நாறும் அமெரிக்க தேர்தல்: டிரம்ப் மீது ஆபாச பட நடிகை பாலியல் புகார்!

நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகிறார்கள்.

டொனால்டு டிரம்ப் தேர்தல் களத்தில் குதித்ததிலிருந்து அவர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இதுவரை 10  பெண்கள் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்து, அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது 11-வது பெண்ணாக பிரபல கலவியல் (செக்ஸ்) பட நடிகை ஜெஸிகா டிரேக், டிரம்ப் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை ஜெஸிகா டிரேக் கூறியதாவது:-

சில ஆண்டுகளுக்கு முன் நட்சத்திர ஹோட்டலில் நடந்த  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தேன். அங்கு நான் லிப்டில் சென்றபோது, என்னுடன் டிரம்ப் வந்தார். திடீரென என்னை கட்டித் தழுவி, முத்தமும் கொடுத்தார். எனக்கு என்னச் செய்வதென்றே தெரியவில்லை.

இதையடுத்து, எனது அறைக்குச் சென்றேன். அங்கே டிரம்ப் உதவியாளர் என்று கூறி, ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். 10 ஆயிரம் டாலர்கள் தருவதாகவும், உடனே டிரம்ப் அறைக்கு வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், நான் மறுத்துவிட்டேன். சில நிமிடங்களில் டொனால்டு டிரம்ப் நேரில் வந்து, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறி, மிகவும் வற்புறுத்தினார். நான் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே, பின்னர் இரவு உணவு மட்டும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படி வற்புறுத்தினார். அதற்கு மட்டும் நான் சம்மதம் தெரிவித்தேன்.

இவ்வாறு ஜெஸிகா டிரேக் கூறினார்.