ஆன்மிக வழியில் சிஸ்டத்தை சரி செய்வது இப்படித்தான்…!

முதலில் ஒரு ஸ்குரூ டிரைவரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை மஞ்சள் நீரில் நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு சந்தனம் தடவி, கைப்பிடி பகுதியில் பட்டை போட்டு குங்குமம் வைக்க வேண்டும். பின்னர் அதனை கறிச்சோறு போட முடியாத மண்டபம் போன்றதோர் இடத்தில் வைத்து பூஜையை துவங்க வேண்டும்.

பூஜையின்போது அக்கம்பக்கம் பார்க்கக் கூடாது. எது நடந்தாலும் அறிக்கைவிடக் கூடாது. பிரச்சனை ஏற்பட்டு யாரேனும் போராடினால் கண்டுக்கக் கூடாது. “அதுக்குன்னு ஒரு கூட்டம் இருக்கு”ன்னு சொல்லிட்டு பாபா முத்திரையுடன் மந்திரம் சொல்ல வேண்டும்.

மந்திரத்தை மறந்துவிட்டால், சரவணா ஸ்டோர்சில் கடன் வாங்கிக்கொள்ளவும். உ…உ…உ…என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். யாராச்சும் விளக்கம் கேட்டால் சட்டென தலையை கவனமாக பிடித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தலை சுத்திவிடும் அபாயம் உள்ளது.

உங்க கொள்கை இன்னான்னு கேட்டால், “மாத்துறோம். எல்லாத்தையும்.. மாத்துறோம்”ன்னு பஞ்ச் டயலாக் சொல்லணும்.

மந்திரம் சொல்வது, பஞ்ச் டயலாக் சொல்வதுன்னு மூன்று வருடத்தை ஓட்டணும். இடையிடையே இமயமலைக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு வந்துடணும். ஆனால் பூஜையை எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடக் கூடாது.

இதற்குள் ஸ்குரு டிரைவர் துருப்பிடித்து விடாதபடிக்கும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக அவ்வப்போது அதற்கு படம் காட்டிக்கிட்டே இருக்க வேண்டும்.

“சிஸ்டத்தின் மேல ஆசையா?”ன்னு எவனாச்சும் கேட்டால்… “ஹாஹாஹா… 68 வயசுலயா ஆசைவரும்?”ன்னு ஆன்மிகம் பேசணும். “பின்ன எதுக்கு சிஸ்டத்தை சரி பண்றீங்க?”ன்னு முட்டாள்கள் கேட்டால் … “சர்வம் சிஷ்டம் மயம்”ன்னு கீதையிலருந்து எடுத்து அடிச்சிவிடணும்.

மூணு வருசம் கழிச்சி போர் நடத்தி சிஸ்டத்தை சரி செய்து, .கொல்லையில காத்திருக்கும் காவிக் கும்பல்ட்ட குடுத்துட்டு போயிடணும்.

“சரிங்க… அந்த ஸ்குரு டிரைவர் இன்னாச்சி?”ன்னு தானே கேட்குறீங்க….

ஹாஹாஹா… கதம் கதம்!

கருப்பு கருணா