பஞ்சாப் தேர்தலில் சித்து போட்டி: கட்சியில் சேரும் முன்பே தொகுதி ஒதுக்கியது காங்கிரஸ்!

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். கட்சியில் அவர் முறைப்படி சேருவதற்கு முன்பாகவே அவருக்கு தொகுதி ஒதுக்கி அறிவித்துள்ளது காங்கிரஸ்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவை, அவரது பிரபலம் காரணமாக வளைத்துப் போட்டது பாரதிய ஜனதா கட்சி. 2004 முதல் 2014 வரை அவர் பா.ஜ.க. எம்.பி.யாக இருந்தார். ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் அவரது அம்ருத்ஸர் தொகுதியை தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லிக்கு பாஜக ஒதுக்கிவிட்டது. அப்போது முதல் பாஜக மீது அதிருப்தியாக இருந்து வந்தார் சித்து.

அவரை சமாதானப்படுத்துவதற்காக மத்திய பாஜக அரசு சிபாரிசு செய்ததன் பேரில், ஏப்ரல் 28-ல் குடியரசு தலைவரால் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அடுத்து மத்திய அமைச்சரவையிலும் சித்துவிற்கு இடம் கிடைக்கும் என பேசப்பட்டது. ஆனால் பஞ்சாப் முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்ட சித்து, கடந்த ஜூலை 18-ல் பாஜகவைவிட்டு வெளியேறியதுடன், எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.

தற்போது காங்கிரஸ் கட்சியில் சேருவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார்.

பாஜக எம்எல்ஏவாக இருந்த சித்துவின் மனைவி டாக்டர். நவ்ஜோத் கவுர் சித்து, தன் பதவியை ராஜினாமா செய்து ஏற்கனவே காங்கிரஸில் இணைந்து விட்டார். இந்த நிலையில் இன்னும் தன் கட்சியில் சேராத சித்துவிற்கு காங்கிரஸ் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்கியுள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாபின் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சரான கேப்டன் அம்ரேந்தர் சிங் கூறுகையில், “சித்துவிற்கு அவரது மனைவி நவ்ஜோத் கவுர் போட்டியிட்ட அம்ருத்ஸர் கிழக்கு தொகுதி காங்கிரஸ் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார்” எனத் தெரிவித்தார்.

சித்துவை துணை முதல்வராக முன்னிறுத்தவும் காங்கிரஸ் யோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 4-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக ஆதரவுடன் சிரோமணி அகாலி தளம் ஆட்சி நடத்தி வருகிறது..