக்கு இது போன்ற எண்ணற்ற அடிமைத்தனங்களில் இருந்து பொதுசிவில் சட்டம் விடுதலை பெற்றுத்தருமா?

‘பாஜக’ வின் தேர்தல் வெற்றியும், மோடி அரசாங்கம் பதவியேற்பும் ஒரு வலதுசாரி தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. கார்ப்பரேட் சக்தி மற்றும் இந்துத்துவா எனும் இரட்டை விசைகள் வலதுசாரி நகர்வுக்குத் தீனி போட்டுள்ளன’.

‘இந்துத்துவா அமைப்புகள் முஸ்லிம் சிறுபான்மையினரை குறிவைத்துத் தாக்குகின்றன. மறு மத மாற்றம், காதல் புனிதப்போர் போன்ற பிரச்சாரங்கள் முஸ்லிம் சமூகத்திடம் அச்சத்தையும், பாதுகாப்பின்மையும் தோற்றுவிக்கின்றன. கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்களும், வன்முறைகளும் தில்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் நடந்தேறின. முஸ்லிம் மக்களின் சமூக, பொருளாதாரப் பின்தங்கிய நிலைமையும், சச்சார் அறிக்கை பரிந்துரைகளும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசு கல்வியில் இஸ்லாமியர்களுக்குத் தரப்பட்டு வந்த ஐந்து சதவீத இடஒதுக்கீடை ரத்துச் செய்துவிட்டது. மாட்டுக்கறி உணவு மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது’.

இதெல்லாம் ஆட்சிக்கு வந்த சுமார் ஓராண்டில் நடந்தேறியவையே. ஆனால், அதன் பின்னான ஒன்றரை ஆண்டுகளில் மேலே உள்ளதைவிடப் பன்மடங்கு கொடுமைகள் தலைவிரித்தாடி வருகின்றன.

இதிலிருந்து மக்களைத் திசை திருப்பவே அல்லது இந்தியாவின் இதயமான மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் காவி ஆட்சியை நிறுவிடவே தற்போது பொதுச் சிவில் சட்டம், தலாக், சிசுக் கொலை, பழங்குடி பாதுகாப்பு, துல்லிய தாக்குதல், எல்லாவற்றுக்கும் மேலாக மீண்டும் ராமர் கோவில் என பீடிகைப் போட்டு மக்களைத் திசை திருப்பி வருகிறது மத்திய பாஜக அரசு என்றால் அது மிகையல்ல.

– இவன் ஒரு கம்யூனிஸ்ட்

(Shared from Sournakumar R)