அ.தி.மு.க.வுக்கு உள்ளே ஜல்லிக்கட்டு ஆரம்பம்: முன்னாள் அமைச்சர் போர்க்கொடி!

அதிமுகவை கைப்பற்ற சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்ளிட்டோர் சதி செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற தமிழர் கலை இலக்கிய பொங்கல் விழாவின்போது பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், “இப்போதும் எங்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. ஆனாலும் உயிரையும் துச்சமென மதித்து அதிமுகவை கட்டிக்காக்கப் பாடுபட்டு வருகிறோம். இப்போது சிலர் கட்சியினரை குழப்ப முயற்சி செய்கின்றனர். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து அதிமுகவைக் காப்பாற்றி, தமிழகத்தில் நல்லாட்சி தொடர பாடுபடுவோம்.

முன்பு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அதிமுகவில் இருந்த இரண்டு அணிகளையும் இணைத்து, முடங்கிப் போன இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு எடுத்ததும் நடராஜன் தான்.” என பேசியிருந்தார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தில் செய்தியாளர்களை இன்று (திங்கள்கிழமை) சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “பொங்கல் விழாவின்போது, அதிமுக-வுக்கு சின்னம் வாங்கியதே நடராஜன் தான் என்பது போல் திவாகரன் பேசியிருக்கிறார். இது கண்டனத்துக்குரியது.

திவாகரன், நடராஜன் ஆகியோர் கட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் இது போன்ற சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது அதிமுக தொண்டர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கட்சி பொதுச் செயலாளர் கண்டித்து கட்சியை வழிநடத்த வேண்டும்.

திவாகரன் தற்போது கட்சியில் இல்லை. இவர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். தலைமைக்கு விசுவாசம் இல்லாதவர். கட்சியில் இல்லாத ஒருவர் இயக்கத்தை காப்பாற்றுவேன் என்றெல்லாம் பேசி அதிகார மையத்தை உருவாக்க முயற்சிக்கிறார். இது எனது கருத்து மட்டுமல்ல. ஒட்டுமொத்த அதிமுகவினரின் கருத்து. திவாகரன் தன்னை கட்சியில் நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் சிறப்பாக செயல்பட்டு வரும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு சிலர் தொந்தரவு கொடுக்கிறார்கள். எனவே இது போன்ற பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.