சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் – விமர்சனம்

நடிப்பு: ஊர்வசி, கலையரசன், பாலு வர்கீஸ், குரு சோமசுந்தரம், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, மிருதுளா மற்றும் பலர்

இயக்கம்: சுபாஷ் லலிதா சுப்ரமணியன்

ஒளிப்பதிவு: ஸ்வரூப் பிலிப்

படத்தொகுப்பு: அச்சு விஜயன்

இசை: சுப்ரமணியன் கே.வி

தயாரிப்பு: ‘ஜாய் மூவி புரொடக்சன்ஸ்’ டாக்டர் அஜித் ஜாய்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேசன்ஸ்)

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு நிறைய படங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றில் ஒன்று – மெல்லிய கதை இழையும், எக்கச்சக்க சுவாரஸ்யமும், நல்ல கருத்தும் கொண்ட இந்த ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’.

0a1bகணவர் குமாரசாமியை (குரு சோமசுந்தரம்) பிரிந்து வாழ்ந்து வருபவர் கோமதி (ஊர்வசி). இவரது மகனும், இக்கதையின் நாயகனுமான ரவிக்கு (பாலு வர்கீஸ்) மாலைக்கண் குறைபாடு இருக்கிறது. இதனால் திருமணம் தடைபடுகிறது. வேலையும் பறி போகிறது.

சொந்தத் தொழில் செய்யலாம் என்று பார்த்தால் அதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அப்போது அவரது அம்மா கோமதியின் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் சிலை புராதனமானது என்பதும், அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக்கொள்ள ஒரு கும்பல் தயாராக இருக்கிறது என்பதும் ரவிக்குத் தெரிய வருகிறது. அதேநேரம் புதிய கோயில் ஒன்றைக் கட்டி, அதில் அந்த விநாயகர் சிலையை வைக்க வேண்டும் என்று கோமதியும், அவரது உறவினர்களும் முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் தனது நண்பன் சார்ல்ஸ் (கலையரசன்) உதவியுடன் அம்மாவுக்குத் தெரியாமல் அந்த சிலையை திருடி விற்க திட்டம் தீட்டுகிறான் ரவி. அவன் விரும்பியபடி தொழில் தொடங்க முடிந்ததா? அம்மாவின் கோயில் கனவு என்ன ஆனது? என்பது ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

அப்பாவியான முகத்துடனும் அதற்கேற்ற நடிப்புடனும் நாயகன் ரவியாக வருகிறார் பாலு வர்கீஸ். தன் மாலைக்கண் குறைபாட்டைத் தாண்டி சாதிக்க வேண்டும் என்ற அவரது துடிப்பு பார்வையாளர்களுக்கு உத்வேகம். சொந்த வீட்டிலேயே திருட துணியும் கதாபாத்திரத்தில் சாதாரண இளைஞனை அசலாக பிரதிபலித்திருக்கிறார்.

0a1cசார்ல்ஸ் என்ற திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கலையரசன். வழக்கம் போல் யதார்த்தமான நடிப்பின் மூலம் கனமான கதையைச் சுமந்துசெல்வதில் கவனம் பெறுகிறார்.

நாயகனின் அம்மா கோமதியாக நடித்திருக்கிறார் ஊர்வசி. அதிக பக்தி கொண்ட அவருடைய படபடப்பு, துடிதுடிப்பு ஆகியன அவருடைய வேடத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

நாயகனின் அப்பா குமாரசாமியாக வருகிறார் குரு சோமசுந்தரம். அவரால் அந்த கதாபாத்திரம் சிறப்படைகிறது..

சிலைக்கு விலைபேசும் அபிஜா சிவகலா, அவரது உதவியாளர் மணிகண்டன் ஆச்சாரி, கலையரசனின் ஜோடியாக வரும் மிருதுளா ஆகியோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சுவாரஸ்யமாகச் சொல்வதற்கான அதிக சாத்தியக் கூறுகளைக் கொண்ட கதையை, கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம். புராதன விநாயகர் சிலை, அதை வாங்க நினைக்கும் கும்பல் என திரைக்கதை விரிந்ததும், பரபரக்கும் த்ரில்லர் எபெக்ட் வந்துவிடுகிறது. அது, கூடவே எதிர்பார்ப்பையும் கொண்டு வந்துவிடுகிறது.

பிறகு, பார்வை சரியாகத் தெரியாத நாயகன் தடுமாற்றத்துடன் இரவில் சிலையைத் திருடுவது, தெருவுக்குள் புதிதாக வரும் சிசிடிவி கேமரா, நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் கார், அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சிலை என இரண்டாம் பாதி பதற்றத்தைக் கூட்டுகிறது. சார்ல்ஸ் வரும் இடங்கள் ரசிக்க வைக்கின்றன. அவருக்கும் ரவிக்கும் இடையிலான காட்சிகளும் வசனங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன.

சுப்பிரமணியன் கே.வியின் பின்னணி இசையும், ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கின்றன.

‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ – பார்த்து ரசிக்கலாம்!