“அடுத்த கட்ட நகர்வுகளை ஆதரியுங்கள்! கருவிலேயே கொன்று போடாதீர்கள்!”
இறைவி –
படம் ஆஹா ஓஹோ அல்லது மிக சுமார் என்னும் இரு துருவ எதிர்வினைகளை இது குறித்து காண்கிறேன். பத்து நிமிடத்திலேயே கணித்து விடும் மேதாவிகள் முதற்கொண்டு இடது கையால் புறக்கணித்துச் செல்லும் பாவனைகளின் அபத்தங்கள் வரை பலதரப்பட்ட கருத்துகள். என்னதான் ஒரு திரைப்பட விமர்சனம் அபாரமாக எழுதப்பட்டிருந்தாலும் அது ஒரு தனிநபரின் கண்ணோட்டம் மட்டுமே. சமூகத்தின் மனவோட்டத்தை துல்லியமாக பிரதிபலிப்பதாகாது. தேர்தல் முடிவுகளை கவனித்திருப்பீர்கள்தானே?
குழம்பித் தவிக்கும் நண்பர்களுக்காக என் பங்கு உப்பையும் அள்ளிப் போடுகிறேன்.
ஒரு திரில்லர் திரைப்படம், ஓர் அவல நகைச்சுவை திரைப்படம் என்கிற முந்திய வகைமைகளிலிருந்து முற்றிலும் எதிர்திசையிலான ஒரு முயற்சியை செய்ததற்காகவே கார்த்திக் சுப்புராஜை பாராட்ட வேண்டும். தனது முன்னோடிகளிடமிருந்து இன்னும் சற்று உயர்ந்து ஓர் அடுத்தகட்ட பாய்ச்சலை இயக்குநர் நிகழ்த்தியிருக்கிறார். தமிழ் சினிமாவின் இப்போதைய சூழலில் இதைத்தான் செய்ய முடியும். தேவர் மகன் சிவாஜி சொல்வது மாதிரி “அவன் மெதுவாத்தேன் வருவான்”
இதையும் கூட செய்யாமல் பாதுகாப்பான பாதையிலேயே வண்டியை செலுத்திக்கொண்டிருக்கும் இயக்குநர்களைக் கூட கொண்டாடத் தயாராகும் இருக்கும் நாம், மந்தையிலிருந்து சற்று விலக நேரும் ஓர் இளம் ஆட்டை உடனடியாக பிரியாணி போட முயல்வது அநியாயமா இல்லையா நண்பர்களே?
முக்காடு போட்டுக்கொண்டே ரிகார்டு டான்ஸ் பார்த்துவிட்டு திரும்பிய பெரிசுகள் மாதிரி.. “ஆக்சுவலி.. இது பெண்ணியம் பத்தின படம் கிடையாது” என்று மழுப்பலாக மறைத்துக்கொண்டு பேசுகிறவர்களைக் கண்டால் நகைச்சுவையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆணின் அகங்கார உலகையும் சற்று அசைத்துப் பார்ப்பதில் படம் வெற்றி பெற்றிருக்கிறது. பார்வையாளர்களுக்கு ஸ்பூன் பீடிங் செய்யும் சில எரிச்சல்களைத் தவிர்த்து கூடுமானவரை இதை பிரச்சார தொனியின்றி சொல்ல முயன்ற இயக்குநருக்குப் பாராட்டு.
படத்தின் திரைக்கதையில் ஒரு கோர்வையின்மை தெரிகிறது. படத்தின் உண்மையான ஆட்டம் இரண்டாம் பகுதியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. .இந்த சமநிலையின்மையை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். முதல் பாதியில் லக்ஸரியாக செலவழிக்கப்பட்டிருந்த அபத்தங்களை துண்டித்து கச்சிதமாக்கியிருக்கலாம். இதனாலேயே நிறையப் பேர் இதை வெறுக்கிறார்கள் என யூகிக்கிறேன்.
படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பலரும் ஆஹா ஓஹோவென்பது எனக்கு ஆச்சரியம். ஒருவேளை திருந்திவிட்ட பையனை சற்று மிகையாகவே தட்டிக் கொடுத்து பாராட்டுவார்களே… அப்படியா என தெரியவில்லை. ஓர் ஆசாமி நடிக்கிறார் என்பது வெளியே தெரியாமல் நடிப்பதுதான் அசலான பங்களிப்பு. அந்த வகையில் அஞ்சலி, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ராதாரவி என்கிற உத்தேசமான ஆர்டரில் இவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக பாபி சிம்ஹாவின் பாத்திரம் மிகச் சிக்கலானதொன்று. அதை சரியாக வடிவமைக்க முயன்ற இயக்குநரையும் வெளிப்படுத்த முயன்ற நடிகரையும் வியக்கிறேன்.
மனம் திருந்தி மீண்டும் வாழ முயலும் ஒரு தம்பதியினரைக் காட்டும் கேமரா நகர்ந்து சென்று குழந்தை உறங்கிக் கொண்டிருக்கும் தூளியின் இடையில் நின்று அவர்களைக் காண்பிக்கிறது. இந்த நிலையில் காமிராவின் நகர்வுகள் தற்செயலானதாக அல்லாமல் பிரக்ஞைபூர்வமானதாக திட்டமிட்ட புத்திசாலித்தனத்துடன் இயங்குகிறது.
தமிழ் சினிமாவில் அபூர்வமாக நிகழும் அடுத்தகட்ட நகர்வுகளை ஆதரியுங்கள் நண்பர்களே.. கருவிலேயே கொன்று போடாதீர்கள்.
தயங்கித் தவிக்கும் நண்பர்கள் நிச்சயம் இதை திரையரங்கில் சென்று காணுங்கள். படத்தின் சில தருணங்கள் உங்களுக்கு நல்ல அனுபவத்தை தரும். அதற்கு நான் உத்தரவாதம்.
– சுரேஷ் கண்ணன்