நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்: விஷால் அறிவிப்பு!

“தென்னிந்திய” நடிகர் சங்கத்தில் இருந்து அதன் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்கள். சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திடீரென மோதல் ஏற்பட்டது. கருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு என தொடங்கி, விஷால் அணியினருக்கும், எதிர் அணியினருக்கும் இடையே பயங்கர அடிதடி என நடிகர் சங்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை காட்சிகள் அரங்கேறின. இது தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், “தென்னிந்திய” நடிகர் சங்கத்தில் இருந்து இச்சங்கத்தின் முன்னாள் தலைவர்  சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோரை நிரந்தரமாக நீக்குவது என்று முடிவெடுப்பதாக விஷால் அறிவித்தார்.

இதற்கு  நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சரத்குமார் மற்றும் ராதாரவியை நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் “தென்னிந்திய” நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்துள்ளார்.