பல்கலைக்கழக வேந்தர் விவகாரம்: ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்பதை முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டி பேசினார்

ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் இது. தமிழ்நாட்டில் முதலமைச்சரே வேந்தராக இருக்கும் பல்கலைக்கழகம் இதுதான்.

ஜெயலலிதா வேந்தராக தன்னையே நியமித்துக்கொண்டதை நான் மனதார பாராட்டுகிறேன். முதல்-அமைச்சர் வேந்தராக இருந்தால் தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்பதை முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா. முதலமைச்சர் பலகலைக்கழக வேந்தராக இருப்பதால் மக்கள் நினைப்பதை செய்ய முடிகிறது. பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் வேந்தராக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் இதுதான்.

பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நமது சட்ட போராட்டத்திற்கு நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம்” என்றார்.

இதனையடுத்து இவ்விழாவில் திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். பி.சுசீலா பாடிய “நீ இல்லாத உலகத்திலே” என்ற பாடலை அப்போது மு.ஸ்டாலின் மேடையில் பாடி அசத்தினார்.

இது குறித்து பி.சுசீலா பேசுகையில் “முதலமைச்சர் பாடியுள்ளது மிகப் பெரிய சாதனை நிகழ்வு. அவரது தந்தையை நினைத்து அவர் ’நீ இல்லாத உலகத்திலே’ என பாடியுள்ளார்” என்று தெரிவித்தார்.