அன்பிற்கினியாள் – விமர்சனம்

முத்துகுட்டி சேவியர் இயக்கத்தில், அன்னாபென் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற மலையாள வெற்றிப்படம் ‘ஹெலன்’. கதாநாயகியை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்ட இந்த மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளரும் பிரபல நடிகருமான அருண்பாண்டியன் வாங்கி ‘அன்பிற்கினியாள்’ என்ற பெயரில் தமிழ்ப்படமாகத் தயாரித்திருக்கிறார்.

நல்ல தமிழ்ப்பெயர் தாங்கிய திரைப்படங்களுக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துவந்த காலத்தில்கூட இத்தனை அருமையான, இனிமையான தலைப்பு எந்த தமிழ்ப்படத்துக்கும் வைக்கப்படவில்லை. இதற்காகவும், கதையின் மையக்கருவுக்குப் பொருத்தமாக பெயர் சூட்டியதற்காகவும் ‘அன்பிற்கினியாள்’ படக்குழுவுக்கு பாராட்டுகள்.

தந்தை – மகள் பாசத்தை மையமாகவும் அழுத்தமாகவும் கொண்ட இப்படத்தில் நிஜ தந்தை – மகளான அருண்பாண்டியனும், கீர்த்திபாண்டியனும் போட்டிபோட்டு நடித்திருப்பது ரசிகர்களுக்கு செம விருந்து

படத்தில் ஆயுள்காப்பீட்டுக் கழகத்தின் முகவர் பாத்திரத்தில் வருகிறார் அருண்பாண்டியன். அவரது ஒரே மகள் கதாபாத்திரத்தில் வரும் கீர்த்திபாண்டியன் ஒரு மாலில் உள்ள‘சிக்கன் ஹப்’பில் பார்ட்டைம் பணியாளராக இருக்கிறார். நர்ஸ் கோர்ஸ் முடித்துள்ள அவர், தனது அப்பாவின் கடனை அடைப்பதற்காக கனடா சென்று வேலை செய்யும் முயற்சியிலும் இருக்கிறார்.

a4

இது இப்படி இருக்க, நாயகன் பிரவீன்ராஜை காதலிக்கிறார் கீர்த்திபாண்டியன். இவர்களின் காதல் அருண்பாண்டியனுக்கு தெரியவர அவர் மனஉளைச்சலில் ஒரு நாள் முழுவதும் மகளுடன் பேசவில்லை. அந்த வருத்தத்துடன் பிரவீன்ராஜும் வெளிமாநிலத்துக்கு வேலைக்குச் செல்ல இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்குச் செல்லாமல் சிக்கன் ஹப்பிலேயே இருக்கிறார் கீர்த்திபாண்டியன். இந்நிலையில் வீட்டுக்கு கிளம்பும் நேரம் எதிர்பாராத விதமாக இறைச்சி குளிரூட்டும் அறைக்குள் மாட்டிக் கொள்கிறார்.

கீர்த்தி பாண்டியன் அங்கிருந்து தப்பித்தாரா? அவரது அப்பா மற்றும் காதலனுடன் இணைந்தாரா? என்பது மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருண் பாண்டியன் சொந்த மகள் கீர்த்தி பாண்டியனுக்காக ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். தன்னுடைய அனுபவ நடிப்பையும், உடல் மொழியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மகள் மீதான பாசத்தையும், காணாமல் போன பிறகு ஏற்படும் தவிப்பையும் உணர வைக்கிறார். காவல் நிலையத்தில் போலீஸாரை அணுகும் விதத்தில் கைத்தட்டல் வாங்குகிறார்.

தும்பா படத்துக்குப் பிறகு இரண்டாவது படத்திலேயே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் கீர்த்தி பாண்டியனுக்கு கிடைத்து இருக்கிறது.  கதாபாத்திரத்தை உணர்ந்து முழுமையான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். துறுதுறு நடிப்பாலும், குளிரூட்டும் அறைக்குள் சிக்கிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளிலும் அசர வைக்கிறார்.

கீர்த்தி பாண்டியனின் காதலனாக வரும் பிரவீன்ராஜ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சப்-இன்ஸ்பெக்டராக வரும் ரவீந்திர விஜய், சிக்கன் ஹப் மேலாளராக நடித்த பூபதி ராஜா, மால் செக்யூரிட்டியாக வரும் ஜெயராஜ், ஏட்டாக வரும்  அடிநாட் சசி என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள்.

ஒரு காட்சியில் வந்தாலும், நடிப்பில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் கோகுல். அவர் . ‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ படங்களுக்குப் பிறகு  இயக்கிய ஐந்தாவது படம் இது. ரீமேக் படத்தை இயக்க தனி திறமை வேண்டும். கதையின் தன்மை மாறாமல் விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஸ்கோர் செய்ய வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் பாராட்ட வைக்கின்றன. குளிரூட்டும் அறைக்கு சரியான ஒளியூட்டி நம் உணர்வுகளை சில்லிட வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.

அன்பிற்கினியாள் – குடும்பத்துடன் கண்டுகளிக்க இனியாள்!