”மக்கள் விரோத அரசுகளை வீழ்த்த எழுத்தாயுதம் தேவை!” – இயக்குனர் அமீர்
எழில்பாரதி எழுதிய ’செம்பீரா’ – சிறுகதைகள், குறுநாவல் தொகுப்பு மற்றும் ’ஆயுதம் வைத்திருப்பவன்’ கவிதைகள் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை, தி.நகர், வினோபா அரங்கில் நடந்தது.
முனைவர் பூ.சீனிவாசன் வரவேற்றுப் பேச, பத்திரிகையாளர் ஆர்.சி.ஜெயந்தன் தொகுத்து வழங்க, த.மு.எ.க.ச.வின் வடசென்னை மாவட்டப் பொறுப்பாளர் ராஜசங்கீதன், இயக்குனர்கள் ரமேஷ் பாலகிருஷ்ணன், விருமாண்டி, எழுத்தாளர் பாலமுரளிவர்மன் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் புத்தகங்களை இயக்குனர் சேரன் வெளியிட, இயக்குனர் அமீர் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் பேசுகையில், “எதிர் கருத்துகளே வெற்றிப்பட சினிமாக்களை உருவாக்கும். எதிர் கருத்துள்ள உதவி இயக்குனர்களை தன்னைச் சுற்றி வைத்திருக்கும் இயக்குனர் மட்டுமே ஒரு நல்ல திரைப்படத்தை, வெற்றிப் படைப்புகளை உருவாக்க முடியும்” என்றார்..
இயக்குனர் அமீர் பேசுகையில், “பாசிச, மக்கள் விரோத அரசுகள் வீழ்த்தப்பட வேண்டும் என்றால் இங்கு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அதாவது எழுத்தாயுதங்களை உருவாக்கித் தரும் படைப்பாளிகள் தேவைப்படுகின்றனர். கவிஞர்கள், எழுத்தாளர்களின் தலையாய பணி காதலை எழுதுவதை விட, சமூகப் பிரச்னைகளை எழுதுவது தான். போராட்டங்களே மக்கள் விரோத அரசுகளை அகற்றும். அப்போராட்டங்களுக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டியது, முழக்கங்கள் தான். அம்முழக்கங்களை உருவாக்க வேண்டியது, கவிஞர்கள் தான். அது காலத்தின் தேவை” என்று கூறினார்.
பதிப்பாளர் ஜீவா படைப்பகம் கார்த்திக் புகழேந்தி நன்றி கூறினார்.