“ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் சென்ற” பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது!

கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம், பிரதிபா பாட்டில் போன்ற குடியரசு தலைவர்களைப் போல் இல்லாது, மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை ஈவு இரக்கம் இல்லாமல் நிராகரித்து, அவர்களைத் தூக்கிலிட அனுமதித்து, ‘கருணை இல்லாத குடியரசு தலைவர்’ என்ற அவப்பெயருடன் ஓய்வு பெற்றவரும், காஞ்சி சங்கர மடத்து பக்தருமான பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்குச் சென்றதாலேயே பாரத ரத்னா விருதுக்கு பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் பொதுச்செயலாளர் டானிஷ் அலி கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிரணாப் முகர்ஜிக்கு முன்னதாக ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராம் ஆகியோருக்கே இந்த விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்குச் சென்றதாலேயே பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பிரணாப் முகர்ஜிக்கும் பிரதமர் மோடிக்கும் பொதுவான தொழிலதிபர் நண்பர்கள் இருக்கின்றனர். இது இந்தத் தேர்வில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய அவதாரமான ஜனசங்கம் கட்சியின் தலைவராக இருந்த நானாஜி தேஷ்முக், அசாம் இசைக் கலைஞர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.