விஷால் அலுவலகம் மீது தாக்குதல்: சொகுசு கார் அடித்து நொறுக்கப்பட்டது!

“தென்னிந்திய” நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலின் அலுவலகம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. அவரது அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது.

“தென்னிந்திய” நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து பதட்டத்துடனேயே பொதுக்குழு நடந்தது. எதிர்பார்த்தது போல கலாட்டாவும் நடந்தது. இந்த கலாட்டாவின்போது நடிகர் கருணாஸின் காரை சிலர் அடித்து நொறுக்கினர். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி அமளியை அடக்கினர். சிலர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.

சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின், மாலை 5.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் முடிந்தது.

இந்த நிலையில், வடபழனியில் உள்ள விஷாலின் அலுவலகம் திடீரென தாக்குதலுக்குள்ளானது. அந்த அலுவலகத்திற்கு வந்த சில மர்ம நபர்கள் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விஷாலின் சொகுசுக் காரையும் அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விஷாலின் மேனேஜர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், சரத்குமார் தரப்புதான் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.