“ஜெயலலிதாவை சந்திக்கும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை!” – மு.க.ஸ்டாலின்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்திக்கும் முயற்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இத்தகவலை மு.க.ஸ்டாலின் மறுத்துள்ளார்.

இன்று சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் ஜெயலலிதா 13 நாள்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது அவர் யாரையும் சந்திப்பதில்லை. சந்திக்க முடியாத நிலையில் இருப்பதாக செய்தி. அதனால், அவரை சந்திக்கும் முயற்சியில் நானோ, தலைவரோ (கருணாநிதியோ) ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை” என்றார்.

தி.மு.க. தொடர்ந்த வழக்கின் விளைவாக, தமிழக உள்ளாட்சி தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது குறித்து கேட்டதற்கு, “உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என்பதே திமுகவின் நோக்கமே தவிர, தேர்தலை ரத்து செய்வது இல்லை. அதிமுக அரசு தேர்தல் ஆணையத்துடன் நெருங்கிய தொடர்பை வைத்துக்கொண்டு தேர்தலை முறைகேடுகளுடன் நடத்த இருந்தது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” என்றார் அவர்.

”உள்ளாட்சித் தேர்தலை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி, வெளிமாநில அதிகாரிகளைக் கொண்டு முறையாக நடத்த வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு (அக்.6) வரவுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்