அண்ணாதுரை – விமர்சனம்

வித்தியாசமான கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கவனமாகத் தேர்வு செய்து நடித்து, படிப்படியாக உயர்ந்து, தமிழ், தெலுங்கு படவுலகுகளில் முன்னணி நாயகனாக வலம்வரும் விஜய் ஆண்டனி, முதன்முதலாக இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது. இதயத்தைத் தொடும் குடும்பக்கதை பின்னணியில், குணநலன்களில் முற்றிலும் மாறுபட்ட அண்ணன் – தம்பியாக இதில் நடித்துள்ளார் அவர்.

உயிருக்குயிரான தன் காதலி விபத்தில் உயிரிழந்தைத் தாங்கிக்கொள்ள முடியாத அண்ணாதுரை (விஜய் ஆண்டனி), அந்த சோகத்தில் மதுவுக்கு அடிமையாகி தன்னிலை இழந்து வாழ்ந்து வருகிறார். அவரது தம்பி தம்பிதுரை (இன்னொரு விஜய் ஆண்டனி), ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஒரு கட்டத்தில் மனம் மாறும் அண்ணாதுரை, குடிப்பழக்கத்தை கைவிடும் முடிவுடன், கடைசியாக அளவுக்கு அதிகமாக மது அருந்துகிறார். அப்போது நிகழும் ஒரு திடீர் நிகழ்வால் கொலைகாரனாகி, 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று சிறை செல்கிறார். அவர் சிறையிலிருக்கும் இந்த 7 ஆண்டுகளில் அவரது குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத மாற்றங்களும், அதன் விளைவுகளும் தான் மீதிக்கதை.

0a1d

அண்ணன் அண்ணாதுரை, தம்பி தம்பிதுரை என முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, மிகையில்லாத, ரசிக்கத்தக்க யதார்த்தமான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், குடும்பப் பாசம், அதிரடி ஆக்ஷன் என அனைத்திலும் தனக்கே உரிய தனித்துவமான முத்திரையைப் பதித்திருக்கிறார்.

படத்தில் மூன்று நாயகிகள் இருந்தாலும், டயானா சம்பிகாவிற்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது அவருக்கு இது தான் முதல் படம் என்றாலும், கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, கொஞ்சலும், குறும்புத்தனமுமாய் சிறப்பாக நடித்திருக்கிறார். ஏனைய இரண்டு நாயகிகளான ஜூல் மேரியும், மகிமாவும் தத்தமது பாத்திரம் உணர்ந்து அளவாக நடித்திருக்கிறார்கள்.

நாயகி டயானா சாம்பிகாவின் அப்பாவாக வரும் செந்தில்குமரன், படம் முழுக்க வலம் வந்து அருமையான, யதார்த்தமான குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இனிவரும் படங்களில் பலவிதமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவரை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பை இப்படத்தில் அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் அம்மாவாக வரும் ரிந்து ரவி, இயல்பான அம்மாவாக உருக வைக்கும் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய் ஆண்டனியின் அப்பாவாக வரும் நளினிகாந்த் நடிப்பு ஓ.கே. ரகம்.

காமெடியில் கலக்கியிருக்கிறார் காளி வெங்கட். வில்லத்தனத்தில் ராதாரவி, உதயராஜ்குமார், சேரன்ராஜ் ஆகியோர் மிரட்டியிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் முதல் படத்திலேயே ஒரு குடும்பப் பாங்கான கதையை, வழக்கமான அண்ணன் – தம்பி கதை போல இல்லாமல், முற்றிலும் மாறுபட்டு விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சுவாரஸ்யமாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள். முதல் பாதி அண்ணன் அண்ணாதுரையையும், இரண்டாம் பாதி தம்பி தம்பிதுரையையும் மையமாகக் கொண்டு கதை நகருவது புதுமையாகவும், ரசிக்கும்படியும் இருக்கிறது.

விஜய் ஆண்டனியின் இசையில் ‘இஎம்ஐ…’ பாடல் ரசிக்க வைக்கிறது. பாடலைப் படமாக்கியிருக்கும் விதமும் அருமை. ‘தங்கமா வைரமா…., ஓடாதே….’ ஆகிய பாடல்கள் கதையோட்டத்துக்கு வலு சேர்க்கின்றன. விஜய் ஆண்டனியின் பின்னணி இசையும் , தில்ராஜின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பும் சிறப்பாகவே உள்ளது.

‘அண்ணாதுரை’ – ரசிப்புக்குரிய பாசத்துரை!

 

Read previous post:
0a1d
திருட்டுப்பயலே 2 – விமர்சனம்

ஃபேஸ்புக்கில் பெண்களுக்கு வலை வீசி தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒருவனும், ரகசியங்களை ஒட்டுகேட்பதையே முழு நேரப் பணியாக செய்யும் போலீஸும் மோதினால் அதுவே 'திருட்டுப்பயலே 2'. உளவுத்துறையில்

Close