ராஜீவ் கொலை வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சிகர மோசடி அம்பலம்!

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளியான சாந்தனை, திருச்சியில் வைத்து நான்தான் சுட்டுக் கொன்றேன்” என தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார் சி.பி.ஐ முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெபமணி மோகன்ராஜ். இதையடுத்து, ’25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தன் அப்பாவியா?’ என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் வலுவாக எழுந்துள்ளது.

0a2f

தனியார்  தொலைக்காட்சி ஒன்றில், கடந்த 2013 டிசம்பர் மாதம் ராஜீவ் காந்தி படுகொலை மர்மங்கள் தொடர்பான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில், காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி, பத்திரிகையாளர் அய்யநாதன், வழக்கறிஞர் சங்கரசுப்பு, சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெபமணி மோகன்ராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த விவாதத்தில், திருச்சியில் வைத்து ராஜீவ் வழக்கின் சாந்தன் சுட்டுக் கொல்லப்பட்டதாக விவாதம் எழுந்தது. பிறகு, அதுபற்றி பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், ஜெபமணி மோகன்ராஜ் தனது ஃபேஸ்புக் பதிவில், “திருச்சியில் வைத்து சாந்தனை என் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்’” எனப் பதிவிட்டிருந்தார்.

0a2e

அவரது இந்தப் பதிவு மனிதஉரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘குற்றவாளி எனச் சொல்லப்படும் ஒருவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் சுட்டுக் கொன்றது ஏன்? அவரது உடலை என்ன செய்தார்கள்? அவரது குடும்பத்தாருக்குத் தகவல் கொடுத்ததாக எங்கும் பதிவு செய்யப்படவில்லை. இது நியாயமான செயல் அல்ல என்று இன்ஸ்பெக்டர் மோகன்ராஜூக்குத் தெரியாதா?’ என கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்து நீங்கள் செய்தது தேசபக்தியா? இல்லை, தேசத் துரோகமா? என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் பா.ஏகலைவன் எழுதியுள்ள பதிவு:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ. டீம் சொல்லும் ஆட்களை பிடித்து வரும் ட்ராக்கிங் குழுவில் இருந்த C.B.I அதிகாரி Jebamani Mohanraj குண்டு சாந்தனை தான்தான் சுட்டேன் என்று ஒரு பதிவை போட்டு பெருமிதம் கொள்கிறார். கொள்ளட்டும்….

இங்கே யார் அந்த குண்டு சாந்தன் என்பதை சொல்லியாக வேண்டும். கூடவே பெருமிதப்பட்டுக் கொள்ளும் இந்த நேர்மையான அதிகாரியின் ‘மனச்சாட்சி’ பற்றியும் கேள்வி கேட்க வேண்டும்.

சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன், “பேரறிவாளனின் வாக்கு மூலத்தை நான் தவறாக பதிவு செய்துவிட்டேன்” என்று மீடியாக்களில் பேட்டி கொடுத்திருந்த நேரம்…

அதையொட்டி ஒரு தனியார் டி.வி.யில் விவாதம் நடந்தது. காங்கிரஸ் கட்சி திருச்சி வேலுசாமி, சி.பி.ஐ. தலைமை புலனாய்வு விசாரணை அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ- இன்ஸ்பெக்டராக இருந்து வெளியேறிய ஜெபமணி மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊடகவியலாளர் ஆசைத்தம்பி ஒருங்கிணைத்து கேள்விகளை கேட்டபடி இருந்தார்..

அப்போது, “ஒவ்வொருவரையும் மிக மோசமாக உடல், மன ரீதியாக சித்ரவதை செய்துதான் பொய் வாக்குமூலம் வாங்கினீர்கள். கொடூரமாக வதை செய்து வாங்கிய வாக்கு மூலத்தால்தான் அவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்” என காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுசாமி வாதிட்டபடி இருந்தார்.

சி.பி.ஐ.யின் தலைமை புலனாய்வு விசாரணை அதிகாரி ரகோத்தமன் குறுக்கிட்டு, “அப்படியெல்லாம் நாங்கள் யாரையும் சித்ரவதை செய்யவேயில்லை. அப்படி செய்திருந்தால் கர்ப்பிணியான நளினி எப்படி நல்லபடியாக குழந்தை பெற்றெடுத்திருக்க முடியும்? சித்ரவதை செய்தோம் என்பது அபாண்டாம்’‘ என்று மறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது நெறியாளரான ஆசைத்தம்பி, “சார், ஒவ்வொருவரையும் சித்ரவதை செய்துதான் வாக்குமூலம் வாங்கினீர்கள் என திருச்சி வேலுசாமி சொல்கிறார். அப்படி யாரையும் சித்ரவதை செய்யவேயில்லை. அவர்களாக மனமுவந்துதான் வாக்குமூலம் கொடுத்தார்கள் என தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன் சொல்கிறார். நீங்கள் தமிழ்நாடு போலீஸில் இருந்து சி.பி.ஐ.க்கு டெபுடேஷனில் அந்த வழக்கிற்காக போனீர்கள். என்ன நடந்தது என நீங்கள் சொல்லுங்கள்” என Jebamani Mohanraj பார்த்து கேட்கிறார்.

“ரகோத்தமன் சொல்வதெல்லாம் சும்மா. அப்படியெல்லாம் தானாக யாரும் வாக்குமூலம் கொடுத்துவிடவில்லை. எங்கள் வேலையே பிடித்து வருபவரை அடித்து நொறுக்குவதுதான். தோலை உரிப்பதுதான். சித்ரவதை செய்வதுதான். அப்படி ஒரு மோசமான சித்ரவதை நடக்கும். அடிஉதை வாங்காதவர்கள் யாருமில்லை” என உண்மையை ஒப்புக்கொண்டு சொல்ல சொல்ல,….

தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமனுக்கு ஏகக் கோபம். படீரென்று கோபம் வெடிக்க, “ஆமாம், உங்களைப் பற்றி தெரியாதா…? உங்க யோக்கியத்தை சொல்லவா? நீங்கதானே திருச்சியில குண்டு சாந்தனை போட்டுத் தள்ளினீங்க. சுட்டுக் கொன்றீர்கள். அது யோக்கியமா?” என்று பதிலுக்கு Jebamani Mohanraj-ஐ நோக்கி குற்றம் சாட்டினார். ஆவேசமாக…

“அட என்ன சார். என்னை இப்படி போட்டுக் கொடுத்துட்டீங்க” என்று அலறினார் மோகன்ராஜ்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. திருச்சி வேலுசாமிக்கும் அதிர்ச்சி..

கவனித்துக் கொண்டிருந்த நான் பேட்டி முடிந்த பிறகு திருச்சி வேலுசாமி அவர்களிடம் “என்ன சார். ஏதேதோ பேசிக் கொண்டீர்கள்?” என விசாரித்தேன்.

“அதை ஏன் கேக்குறீங்க. எனக்கே அதிர்ச்சியா இருக்கு. பேட்டி முடிஞ்ச பிறகு ‘என்ன சார் உண்மையை இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே’ன்னு கேட்டேன். அப்போதான் மேலும் ஒரு அதிர்ச்சிய சொன்னாங்க…

“இந்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி குண்டு சாந்தன்தான். புதுக்கோட்டையில் வைத்து இரும்பொறை என்ற விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரை மடக்கிப் பிடிச்சோம். அவரிடம் விசாரிக்க, ஒரு டைரி சிக்கியது. அதில் சாந்தன் என்கிற நபர் அடிக்கடி கடிதம் எழுதியதும் சிக்கியது. அவரை குண்டு சாந்தன் என்றும் சொல்வார்கள். அவர்தான் முக்கிய நபர் என்பதால் தேடினோம். இரும்பொறையை எவ்வளவு அடித்து உதைத்தும் ‘குண்டு சாந்தனை நான் நேரில் பார்த்ததே இல்லை. கடிதம் எழுதுவார். இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதை தவிர்த்து நேரில் பார்த்ததில்லை’என்று கூறுவிட்டார். எங்களுக்கும் குண்டு சாந்தன் பற்றிய தகவல் கிடைக்கல.

“அப்போதான் சாந்தன் என்கிற பெயரில் ஒருத்தர் வந்து தங்கியிருக்கிற தகவல் கிடைச்சது. அந்த (சின்ன) சாந்தன் வெளிநாட்டுக்கு போய் வேலை தேட முறைப்படி விசா வாங்கி விமானத்தில வந்திருந்தவர். கஸ்டம்ஸ்ல இருந்துதான் அந்த சாந்தன் என்கிற பெயர் கிடைச்சது. உடனே அவரை பிடிச்சு வாக்குமூலம் வாங்கி குற்றவாளியா சேர்த்துட்டோம். எல்லாருக்கும் 1998-ல் தண்டனையும் வாங்கிக் கொடுத்துட்டோம்.

“அதுக்கு பிறகுதான் எட்டு வருஷம் கழிச்சி உண்மையான குண்டு சாந்தன் திருச்சியில தங்கியிருக்கிறதா தகவல் கிடைச்சது. இது வெளிய தெரிஞ்சா சி.பி.ஐ.க்கு பெரிய அவமானமா போயிடும். உலகமே சிரிக்கும். என்ன பண்றதுன்னு, இதோ இருக்காரே, ரகோத்தமன், அவர்தான் போட்டுத் தள்ளிட சொன்னார். அதன்படி தான் நான் சுட்டுக்கொன்னுட்டேன். அந்த பாவம்தான் என்னவோ என் கை இப்படி முடங்கிப்போச்சு” என்று ஜெபமணி மோகன்ராஜ் வெள்ளந்தியா உண்மைய எல்லாம் சொல்றாரு. கூட இருந்த ரகோத்தமனும், அதை கேட்டுட்டு, ‘என்ன பண்றது’ன்னு பேசாம நிக்கிறாரு.

“இதைக் கேட்டதும் என் ரத்தமெல்லாம் கொதிச்சுடுச்சி. ‘அடப்பாவிங்களா… எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கீங்க தெரியுமா? ஒரு தப்பும் பண்ணாத சின்ன சாந்தன் 24 வருஷமா ஜெயில்ல இருக்கானேப்பா’ என்று கேட்டேன். அவர்கள் ஏதுமே பேசவில்லை” என்று பேட்டிக்கு பின்பு நடந்ததைச் சொல்லி ஆதங்கப்பட்டார் திருச்சி வேலுசாமி

இந்த விஷயம் எப்போது வெளிவருகிறது.? 24 வருஷம் கழித்து வெளிவருகிறது. அதுவும் ஒரு ஊடகத்தில் இரண்டு தரப்பும் உணர்ச்சி வசப்பட, ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுத்துக் கொண்டபோது…!

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான்.

நேர்மைக்கு உதாரணமாய், எளிமையாய் வாழ்ந்து மறைந்த நெல்லை ஜெபமணியின் மகன் Jebamani Mohanraj என்ன செய்திருக்க வேண்டும்?.

நீதிமன்றத்தை அணுகி, ‘இப்படி ஒரு அநீதி நடந்திருக்கிறது. இதை விசாரிக்கணும். அப்பாவி சாந்தனை விடுவிக்க வேண்டும். மற்ற குற்றவாளிகளும் இப்படித்தான் சேர்க்கப்பட்டார்கள்’ என்றல்லவா போயிருக்க வேண்டும்…?

அதை விட்டுவிட்டு, “ஒரு தேச பக்தன் தன் தேசத்தின் மானம் காக்க துணிச்சலாக கடமை ஆற்றிய சரித்திர நிகழ்வு” என்று மார்தட்டிக் கொள்வது எவ்வளவு பெரிய கேவலம். அநீதியை விட்டு நீதியை கொன்றது தேசபக்த செயலா.?  உண்மை குற்றவாளி கிடைத்த பிறகும் அவரை சுட்டுக்கொன்று விட்டு, அப்பாவிக்கு சிறை தண்டனை பெற்றுக் கொடுத்தது எந்த தேசப் பற்று ஐயா.?

கீழ்தரமான செயலை செய்துவிட்டு, அதுதான் தேசப்பற்று என்றால் அந்த தேசப்பற்று …………… சமானம்தானே ஐயா?

நேர்மையாளன் வயிற்றில் பிறந்த பிள்ளைதானே நீங்கள்? உயிர் போனாலும் பரவாயில்லை என்று இந்த உண்மையை உரக்கச் சொல்லி நீதிமன்ற கதவை உடைத்திருக்க வேண்டாமா ஐயா?

உங்களின் தந்தை நெல்லை ஜெபமணியின் ஆன்மாவாவது இந்த கொலை பாதகத்தை மன்னிக்குமா?

ஜெய்ஹிந்த்.