சி 3 – விமர்சனம்

ஹரி இயக்கத்தில், போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்த ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ ஆகிய படங்களின் வெற்றி அளித்த ஊக்கத்தால் இப்போது திரைக்கு வந்திருக்கிறது ‘சிங்கம் 3’ எனும் ‘சி 3’.

தமிழகத்தில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் சூர்யாவை, ஒரு கொலைப் பின்னணி குறித்து கண்டுபிடிக்க ஆந்திர மாநில அரசு அழைப்பு விடுக்கிறது. அந்த கொலையின் பின்னணியை ஸ்கெட்ச் போட்டு தீவிரமாக விசாரிக்கிறார் சூர்யா. ஆனால், அந்த கொலைக்கான காரணங்கள் சர்வதேச குற்ற விஷயமாக அச்சுறுத்துகின்றன. அந்த சர்வதேச குற்றம் என்ன, சூர்யா எப்படி கண்டுபிடிக்கிறார், குற்றவாளிக்கு தரப்படும் தண்டனை என்ன என்பதை பரபரப்பான திரைக்கதை அழுத்தமாக சொல்கிறது.

தமிழ் சினிமாவில் பாகம் 2, பாகம் 3 படங்கள் முதல் பாகத்துடன் ஓரளவே பொருந்தக் கூடியதாகவோ அல்லது ஒரே கருப்பொருளை மட்டும் மையமாகவோ கொண்டிருக்கும். ஆனால், ஒரு பாகத்தில் விட்ட இடத்தில் இருந்து இன்னொரு பாகத்தைத் தொடர்வது, சரியான நேர்த்தியான தொடர்ச்சியை படம் முழுக்க பரவ விடுவது என ‘சி3’ தனித்து நிற்கிறது. அந்த விதத்தில் இயக்குநர் ஹரியின் மெனக்கெடலுக்கு பாராட்டுகள்.

ஹரி படம் என்றால், அதில் காக்கிச சட்டையை அணிந்தால் சூர்யா கம்பீரமாய் நின்று விளையாடுகிறார். கதாபாத்திரத்துக்கு உரிய மிடுக்கு, இறுக்கம், பார்வை, உடல் மொழி ஆகியவற்றில் சூர்யா மிகக் கச்சிதம். நடனத்திலும் சூர்யாவின் உழைப்பு பளிச்சிடுகிறது.

‘நான் பார்த்ததெல்லாம் திங்குற ஓநாய் இல்ல. பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம்’, ‘போலீஸ்காரன் ஒதுங்குறான்னா பதுங்குறான்னு அர்த்தம், பதுங்குறான்னா பாயப்போறான்னு அர்த்தம்’ என சூர்யா பேசும் வசனங்களுக்கு திரையரங்கில் பலத்த கரவொலி கிடைக்கிறது.

அனுஷ்காவுக்கு படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். கதையோட்டத்துடன் கூடிய காட்சிகளில் ஸ்ருதிஹாசன் பிரகாசிக்கிறார்.

நாசர், ராதாரவி, விஜயகுமார், சரத்பாபு, க்ரிஷ், மனோரமா, யுவராணி, சுமித்ரா, டெல்லி குமார், தியாகு, பிரேம், அண்ணாச்சி, சாம்ஸ், ஜோ மல்லூரி, ஜெயப்பிரகாஷ், சுமன், மோகன் வி.ராமன், நளினி, சாண்ட்ரா எமி என பெரிய நட்சத்திர பட்டாளம் திரைக்கதையை நகர்த்திச் செல்ல உறுதுணையாக இருக்கிறது.

முரட்டுக் கதாபாத்திரத்தில் சரத் சக்சேனாவும், தொழிலதிபர் கதாபாத்திரத்தில் தாகூர் அனுப் சிங்கும் சரியாகப் பொருந்துகிறார்கள். ரோபோ ஷங்கர் குணச்சித்திரம் கலந்த நடிப்பில் யதார்த்தம் மீறாமல் நடித்திருக்கிறார்.

பரபர சண்டைக் காட்சிகளிலும், ஆந்திரா, தெலங்கானா, ஆஸ்திரேலியா என எல்லா இடங்களிலும் நம் தோள்களில் கேமரா பயணிக்கிறதோ என்ற அளவுக்கு ப்ரியனின் ஒளிப்பதிவில் ஆற்றல் அடங்கியுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ‘முதன்முறையாக பெண்ணே உன்னைப் பார்த்தேன்’ பாடல் அருமை. பின்னணி இசையில் சில காட்சிகளில் ஹாரிஸ் தன்னை நிரூபித்திருக்கிறார்.

படத்தொகுப்பில் வேகம் புகுத்தி, ஏற்கெனவே எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகரும் திரைக்கதையை, சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக்கியிருக்கிறார்கள்.

களம், காக்கிச்சட்டை என ஒரே மாதிரி பாதையில் தான் ஹரி பயணிக்கிறார். அதில் எந்தவித புதுமை இல்லாவிட்டாலும், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனத்தை திரைக்கதையில் புகுத்தி இருக்கிறார்.

அடுத்து ‘சி4’ படம் எடுக்க இயக்குநர் ஹரியும், ஹீரோ சூர்யாவும் தயாராகி விட்டதையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

‘சி 3’ – வெற்றி கர்ஜனை!