பெரியாரை அவமதித்ததாக வழக்கு: நீதிபதி கேள்வி – பாண்டே திணறல்!

பெரியாரை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார் தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே.

“இனியும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன்” என்று நீதிபதி கண்டிப்புடன் கூறியிருந்ததை அடுத்து பாண்டே நேரில் ஆஜரானார்.

பாண்டேவைப் பார்த்து நீதிபதி கேட்ட முதல் கேள்வி, “சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கிலோ கணக்கில் டிவியில் அறிவுரை சொல்றீங்களே, நீங்கள் கடந்த ஆறு வாய்தாக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையே ஏன்?” என்பது தான்.

இதற்கு பதிலளித்த பாண்டே, “எனக்கு உடல்நிலை சரியில்லை; அதனால் ஆஜராக இயலவில்லை” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

அதைக் கேட்டு சிரித்த நீதிபதி, “நான் தினமும் டிவியில உங்களை பார்க்கிறேனே” என்றவுடன், இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறிய பாண்டே அசடு வழிந்தார்.

“அடுத்த விசாரணை நாளன்று உங்களின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தனுடன் நீங்கள் ஆஜராக வேண்டும்” என்றார் நீதிபதி.

அதற்கு பாண்டே, “எங்கள் நிர்வாக இயக்குனர் எந்த தவறும் செய்யவில்லையே” என்றார். கடுப்பான நீதிபதி, “இது நீதிமன்றம். இங்கு நான்தான் கேள்வி கேட்க வேண்டும்” என்றதற்கு பாண்டே, “எனக்கு வீரமணி அய்யாவைத் தெரியும். சுபவீ அண்ணனைத் தெரியும்” என்று ஏதேதோ உளறினார்.

அடுத்த விசாரணையை வருகிற 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.