“ஜூன் வரை சசிகலாவை எதிர்க்க வேண்டாம்”: தமிழக பாஜகவுக்கு அமித்ஷா அறிவுரை – ஏன்?

“வரும் ஜூன் மாதம் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது அதிமுகவை எதிர்த்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதிமுக செயல்படும். அது பாஜகவுக்கு எதிரானதாக இருக்கும். 2017 ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்திய குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் ஸ்வயம் சேவகராக (ஆர்.எஸ்.எஸ். தொண்டராக) இருக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். எனவே, அதுவரை அதிமுகவையோ, சசிகலாவையோ எதிர்க்க வேண்டாம்” என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தமிழக பாஜக தலைவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து tamil.thehindu.com-ல் எம்.சரவணன் எழுதியிருப்பதாவது:

முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அன்றிரவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். கடந்த 29ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். 31ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் அவர் முறைப்படி பதவியேற்றார்.

50 எம்.பி.க்கள், 135 எம்.எல்.ஏ.க்களுடன் இந்தியாவின் 3-வது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. எனவே, அக்கட்சியில் ஏற்பட்டுள்ள தலைமை மாற்றத்தை பாஜக கூர்ந்து கவனித்து வருகிறது. மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தாலும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் பாஜக பெரும் சிக்கலைச் சந்தித்து வருகிறது.

மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ், நவீன் பட்நாயக், லாலு பிரசாத் யாதவ், கருணாநிதி ஆகியோர் பாஜகவுக்கு எதிராக இருப்பதால், 50 எம்.பி.க்களைக் கொண்ட அதிமுகவை பகைத்துக் கொள்ள பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

சிவசேனா தவிர மற்ற கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயங்கிய நிலையில், 1998-ல் பாஜகவுடன் துணிந்து கூட்டணி வைத்தவர் ஜெயலலிதா. 23 கட்சிகளின் ஆதரவோடு வாஜ்பாய் ஆட்சி அமைக்க ஜெயலலிதாவின் இந்த முடிவே காரணமாக இருந்தது. 13 மாதங்களில் வாஜ்பாய் அரசை கவிழ்த்தாலும் அதிமுக – பாஜக உறவில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. பாஜக – திமுக கூட்டணி இருந்த 1999 – 2004 காலகட்டத்தில் காங்கிரஸையும், அதன் தலைவர் சோனியா காந்தியையும் கடுமையாக விமர்சித்தார் ஜெயலலிதா.

2004  மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு தனது அரசியல் நிலைப்பாட்டை ஜெயலலிதா மாற்றிக்கொண்டார். அத்வானி, மோடி ஆகியோருடன் அவர் நெருக்கமான நட்பை பேணிக் காத்தாலும், அக்கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க அவர் விரும்பவில்லை. கடந்த 2014 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது.

தமிழகத்தில் பாஜகவுக்கு 2 சதவீத வாக்குகள் மட்டுமே இருக்கும் நிலையில், அதனை நம்பி சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது இடத்துக்கு சசிகலா வருவதை பாஜக விரும்பவில்லை என செய்திகள் வெளியாகின. ஆனால், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதுடன் முதல்வராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ”தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் யாராக இருந்தாலும் அவருக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும். ஆதாரங்கள் இல்லாமல் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பக் கூடாது. ஜெயலலிதாவுக்கு அப்போலோ, டெல்லி எய்ம்ஸ், லண்டன் டாக்டர்கள் சிறப்பான சிகிச்சை அளித்தனர். டாக்டர்களை நானே நேரில் விசாரித்தேன்” என்றார்.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒரு ‘தி இந்து’விடம் கூறியதாவது:

திமுகவுக்கும், கருணாநிதிக்கும் எதிரான வாக்குகளே அதிமுகவின் பலம். திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்துத்துவ ஆதரவாளர்களும் அதிமுகவுக்கே வாக்களித்து வந்தனர். ஜெயலலிதா இருந்தவரை இதுதான் நடந்தது. ஆனால், இனி இப்படி நடக்க வாய்ப்பில்லை. எனவே, அதிமுக வாக்குகளை பாஜக பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதே எங்கள் திட்டமாக உள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினோம். வரும் ஜூன் மாதம் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இப்போது அதிமுகவை எதிர்த்தால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதிமுக செயல்படும். அது பாஜகவுக்கு எதிரானதாக இருக்கும். 2017 ஜூன் மாதத்துக்குப் பிறகு குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் ஸ்வயம் சேவகராக (ஆர்.எஸ்.எஸ். தொண்டர்) இருக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். எனவே, அதுவரை அதிமுகவையோ, சசிகலாவையோ எதிர்க்க வேண்டாம் என அமித்ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய செயற்குழுவில் விவாதம்

அதனைத் தொடர்ந்தே தமிழக பாஜக தலைவர்கள் சசிகலாவை எதிர்ப்பதை தவிர்த்து வருகின்றனர். சசிகலா பொதுச்செயலாளர் ஆனதும் தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசையும், பொன்.ராதாகிருஷ்ணனும் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்தனர். இருவரும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரமும் விவாதிக்கப்படவுள்ளது.

0a1d