திமுக இளைஞர் அணியின் புதிய செயலாளர் முன்னாள் அமைச்சர் சாமிநாதன்!

திமுக இளைஞர் அணியின் புதிய செயலாளராக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டிருப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக இளைஞர் அணிச் செயலாளராக கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின், கழகச் செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதால், அவருக்கு பதிலாக, கழக சட்டதிட்ட விதி: 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக மு.பெ.சாமிநாதன், இளைஞர் அணி இணைச் செயலாளராக சுபா.சந்திரசேகர் ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.

“ஏற்கனவே நியமிக்கப்பட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் மேலே அறிவிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஸ்டாலின் வகித்துவந்த திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவி தற்போது சாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.