ஜெயலலிதாவுக்காக மண்சோறு உண்ட மகளிர்; மருத்துவமனை முன் திரண்ட இஸ்லாமியர்கள்!

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் குழு அளித்த தீவிர சிகிச்சையால் காய்ச்சல் குணமானது என்றும் அவர் வழக்கமான உணவுகளை சாப்பிடுவதாகவும், ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுப்பார் என்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே கடந்த 30ஆம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் (3ஆம் தேதி) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வருக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்றை சரிசெய்வதற்கான மருந்துகள் மற்றும் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று (4ஆம் தேதி) அப்போலோ மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள், முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல் நலத்தை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

0a1

செயற்கை சுவாசத்துடன் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானதை அடுத்து, அ.தி.மு.க.வினரும், அவர்களது கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி சென்னை சைதாப்பேட்டை பிடாரி இளங்காளியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட அதிமுக மகளிர் அணியினர் மண் சோறு உண்டு உருக்கமாக சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

அதுபோல், ஜெயலலிதா நலம் பெற வேண்டி இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் அப்போலோ மருத்துவமனை நுழைவுவாயில் எதிரே உருக்கமாகத் திரண்டிருந்தனர். ஜெயலலிதா குணமடைந்துவிட்டார் என்ற நல்ல செய்தி வராதா என்று ஏக்கத்துடன் காத்திருந்தார்கள்.