மோடி மீண்டும் பிரதமராவது பற்றி ரஜினியின் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தேர்தல் வர இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அது வரை ரஜினி ரசிகர்கள் பொறுத்திருக்க வேண்டுமா? காலம் என்னென்ன மாறுதல்களைச் செய்யக் காத்திருக்கிறதோ? யாருக்குத் தெரியும்.

உள்ளாட்சித் தேர்தல்களிலேயே ரஜினி தன் பலத்தைப் பரிசோதிக்கலாமே? விஜயகாந்த் ரசிகர் மன்றம் அப்படித்தானே ஆரம்பகால களம் கண்டது?

நாடாளுமன்றத் தேர்தல் முதலில் வந்தால் ரஜினியின் நிலைப்பாடு என்ன?

நடப்பு அதிமுக அரசு கவிழ்ந்து தேர்தல் முன்பே வரும் என்று ரஜினி யூகிக்கிறாரா? அல்லது பாரதிய ஜனதா அப்படி அவருக்கு கோடிட்டுக் காட்டி இருக்கிறதா?

மோடி மறுமுறை பிரதமராவது பற்றி ரஜினியின் நிலைப்பாடு என்ன?

அகில இந்தியக் கேள்விகளுக்குக் கருத்துத் தெரிவிக்காமல் மாநில அரசியலை மட்டுமே குறை கூறுவது ரஜினிக்கு எதிர்மறை விளைவுகளையே தோற்றுவிக்கும்.

அரசியலில் புதிய சக்திகள் வர வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ரஜினி மராட்டியர் என்று எதிர்க்கப்படுவதிலும் எனக்கு சம்மதமில்லை.

இன்றைய நிலையில் தேசிய அரசியலின் போக்கு எல்லா மாநிலங்களையும் ஒருசேரப் பாதிக்கிறது. பண நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி,. நீட், மருத்துவர் தகுதி காண் தேர்வு, வங்கி சீரமைப்பு, முத்தலாக் விவகாரம் என்று தேசிய அரசியலின் பல்வேறு முகங்கள் குறித்து ரஜினி எந்தக் கருத்தும் கூறாமல் –

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள தான் அரசியலுக்கு வந்தால் மக்கள் கண்ணை மூடி ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைப்பது சரி அல்ல. அது அவருக்குத் தோல்வியைத் தரும். மாற்று அரசியலை விரும்புபவர்களும் பின்னடைவையே சந்திப்பார்கள்.

எச்சரிக்கை.

தராசு ஷ்யாம்