வேந்தர் மூவிஸ் மதன் “தற்கொலை” கடிதம்: பாரிவேந்தருக்கு சிக்கல்!

எஸ்ஆர்எம் குழும நிறுவனரும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிறுவனருமான பச்சமுத்து என்ற பாரிவேந்தருக்கு நெருக்கமானவராக இருந்தவர் எஸ்.மதன். இவர் கல்விக்கொள்ளையர் பாரிவேந்தரின் பினாமி என்றும் கூறப்படுவது உண்டு. எஸ்ஆர்எம் குழும கல்லூரிகளில் சேர வரும் மாணவர்களிடம் கட்டணம் மற்றும் நன்கொடை என்ற பெயரில் பாரிவேந்தர் கொள்ளையடிப்பதற்கு மதன் இடைத்தரகராக செயல்பட்டு வந்தார்.

2011ஆம் ஆண்டு வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கினார் மதன். இந்நிறுவனம் வசந்தபாலன் இயக்கிய ‘அரவான்’, விஷால் நடித்த ‘பாண்டியநாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ உட்பட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளது. மிர்ச்சி சிவா நடித்த ‘தில்லுமுல்லு’ உட்பட சில படங்களையும் தயாரித்துள்ளது.

பாரிவேந்தரின் அரசியல் கட்சியிலும் முக்கியப் பங்காற்றி வந்தார் மதன். மத்திய ஆட்சியையும், வருமான வரித்துறையையும் கையில் வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, தனது மாநில கிளைக்குத் தேவையான பணத்தை, மதன் மூலமாகவே பாரிவேந்தரிடம் கறந்து வந்தது.

இந்நிலையில், மதனை பிடிக்காத சிலர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, அவருக்கும் பாரிவேந்தருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மதனை பாரிவேந்தர் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்.

இதன் காரணமாக மதன் ஐந்து பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். வேந்தர் மூவீஸ் லெட்டர் பேட் தாள்களில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில், வருமான வரித்துறை மற்றும் காவல்துறையிடம் பாரிவேந்தரை சிக்க வைக்கும் சில விஷயங்களை மதன் குறிப்பிட்டிருப்பதோடு, காசிக்குப் போய் கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் எழுதியிருக்கிறார்.

0a1r

அவர் எழுதியுள்ள “தற்கொலை” கடிதத்தில் இடம் பெற்றிருக்கும் ஆங்கில வார்த்தைகளை தமிழ் எழுத்துக்களுக்கு மாற்றியும், எழுத்துப் பிழைகளை நீக்கியும் அப்படியே கீழே கொடுத்துள்ளோம்:-

என் நண்பர்களுக்கு, என் உயிர் வேந்தருக்கு, என் குடும்பத்தினருக்கு,

ஒரு ஜீரோவில் தொடங்கி, ஜீரோவில் முடிகிறது என் வாழ்க்கை. கடைசியில் என்ன ஒரு நிம்மதி. காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன். காசி விஸ்வநாதர் இருக்கும் இடத்தில் மரணம் அடைந்தால் அடுத்த ஜென்மம் இல்லை. எனக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம். எந்த ஒரு ஆசையும் இல்லாமல் செல்கிறேன்.

அப்புறம் என்ன இந்த லெட்டர்?

என்னிடம் அட்மிஷன் பணம் தந்தவர்களும், எனக்காக சினிமாவில் முதலீடு செய்தவர்களும் பயப்பட வேண்டாம். பணம் எஸ்ஆர்எம் நிறுவனத்திலும், எம்ஜிஎம் (ஓடிஒய்) நிறுவனத்திலும் சேஃபாக உள்ளது. நீங்கள் அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

ஐயா. என் வாழ்வில் எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் வேந்தர். எனக்கு ஒரு பெயரை கொடுத்து என்னை இந்த உலகுக்கு காட்டியவர். எஸ்ஆர்எம் நிறுவனம் என்றால் அட்மிஷன், சினிமாவில், கட்சியில் (ஐஜேகே) மதன்தான் என்று பெயரை கொடுத்தவர். என் தலைவருக்காக வாழ்ந்தேன். தலைவனால் போகிறேன்.

எஸ்ஆர்எம் குரூப் நம்பர் ஒன் ஆக வர வேண்டும் என்று பாடுபட்டேன். எஸ்ஆர்எம்-க்கு எந்த ஒரு பிரச்னை என்றால் முதலில் நான் நின்றேன். எஸ்ஆர்எம் என்று ஒரு யுனிவர்சிட்டியாக வளர்வதற்கு எங்கள் குரூப் ஒரு காரணம். எல்லா சீட்டும் ஃபுல். எல்லா இடத்திலும் வேலை. எப்படி சாத்தியம்? இது வேந்தருக்கு தெரியுமோ, தெரியாதோ? ஆனால் எஸ்ஆர்எம் இல்லாத எல்லா காலேஜ் சேர்மனுக்கும் மதனை தெரியும். ஏன் என்றால் எனக்கு வேந்தர் மேல் உள்ள வெறி. அவர் மனம் வருத்தப்படக் கூடாது என்று அவருக்காக எல்லாம் செய்தேன்.

மாணவர்கள் கல்லூரியில் செலுத்தும் பணம் குறைவாக இருக்கும். ஆனால் கல்லூரிக்கு போகும் பணம் நிறைவாக இருக்கும். எப்படி? எல்லாம் என் கையில் இருந்து. என் முயற்சி. என் தலைவனிடம் பேர் வாங்க வேண்டும், தலைவர் எப்போதும் என்னை கூட வைத்துக்கொள்ள வேண்டும் என்று வெறி. நீங்கள் நம்பாமல் இருக்கலாம். என்னிடம் 8 வருடமாக உள்ள பெற்றோர் அட்ரஸ், மாணவர்கள் போன் நம்பர் உள்ளது நீங்கள் விசாரிக்கலாம்.

திருச்சி மெடிக்கல் காலேஜ் பெர்மிஷன் கிடைக்கவில்லை. இரண்டு வருடமாக நடக்கவில்லை. ஐயா முகம் வாடியது. நான் என்ன செய்தேன், எவ்வளவு செய்தேன் என்று அவருக்கு தெரியாது. ஆனால் என் நண்பர்களுக்கு தெரியும். எல்லாத்துக்கும் புரூஃப் உள்ளது.

இந்த வருடம் P.6  அண்டு U.6  மெடிக்கல் அட்மிஷன் NEET எக்ஸாம் இருந்தும் 102 சீட் ஃபுல்லாக உள்ளது எஸ்ஆர்எம்-லும், எம்ஜிஎம்-லும். எப்படி? மாணவர்கள் திருச்சி மெடிக்கல் காலேஜூக்கும் 1 வருடமாக வெயிட் செய்கிறார்கள். எப்படி? எல்லாம் நான் பட்ட உழைப்பு.

ஐஜேகே கட்சி தொடங்கி முதல் மாநாடு. ட்ரெயினில் வெளிமாநில மாணவர்கள், 100 பஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர். எப்படி? பீகார் எலக்ஷன். 14 தொகுதியில் ஐஜேகே நின்றது. எப்படி? கட்சி தொடங்கி 6 மாதம் இருக்கும்போது எப்படி எம்எல்ஏ (திருநெல்வேலி) எலக்ஷன், சவுத்ல, ஐஜேகே எப்படி வந்தது? பிஜேபி மாநாடு, கவுன்சிலர் எலக்ஷன், புதுக்கோட்டை பை எலக்ஷன், பெரம்பலூர் எம்பி எலக்ஷன், யார் செலவு செய்தது? நான் தான். நான் பொய் சொல்லவில்லை. இதை இணையதளத்தில் யு-ட்யூபிலும் பார்க்கலாம்.

ஒரு படத்தில் டைரக்டர் ஷங்கர், ஐயா பெயரை கேவலப்படுத்தியதால் வந்தது தான் இந்த வேந்தர் மூவீஸ். எத்தனை படம் பண்ணினோம்? எல்லாம் நஷ்டம். ‘தலைவா’ படம் இவர் பேர் போட்டதால் படத்தையே நிறுத்தி விட்டார்கள். ‘லிங்கா’, ‘பாயும் புலி’ எல்லாம் நஷ்டம். இருந்தாலும் வேந்தர் மூவிஸ் நிற்கவே இல்லை. இன்னும் படம் எடுத்துக்கொண்டு இருக்கிறது. என் ஐயா பெயரில் உள்ளது. அதனால் எல்லாம் நல்ல தானே போகுது? அப்புறம் ஏன் இந்த முடிவு?

ஐயா குடும்பத்துக்கு சந்தேகம் வருது. என்ன சந்தேகம்? மதன் இவர் பையனா? இவர் ஏன் மதனுக்கு முதலிடம் கொடுக்கிறார்? ஐயாவிற்கு பிரஷ்ஷர். ஆனால் என்னை விட்டுக் கொடுக்கவில்லை.

எனக்கு வந்தது என்ன? இன்கம் டாக்ஸ் ரெய்டு. 6 ½ கோடி போச்சு. ஒரு பொய் என் மேல் மிஸ்டர் ரவி சார் ரெக்கமண்டேஷன்ல. ரவி சார் கட்சியில் வரார். அட்மிஷனுக்கு மதனை வரவிட கூடாது, கட்சியிலிருந்து மதனை வெளியே கொண்டு வர வேண்டும், ஐயாவையும் மதனையும் பிரிக்கணும், ஏதோ சொத்தை என் பெயரில் எழுதி வைத்து விடுவார் என்று, கேரளா போய் பில்லி சூனியம் வர வைத்து விட்டாச்சு. எனக்கு அதை பற்றி கவலை இல்லை.

ஆனா கடந்த 6 மாதமாக ஐயா என்னிடம் பேசுவது இல்லை. போன் கட் பண்ணார் நேத்துகூட காசு அனுப்ப சொல்லி ரெங்காபாபு சார் போன் பண்றார். சுகுமார் போன் பண்றார். நான் யாருக்கு வாழ்ந்தேனோ, யாருக்கு செலவு பண்ணனோ அவர் பேசுவது இல்லை. எலக்ஷனுக்கு கூப்பிடவில்லை. அதனால் இந்த முடிவு. நான் போறேன்.

ஆல்ரெடி இது புதுசு இல்லை. நவம்பர் 30ல் ட்ரை பண்ணினேன். முடியல. ஸோ, இப்போது நான் போறேன்.

என் கோரிக்கைகள். வேந்தர் ஃபேமிலிக்கு மதன் போயிட்டானே, எஸ்ஆர்எம்-க்கும் அவருக்கும் எந்த சம்மதமும் இல்லைன்னு ரவி சொல்வார். ஆனால் இந்த தடவை அது நடக்காது. (1) 8 வருடமாக நான் எஸ்ஆர்எம்-க்கு போட்ட ஸ்டூடண்ட் லிஸ்ட் நான் இதில் சேர்த்து இருக்கிறேன்.(2) வே ந்தர் மூவிஸ், வேந்தர் டிவி பேங்க் ஸ்டேட்மெண்ட் கனெக்ஷன் பார்த்தால் தெரியும். (3) இன்கம் டாக்ஸ் ரெய்டில் எடுத்த பேமண்ட்-லிருந்து எஸ் ஆர் எம்  வாங்கி உள்ளது.(4) வேந்தர் டிவி சேட்டிலைட் டெலிகாஸ்ட் ஆகும் படங்களில் நிறைய படங்கள் என் பெயரில் உள்ளதாக இருக்கும். அதுக்கு எந்த ஒரு பேமண்ட் நான் வாங்கி இருக்க மாட்டேன். இன்னும் நிறைய மேட்டர் இருக்கு. நான் இல்லாவிட்டால் என்ன…என் உயிர் நண்பர்கள் பிரஸ்ஸூக்கு வருவார்கள்.

நான் லாஸ்ட்டாக கேட்பது என்னனா, இந்த நான் அனுப்பிய லிஸ்ட்  P6/U6 மாணவர்கள் எல்லாம் காலேஜ் சேரணும். அவர்களிடம் வாங்கிய பணம் உங்களிடம் முழுமையாக கொடுக்கப்பட்டு உள்ளது. NEET வந்தால் அவர்களுக்கு அந்த பணம் திரும்ப கொடுக்கப்பட வேண்டும். வேந்தர் மூவிஸ் மேல் எந்த கடனும் வரக் கூடாது. இதையும் மீறி நீங்கள் என் நண்பர்களையோ, என் குடும்பத்தையோ தொந்தரவு செய்தால் உங்களை கடவுள் மன்னிக்க மாட்டார்.

ஸோ… ஐயா, நான் உங்களை பார்க்காமல் போகிறேன். என் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.

இவ்வாறு வேந்தர் மூவிஸின் லெட்டர் பேட் தாள்களில் மதன் எழுதியுள்ளார்.

உண்மையிலேயே இதை மதன்தான் எழுதினாரா? அவர் எங்கே போனார்? அவரது கதி என்ன? மெய்யாகவே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் கடிதம் எழுதினாரா? அல்லது சும்மா மிரட்டுவதற்காக எழுதினாரா? என்பது மர்மமாக உள்ளது.

இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

0a3x

மேலே உள்ள படத்தில் மனைவி சிந்து, மகள் வேதிகாவுடன் வேந்தர் மூவிஸ் எஸ்.மதன்