“அக்.27க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும்!” – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27க்குப் பிறகு தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ”வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த புயல் மியான்மர் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மழை பெற வாய்ப்பில்லை.

இந்தப் புயல் வலுவிழந்தபின், எஞ்சியுள்ள சில இடங்களில் தென்மேற்கு பருவமழை பின்வாங்கிய பிறகு, தமிழகத்தில் காற்றின் ஈரப்பதம், காற்று வீசும் திசை ஆகியவை மாறும். அதன் பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்கும். அதனால் தமிழகத்தில் இம்மாதம் 27ஆம் தேதிக்குப் பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக, ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.