தூங்காவனம் – விமர்சனம்

ஆக்‌ஷன், நடந்தது என்ன என்பதே தூங்காவனம் படத்தின் ஒன்லைன்.

போலீஸ் அதிகாரியான கமல்ஹாசன் பணத்திற்காக எந்த வேலையையும் செய்யக் கூடியவர். அவர் போதைப் பொருள் கடத்தி வரும் பிரகாஷ்ராஜிடம் இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளை கைப்பற்றுகிறார். அதை பதுக்கி வைக்கும்போது மற்றொரு போலீஸ் அதிகாரியான திரிஷா பார்த்து விடுகிறார்.

போதைப் பொருளை திருடியதால் கமலின் மகனை பிரகாஷ்ராஜ் கடத்துகிறார். அவனை பணயக் கைதியாக வைத்துக் கொண்டு, திருடிய போதைப் பொருளை கேட்கிறார். மகனை மீட்கும் கட்டாயத்தில் இருக்கும் கமல், போதைப் பொருளை கொடுக்க நினைக்கிறார். ஆனால், அவர் பதுக்கி வைத்த இடத்தில் இருந்து போதைப் பொருள் காணாமல் போகிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் கமல், எப்படி தன் மகனை மீட்டார்? அந்த போதைப் பொருளை எடுத்தது யார்? கமல் போதைப் பொருளை கடத்துவதற்கு காரணம் என்ன? என்பதே பரபரப்பான மீதிக்கதை.

விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு இடையில் வந்த இரண்டு படங்களுமே குடும்பம், செண்டிமெண்ட் என கொஞ்சம் வேறு கதைக்களமே. ஆனால் மீண்டும் ஆக்‌ஷன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார். த்ரிஷா முதல்முறையாக போலீஸாக நடித்துள்ளார். த்ரிஷாவின் கேரக்டருக்காக பேசப்பட்ட படங்களில் இந்தப் படத்திற்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. இவர்கள் இருவரையும் விடவும் நடிப்பிலும், கவுண்ட்டர்களிலும் அப்லாஸ் அள்ளுகிறார் பிரகாஷ்ராஜ். கமலை உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டு ஆட்டிப் படைத்திருக்கிறார்.

ஆஷா சரத் அவ்ளோ பெரிய நடிகையாக பாபநாசம் படத்தில் அறியப்பட்டவர் இந்தப் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் காட்டியது சற்றே ஏமாற்றம். கிஷோர் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.

ரீமேக் தான் ஆனால் கமல் படம் எனில் அது வேறு தான் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சான்று. ஆளவந்தான் படத்திற்குப் பிறகு தீபாவளியன்று வெளியாகும் கமல்ஹாசன் படம். அதுவே ஒரு சிறப்பு.. எனில் ஆக்‌ஷன் வேட்டையில் மீண்டும் ஸ்டைலிஷ் கமல்ஹாசன்.

கண்டிப்பாக கமல் பிரியர்களும் சரி, ரீமேக் பிரியர்களும் சரி தவறவிடக்கூடாத படம் இந்தத் தூங்காவனம்.