80’ஸ் பில்டப் – விமர்சனம்

நடிப்பு: சந்தானம், ராதிகா பிரீத்தி, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ஆர்.சுந்தர்ராஜன், ஆடுகளம் நரேன், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, சுவாமிநாதன், மனோபாலா, மயில்சாமி, சங்கீதா, கலைராணி, சுபாஷினி கண்ணன், அஸ்வின், சூப்பர்குட் சுப்பிரமணி, ஷேசு மற்றும் பலர்

இயக்கம்: எஸ்.கல்யாண்

ஒளிப்பதிவு: ஜேக்கப் ரத்தினராஜ்

படத்தொகுப்பு: எம்.எஸ்.பாரதி

இசை: ஜிப்ரான்

தயாரிப்பு: ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.இ.ஞானவேல்ராஜா

பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார்

ஏவிஎம்மின் ‘முரட்டுக்காளை’ படத்தில் நடித்து ரஜினிகாந்தும், ஏவிஎம்மின் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் நடித்து கமல்ஹாசனும் டாப் மசாலாப்பட ஹீரோக்களாக அங்கீகாரம் பெற்று, ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்து, ரசிகர்கள் மீது செல்வாக்கு செலுத்தத் துவங்கிய 1980களின் முற்பாதியில் இக்கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டிருப்பதால் இப்படத்திற்கு ‘80’ஸ் பில்டப்’ என பெயரிட்டிருக்கிறார்கள்.

ஜமீன்தார் பரம்பரையில் வந்த சந்தானம் தீவிர கமல்ஹாசன் ரசிகர். ‘சகலகலா வல்லவன்’ கமல் போல உடையணிந்து, சிகை அலங்காரம் செய்துகொண்டு, கமல் குரலில் பேசித் திரிபவர். இவரது தாத்தா ஆர்.சுந்தர்ராஜன் தீவிர ரஜினிகாந்த் ரசிகர். அவருக்கு ‘முரட்டுக்காளை’ ரஜினியின் மேனரிசம் அத்துபடி. இந்த ரஜினி ரசிகருக்கும், கமல் ரசிகருக்கும் இடையே அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வருவது வழக்கம்.

இவர்கள் வசிக்கும் பழங்கால அரண்மனை போன்ற பெரிய வீட்டில் உள்ள அரசர் காலத்து கத்தி ஒன்றுக்குள், புதையல் இருக்குமிடம் பற்றிய ரகசிய வரைபடம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் ஆகிய மூவரும் அந்த வீட்டுக்கு வருகின்றனர். ”அரசர் காலத்து கத்தியை எங்களுக்கு கொடுத்தால், நாங்கள் கை நிறைய வைரக்கற்கள் தருகிறோம்” என்று ஆர்.சுந்தர்ராஜனிடம் ஆசை வார்த்தை கூறி பேரம் பேசுகிறார்கள். வைரக்கற்களை வாங்கிப் பார்க்கும் சுந்தர்ராஜன், “யாரை ஏமாத்தப் பாக்குறீங்க? இது கல்கண்டு” என்றவாறு வாயில் போட்டு விழுங்கிவிட்டு, ஒரு ஸ்விட்ச்சில் தற்செயலாக கை வைக்க, ஷாக் அடித்து சில நிமிடங்களில் இறந்துபோகிறார்.

அதிர்ச்சியடையும் மன்சூர் அலிகான் கும்பல், போஸ்ட்மார்டம் செய்யும் மருத்துவர் ஆனந்த்ராஜ் உதவியுடன் சுந்தர்ராஜனின் உடலை கடத்திச் சென்று, அறுத்து, வைரக்கற்களை மீட்க வேண்டும் என திட்டமிடுகிறார்கள்.

0a1b

இதனிடையே, சுந்தர்ராஜனின் இறப்புக்கு சந்தானத்தின் உறவுப்பெண் ராதிகா ப்ரீத்தி வெளியூரிலிருந்து வருகிறார். அவரை கண்டதும் காதல் கொள்கிறார் சந்தானம். சிறு வயதிலிருந்து சந்தானத்துக்கு ஏட்டிக்குப்போட்டியாக, எதற்கெடுத்தாலும் ஏழரை இழுத்துக்கொண்டே இருக்கும் அவரது தங்கை சங்கீதா, அண்ணனின் ஒருதலைக்காதலைத் தெரிந்துகொண்டு அவருக்கு ஒரு சவால் விடுகிறார்:

“தாத்தாவின் சடலத்தை எடுப்பதற்குள் உன்னை காதலிக்குமாறு அந்த பெண்ணை நீ செய்துவிட்டால் நானும் என் தோழிகளும் மொட்டை அடித்துக்கொள்கிறோம். அப்படி உன்னால் செய்ய முடியாவிட்டால் நீயும் உன் நண்பர்களும் பாவாடை – தாவணி கட்டிக்கொள்ள வேண்டும்” என்கிறார். இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் சந்தானம், தன் மீது ராதிகா ப்ரீத்திக்கு காதல் வர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்து பார்க்கிறார். பலனில்லை. நேரம் தான் கடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், சவாலின் மையமாக இருக்கும் தாத்தாவின் சடலத்தை சீக்கிரம் எடுக்க தங்கை சங்கீதாவும், சீக்கிரம் எடுத்துவிடாமல் தடுக்க அண்ணன் சந்தானமும் பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். இதனிடையே, சடலத்தை அறுத்து தங்கள் வைரக்கற்களை மீட்பதற்காக, அதை கடத்திக்கொண்டு போக மன்சூர் அலிகான் கும்பல் பலப்பல தந்திரங்களைச் செய்துகொண்டிருக்கிறது.

சந்தானமா? சங்கீதாவா? மன்சூர் அலிகான் கும்பலா? இறுதியில் யாருக்கு, எப்படி வெற்றி கிட்டுகிறது? என்பது ‘80’ஸ் பில்டப்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு சாவு மற்றும் அது நிகழ்ந்த வீட்டில் அமைந்துள்ளபோதிலும், எந்த காட்சியிலும், எந்த கதாபாத்திடமும் அந்த மரணம் தந்த இழப்பின் சோகம் துளியளவு கூட வெளிப்பட்டுவிடக் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு, எந்த தரப்பு பார்வையாளரும் ஒரு நொடிகூட எமோஷனலாகி கண் கலங்கிவிடக் கூடாது என்பதை கறாராக கடைப்பிடித்து, சிரிக்க மட்டுமே வைத்துள்ளார் இயக்குநர் எஸ்.கல்யாண். இதை படைப்பதற்கு லாஜிக் பார்க்காத, கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் முழுமையாக மரத்துப்போன மனம் வேண்டும். அது இயக்குநர் எஸ்.கல்யாணுக்கு இருந்திருக்கிறது. வாழ்த்துகள்!

இயக்குநரின் ஸ்கெட்சைப் புரிந்துகொண்ட நடிப்புக் கலைஞர்கள் அனைவரும், அவர் 500 ரூபாய்க்கு சிரிக்க வைக்கச் சொன்னால், ஒவ்வொருவரும் 50ஆயிரம் ரூபாய்க்கு சிரிக்க வைக்க கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறார்கள்…

படத்தின் நாயகனாக வரும் சந்தானம் “ஆக்‌ஷன் ஹீரோ” என காமெடி பண்ணாமல், முழுக்க முழுக்க “காமெடி ஹீரோ”வாக நடித்திருக்கிறார். ”பழைய சந்தானமாக” திரும்பியிருக்கும் அவர், காட்சிக்குக் காட்சி வசனங்கள் மூலம் டைமிங் காமெடியை சிதற விட்டிருக்கிறார். தோற்றம், நடை, உடை, பாவனையில் கமல் ஸ்டைலை பின்பற்றியிருக்கும் அவர், ஒரு சண்டைக் காட்சியில் மட்டும் ரஜினி ஸ்டைலை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என அனைத்து உணர்வுகளிலும் காமெடியைக் கலந்து பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார்.

சந்தானத்தின் காமெடிக்கு உறுதுணையாகவும், சில சமயங்களில் அவருக்கு இணையாகவும் நகைச்சுவையை வாரி வழங்க பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் களம் இறக்கப்பட்டிருக்கிறது.

சந்தானத்தின் அப்பாவாக ஆடுகளம் நரேன் வருகிறார். சதா மது போதையில் இருக்கும் அவர், பெண் வேடத்தில் வந்திருக்கும் ஆனந்த்ராஜின் இடுப்பழகில் கிறங்கி சில்மிஷம் செய்வது, திரையரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்தும் “ஏ’ ரக காமெடி. அதுபோல், சேஷுவின் மனைவி தன் முதுகில் சாய்ந்திருக்கும் சுகத்தில், மயில்சாமி மாட்டுவண்டியை திக்குத் தெரியாமல் உல்லாசப் பயணம் போல் ஓட்டிச் சென்று, பெங்களூரை நெருங்கிவிடுவதும் அதே ரக காமெடி தான்.

சமகால சாதாரண உடையில் எமனாக வரும் கே.எஸ்.ரவிக்குமார், சித்திரகுப்தனாக வரும் முனீஸ்காந்த், விசித்திரகுப்தனாக வரும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர், இறந்து ஆவியாக இருக்கும் ஆர்.சுந்தரராஜனோடு சேர்ந்து செய்துள்ள காமெடி பிரமாதமாக இல்லை என்றாலும், சுமார் ரகம்.

இவர்களைப் போல மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, சுவாமிநாதன், அஸ்வின், ஷேசு உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்தில் பொருந்தி நின்று தங்களால் இயன்ற அளவு சிரிக்க வைக்கிறார்கள்.

நாயகியாக நடித்திருக்கும் ராதிகா ப்ரீத்தியும், நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் சங்கீதாவும் நல்ல தேர்வு. இருவருமே அழகாக இருக்கிறார்கள். அருமையாக நடித்திருக்கிறார்கள். சங்கீதாவின் கதாபாத்திரம் சுட்டித்தனம் நிறைந்தது என்பதால், அவர் ராதிகா ப்ரீத்தியைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு, எம்.எஸ்.பாரதியின் படத்தொகுப்பு, ஜிப்ரானின் பாடலிசை மற்றும் பின்னணி இசை ஆகியவை இப்படத்துக்குத் தேவையான பக்கபலத்தை வழங்கியிருக்கின்றன.

’80’ஸ் பில்டப்’ – கல்யாண வீடாக இருந்தாலும், கருமாதி வீடாக இருந்தாலும் சிரித்தால் போதும் என்று எண்ணுகிற நகைச்சுவை பித்தர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்!

 

Read previous post:
0a1f
“பான் இந்திய திரைப்படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி”: ‘அனிமல்’ செய்தியாளர் சந்திப்பில் ரன்பீர் கபூர்

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும்

Close