“அம்பேத்கர், பெரியார், காமராஜருடன் அண்ணாவையும் படிக்க வேண்டும்”: விஜய் அறிவுரை குறித்து வெற்றிமாறன் கருத்து

”அம்பேத்கர், பெரியார், காமராஜர் குறித்து மாணவர்கள் படிக்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு நடிகர் விஜய் கூறியுள்ள அறிவுரை குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் வெற்றிமாறன், ”அம்பேத்கர், பெரியார், காமராஜருடன் அண்ணாவையும் படிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வு சென்னை – நீலாங்கரை பகுதியில் நேற்று (ஜூன் 17) நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசும்போது, ”இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான். ‘காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது’. அது தான் அந்த வசனம். இது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தம். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கான நேரம் தான் இது” என்று கூறியிருந்தார். மேலும், ”மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் குறித்து படிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

வெற்றிமாறன் இயக்கிய ’அசுரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை நடிகர் விஜய் மேற்கோள் காட்டியது குறித்து இயக்குநர் வெற்றிமாறனிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “சினிமா வழியாக நாம் சொல்லும் ஒரு விஷயம், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நபரிடம் சென்றடைந்திருப்பது, அந்த வசனம் ஏற்படுத்திய நேர்மறை தாக்கத்துக்கான ஒரு பெரிய உதாரணமாக பார்க்கிறேன். பெரியார், அம்பேதகர், காமராஜருடன் அண்ணாவையும் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.